ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்வைகுண்ட ஏகாதசி பெருவிழாகடந்த 12-ம் தேதி திருநெடுந்தாண் டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ம் தேதி முதல் பகல்பத்து திருநாள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிநாளை (டிச.23) அதிகாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்குமூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, கோயில் பிரகாரங்கள் வழியாக வந்து, அதிகாலை 4 மணிக்குதிறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

சொர்க்கவாசல் திறப்பு தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம்,காவல் துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளும் ஒருங்கிணைந்து பக்தர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை செய்துள்ளன.

இன்று மோகினி அலங்காரம்: பகல்பத்து வைபவத்தின் கடைசி நாளான இன்று காலை6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை சென்றடைவார். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு ஆரியபடாள் வாசல் சென்று, திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருட மண்டபத்தை சேருவார்.

அங்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி, இரவு 8.00 மணிக்குப் புறப்பட்டு, 8.30 மணிக்கு மூலஸ் தானம் சென்றடைவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE