பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு: பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

By செய்திப்பிரிவு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த 13 முதல் 22-ம் தேதி வரை திருமொழித் திருநாள் (பகல் பத்து) உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 10 நாட்களும் மூலவர் வேங்கட கிருஷ்ணன் பல்வேறு திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, திருவாய்மொழித் திருநாள் (இராப்பத்து) உற்சவம் 23-ம்தேதி (நேற்று) தொடங்கியது.

பகல் பத்து முடிந்து இராப்பத்து தொடங்கிய ஏகாதசி நாளான நேற்று பரமபத வாசல் ( சொர்க்க வாசல் ) திறப்பு வைபவம் நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விஸ்வரூப தரிசனம் நடந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு முத்தங்கி சேவை நடைபெற்றது. பின்னர் உற்சவர் பார்த்தசாரதிக்கு சிறப்பு அலங்காரம், வைர அங்கி சேவை நடந்தது.

இதைத் தொடர்ந்து, தேவி, பூதேவி சமேதராக பார்த்தசாரதி பெருமாள் வைர அங்கியோடு மகா மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் 4.15 மணி அளவில் உபயநாச்சியர்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி, உள் பிரகாரத்தை வலம் வந்தார். அதைத் தொடர்ந்து, அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல்திறக்கப்பட்டது.

எதிரே சடகோபன் நம்மாழ்வாருக்கு அருளியவாறே, சொர்க்க வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள், ‘‘கோவிந்தா, கோவிந்தா’’ என பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். பின்னர், உற்சவர் சொர்க்க வாசலை கடந்து திருவாய் மொழி மண்டபத்தில் புண்ணியகோடி விமானத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அறநிலைய துறை சார்பில் கோயிலை சுற்றிலும் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்களும் தரிசிக்கும் விதமாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுநேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

காலை 6 மணி முதல், பெருமாளை தரிசிக்க கிழக்கு கோபுரம் வழியாக பொது தரிசன வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேரம் ஆக ஆக, கூட்டம் அலைமோதியது. போலீஸார், கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்ல அனுமதித்தனர். தொடர்ச்சியாக இரவு 10 மணி வரை பொது தரிசனம் நடைபெற்றது. பின்னர், இரவு 11.30 மணிக்கு உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடந்தது.

உள் படங்கள்: எஸ்.சத்தியசீவன்

பார்த்தசாரதி கோயிலில் நேற்று தொடங்கிய இராப்பத்து உற்சவம் ஜன.2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது, உற்சவர் பார்த்தசாரதி தினமும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அருள்பாலிப்பார். சொர்க்க வாசல் திறப்பு காரணமாக, பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி, வட பழனி ஆதி மூலப் பெருமாள், திருநீர்மலை ரங்கநாதர், சிந்தாதிரிப்பேட்டை ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள், தியாக ராய நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE