அ
றியாமை நம்மைக் கட்டி வைத்திருக்கிறது; அறியாமையிலிருந்து முளைத்த ஆசை நம்மைக் கட்டி வைத்திருக்கிறது; ஆசை காட்டி ஆசை காட்டியே அதிகாரம் நம்மைக் கட்டி வைத்திருக்கிறது. இப்படி, வாழ்ந்திருக்கும் காலம் முழுக்க ஏதேனும் ஒன்றால் கட்டுண்டே கிடப்பது நமக்கு இன்பம் தருவதா? கட்டறுப்பதல்லவா இன்பம் தருவது? கட்டறுத்து விடுவதுதான் கல்வி. கல்வியின் பயன் காசுண்டாக்குவதற்கு மட்டுமல்ல; கட்டறுப்பது. கல்வி சாதியைக் கட்டறுக்கும்; சமயத்தைக் கட்டறுக்கும்; அதிகாரத்தைக் கட்டறுக்கும்; ஆசையைக் கட்டறுக்கும்; அறியாமையைக் கட்டறுக்கும். இவற்றை வழிமொழிகிறார் திருமூலர்.
துணையதுவாய் வரும் தூயநல் சோதி;
துணையதுவாய் வரும் தூயநல் சொல்லாம்;
துணையதுவாய் வரும் தூயநல் கந்தம்;
துணையதுவாய் வரும் தூயநல் கல்வியே.
(திருமந்திரம் 294)
இருள் அண்டும்போது ஒளியாக வருவதும், வாதுரைக்கும்போது சொல்லாக வருவதும், பழைய வாசனைகள் கிறுகிறுக்க வைக்கும்போது அவற்றைத் தேய வைக்கும் நறுமணமாக வருவதும், எப்போதும் துணையாக வருவதும் தூய நற்கல்வியே என்கிறார்.
கல்வி என்பது அனைவருக்குமான தகுதி என்றாலும் ஆள்கிறவனுக்கு மிகக் கட்டாயமான, இன்றியாமையாத தகுதி; எனவே, கல்வியைப் பொருளதிகாரத்தில், அரசியலில் வைத்திருக்கிறது வள்ளுவம்.
திருமூலர் சொல்கிறார்:
கல்லா அரசனும் காலனும் நேர்ஒப்பர்;
கல்லா அரசனில் காலன் மிகநல்லன்;
கல்லா அரசன் அறம்ஓரான்; கொல்என்பான்;
நல்லாரைக் காலன் நணுகி நில்லானே
(திருமந்திரம் 238)
கற்று அறியாத ஆட்சியாளனும் காலனும் ஒரே தன்மை உடையவர்கள். உயிரை வாங்கிவிடுவார்கள். சொல்லப்போனால் கற்று அறியாத அரசனைக் காட்டிலும் காலன் மிகவும் நல்லவன். கற்று அறியாத அரசனுக்கு அறம் என்றால் என்னவென்று தெரியாது; யாராக இருந்தாலும் வதைத்துக் கொல் என்பான். காலனை அப்படிச் சொல்லிவிட முடியாது.
உண்மையை அறியாத ஆட்சியாளன்
இங்கே, கற்று அறியாத ஆட்சியாளன் என்பதற்குப் பள்ளிக் கல்வி கற்காத ஆட்சியாளன் என்று பொருள் கொள்ள வேண்டாம்; அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய இவற்றின் உண்மையை அறியாத ஆட்சியாளன் என்று கொள்க.
இப்படியெல்லாம் பொதுவாகக் கல்வியைப் பற்றித் திருமூலர் சில சொன்னாலும், திருமூலர் பேசும் கல்வி, திருக்குறளும் நாலடியும் பேசுவதுபோலப் பொதுநிலைக் கல்வி அன்று; சைவ சமயம் சார்ந்த சிறப்புக் கல்வி; சிவக் கல்வி. ‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்பது நம்மாழ்வார் திருவாய்மொழியானால், ‘கற்பார் சிவபெருமானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்பது திருமூலர் திருமந்திரம்.
குறிப்பு அறிந்தேன் உடல் உயிர்அது கூடி;
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை;
மறிப்புஅறியாது வந்து உள்ளம் புகுந்தான்;
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.
(திருமந்திரம் 290)
உயிர் ஏன் உடலுக்குள் வந்தது? என்ற கேள்வி எழுந்தபோது நான் கற்றிருந்த அடிப்படைக் கல்வி அதற்கு உடனடி விடை தராமல் என் நெஞ்சைக் கறித்தது; எதிர்க்களித்தது. அதற்கு மசங்காமல் விசாரிக்கத் தொடங்கினேன். நிலையானது எது, நிலையற்றது எது, எப்போதும் துணையாக என்னோடு இருப்பது எது, எப்போது வேண்டுமானாலும் என்னைக் கைவிட்டுவிடுவது எது, பற்றிக்கொள்ளத் தகுந்தது எது, பற்றிக்கொள்ளத் தகாதது எது என்று தெளிவாகத் தொடங்கியது. இந்த அறிவை ஆய்ந்து பெற்று அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தான் உயிர் உடலுக்குள் வந்தது என்னும் குறிப்பை இந்தத் தொடர் விசாரணையின்மூலம் நான் அறிந்தேன்.
தேவர் பிரானாகிய இறைவன் என்னோடு இருப்பதும், எனக்குள்ளே இருப்பதும் விளங்கத் தொடங்கியது. திரும்பிப் போகும் திட்டம் இல்லாது என் உள்ளத்துக்குள் புகுந்துகொண்டான் இறைவன். நாடு, நகரம், கோயில், குளங்கள் என்று நான் தேடித் திரிந்த பரம்பொருளை எனக்குள்ளேயே காட்டிய சிவக் கல்விதான் உண்மையான கல்வி. என் நெஞ்சைக் கறிக்காத கல்வி. குமட்டிக்கொண்டு எதிர்க்களிக்காத கல்வி என்று கல்விக்குச் சமய வண்ணம் பூசுகிறார் திருமூலர்.
கற்றபின் பற்றல்
இந்த நிலையில், சிவத்தைப் பற்றிக்கொள்ளாதவர்கள் எண்ணும் எழுத்தும் கற்றிருந்தாலும் கல்லாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். எண்ணும் எழுத்தும் கல்லாத வேடராகிய கண்ணப்பரைப் போன்றவர்கள் சிவத்தைப் பற்றிக்கொண்டுவிட்டதால் கற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். பற்றிக்கொள்ள விரும்புவது எது என்பதைப் பொறுத்துக் கல்வி கல்லாமை ஆகிறது; கல்லாமை கல்வியும் ஆகிறது. பற்றுவது சரிதான். ஆனால், கற்றபின் வந்த தெளிவினால் பற்றுவதா, அல்லது பற்றுவது என்று முன்முடிவினால் கற்பதா?
கற்பக் கழிமடம் அஃகும்; மடம் அஃகப்
புற்கம் தீர்ந்து இவ்வுலகின் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்
தத்துவமான நெறி படரும்; அந்நெறி
இப்பால் உலகத்து இசைநிறீஇ உப்பால்
உயர்ந்த உலகம் புகும்.
(நான்மணிக் கடிகை, 30)
கற்றால் அறியாமை நீங்கும்; அறியாமை நீங்கினால் இவ்வுலகின் தன்மை என்ன என்பது விளங்கும்; அது விளங்கினால் உண்மை என்ன என்ற தேடுதல் தொடங்கும்; அது தொடங்கினால் அறிவாளன் என்ற புகழை இந்த உலகில் நிறுத்தி, உயர்ந்த உலகத்துக்குள் புகலாம்.
எனவே, கற்றல் முதலில். பற்றல் பின்னால். வண்டிக்கு முன்னால் மாட்டைப் பூட்டுவதுதான் முறை.
(தெளிவோம் தொடர்ந்து)
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago