துளி சமுத்திரம் சூபி 13: தன்னை இழப்பதில் செழிப்பதே வாழ்வு

By முகமது ஹுசைன்

தனக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்படி ஒருவர் துன்னூன் மிஸ்ரியிடம் கோரினார். ‘நான் சாப்பிடுவதால் உன் வயிறு நிரம்புமா?’ என்று அந்த நபரிடம் பட்டெனக் கேட்டார் துன்னூன் மிஸ்ரி. இத்தகைய பாசாங்கற்ற நேர்மைதான் துன்னூன் மிஸ்ரியை மிகப் பெரிய சூஃபி ஞானியாக்கியது.

துன்னூன் மிஸ்ரி 796-ம் ஆண்டு எகிப்தில் நைல் நதிக் கரையோரத்தில் இருந்த அக்மிம் எனும் சிற்றூரில் பிறந்தார். சிறு வயது முதலே இவர் மறைஞான வழிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ரசவாதம், மருத்துவம், கிரேக்கத் தத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அவருடைய தேடல் எதுவும் திருப்தியடையச் செய்யவில்லை. அது அவரை கெய்ரோவில் குடியேற வைத்து, அங்கே மெய்ஞானத்தைக் கற்க வைத்தது. அவர் தேடலை எதுவும் பூர்த்தி செய்யவில்லை. எனவே தன் தேடலை நீண்ட நெடிய பயணங்களின் வாயிலாக அடைய முயன்றார். கெய்ரோவிலிருந்து மெக்ரெப், அண்டியோச், ஏமென் எனச் சுற்றித் திரிந்து பாக்தாத்தை அடைந்து மெய்ஞானக் கடலின் ஆழம் பார்க்க முயற்சித்தார்.

சாமானியர்களிடம் ஈடுபாடு

துன்னூன் மிஸ்ரி, தன் வாழ்வின் ஒருபோதும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையிலிருந்து தேடலைத் தொடரவில்லை. தனக்கு எதுவும் தெரியாது என்ற நிலையிலிருந்தே தேடலைத் தொடர்ந்தார். இந்தத் தன்மை அவர் அறிவின் எல்லைகளை விரித்துக்கொண்டே சென்றது. தான் சந்தித்த அனைவரிடமிருந்தும் தனக்குத் தெரியாதவற்றை அறிந்துகொள்ள முயன்றார். மிகப் பெரிய ஞானிகளிடமிருந்து எவ்வளவு அக்கறையுடன் கற்பாரோ அதே அளவு அக்கறையுடன் சாமானியர்களிடமிருந்தும் கற்றார். அவர்கள் உதிர்க்கும் சொற்களிலிருந்து கற்காமல், அவர்களின் செயல்களிலிருந்து கற்றார். இன்னும் சொல்லப் போனால் சிறுவயதில் அவர் பார்த்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் ஈகைக் குணம்தான் அவருடைய இந்த மெய்ஞானத் தேடலின் விதை.

எவ்வளவுதான் கற்றாலும் அதனால் அவரது தேடலின் வேட்கையை அணைக்க முடியவில்லை. கற்பதன் அளவிற்கு ஏற்றவண்ணம் அவரது தேடலின் அளவும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒருமுறை பாலைவனத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு முதியவரைச் சந்தித்தார். அந்த முதியவர் சிரித்தபடியே இவரை அருகில் அழைத்தார். அருகில் சென்ற இவரை நோக்கி என்ன தேடிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். எதைத் தேடுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்வதற்காகவே இப்படி அலைந்து திரிகிறேன் என்று சொன்னார்.

உறைந்து போன துன்னூன் மிஸ்ரி

அந்த முதியவர் சிறுப் புன்னகையுடன் இவரைப் பார்த்து “உனக்குத் தெரிந்ததைக் கொண்டு உன் எளியக் கடமைகளை நிறைவேற்றி வாழ்வதற்குப் பதிலாக உனக்குத் தெரியாததைக் கொண்டு தெரியாததைத் தேடி திரிகிறாய். ஆனால் உனக்குத் தெரிந்தவை என்று நீ நினைப்பவை கூட அவற்றுக்கு முற்றிலும் மாறானதாக இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்” என்று சொல்லியவாறு எழுந்து சென்றார். அதைக் கேட்ட துன்னூன் மிஸ்ரி தன்னிலை மறந்து அங்கே அப்படியே உறைந்துவிட்டார். எத்தனை நாட்கள் அவ்வாறு இருந்தார் என்று அவருக்குத் தெரியாது. அந்த முதியவரின் வார்த்தைகள் அளித்த ஒளியைக்கொண்டு தன் கடந்த கால வாழ்வை ஊடுருவிப் பார்த்தார்.

“எதுவென்று தெரியாமலே அதை அங்கும் இங்கும் தேடினேன். சல்லடைப் போட்டுத் தேடினேன். சான்றோரோ சாமானியரோ அனைவரிடமும் கற்றேன். அதனால் கொழுத்துச் செழித்த அறிவோ அகோரப் பசி கொண்டு இன்னும் வேண்டுமென்றது. நான் மீண்டும் மீண்டும் தேடிக் கற்றேன். ஆனால், கற்றதும் புரியவில்லை, தேடியதும் தெரியவில்லை. எதுவென்றே தெரியாதே? அப்படியிருக்க, தேடியது முன் வந்தால் மட்டும் எனக்குத் தெரிந்து விடுமா? அல்லது தெரிந்தால் மட்டும் தான் அது எனக்குப் புரிந்துவிடுமா? தேடலில் வளர்வது அகங்காரத்தை வளர்க்கும் உபயோகமற்ற அறிவு. தன்னை இழப்பதில் செழிப்பதே வாழ்வு” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு தனது தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன் பிறகு தேடலில் வாழ்வைத் தொலைப்பதை நிறுத்தித் தனிமையில் அமர்ந்து தன்னை இழக்கும் முயற்சியில் முழுவதும் மூழ்கினார். கடுமையான நோன்பிலும் இடைவிடாத பிரார்த்தனையிலும் அவரது நாட்கள் கழிந்தன. வெளியில் செல்வதை நிறுத்திக்கொண்டார். ஆனால் அவரைத் தேடி மக்கள் அலை அலையாய் வந்தனர். துன்னூன் மிஸ்ரிக்கு அது பிடிக்காததால், பெரும்பாலும் அமைதியாகவே இருப்பார். நிறைய தொல்லை கொடுத்தால் மட்டுமே அவர் உரையாற்றுவார்.

“என்னைப் பார்க்க வருவதால் உங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. உங்களின் விலை மதிப்பற்ற நேரம்தான் வீணாகக் கழியும். என்னிடம் நீங்கள் தெரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை. ஒருவேளை ஏதேனும் தெரிந்தால் அது உங்கள் அகங்காரத்தைத் தான் வளர்க்கும். நோயால் உடல் வலுவிழப்பது போன்று அகங்காரத்தால் மனம் வலுவிழக்கும். எப்படி நோயுற்ற உடலால் உணவின் ருசியை அறிய முடியாதோ அதே போன்று வலுவற்ற மனத்தால் வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியாது. எனவே என்னைப் பார்ப்பதற்கு பதில் உங்களைப் பார்க்கத் தொடங்குங்கள்” என்று சொல்லிக் கூட்டத்தைக் கலையச் செய்வார்.

மூன்று விதமான பயணங்கள்

829-ம் வருடம் அவர் இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராகச் செயல்பட்டாரெனத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு பாக்தாத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின்போது, ”நான் மூன்று விதமான பயணங்களை மேற்கொண்டேன். முதல் பயணம் சாமானியர்களும் ஞானிகளும் அறிந்தது. இரண்டாம் பயணம் சாமானியர்கள் அறியாதது, அது ஞானிகளுக்கு மட்டுமே தெரிந்தது. மூன்றாம் பயணம் சாமானியர்களும் ஞானிகளும் அறியாதது. அது என் எஜமானாருக்கும் மட்டுமே தெரிந்தது.” என்று அவரது வாழ்வில் அவர் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி அவர் ஆற்றிய உரை மன்னரின் ஆன்மாவுடன் நேரடியாகப் பேசியது.

மன்னர் உடனடியாக அவரை விடுதலைச் செய்து சகல மரியாதையுடன் கெய்ரோவுக்கு அனுப்பி வைத்தார். கெய்ரோவிற்கு கிளம்பும் முன் மன்னரை நோக்கி, “நாவால் பேசுபவர்களைவிடச் செயலால் பேசுபவர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள், நாவால் பேசுபவர்களைவிடக் குணத்தால் பேசுபவர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள், நாவால் பேசுபவர்களைவிட ஞானத்தால் பேசுபவர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள், உங்களைக் குற்றமற்றவர் என்று புகழ்பவர்களை உடன் வைத்துக்கொள்வதால் ஏதேனும் பலன் உங்களுக்கு உண்டா?” என்று கேட்டு அவரின் அகக் கண்களைத் திறந்ததுவிட்டார்.

கெய்ரோவில்தான் துன்னூன் மிஸ்ரி தன் இறுதி நாட்களைக் கழித்தார். அவர் மரணப் படுக்கையிலிருக்கும்போது, அவரது கடைசி ஆசை என்னவென்று ஒரு நண்பர் கேட்டார். “பயம் என்னை வீணாக்கியது, தேடல் என் வாழ்வின் பெரும் பகுதியை உட்கொண்டது, அறிவு ஏற்படுத்திய அங்காரத்தின் மீதான காதல் என்னை ஏமாற்றியது, ஆனால், என்னவரோ எனக்கு மீண்டும் புத்துயிர் அளித்தார். அந்த என்னவரை, நான் என்னை இழப்பதற்கு முன்பு ஒரு நொடியேனும் உணர வேண்டும்” என்று சொல்லி நீண்ட பெருமூச்சு விட்டார்.

சில நிமிட மௌனத்திற்குப் பின் 859-ம் வருடம் தன்னுடைய 63-ம் வயதில் தன்னை முற்றிலும் இழந்தார்.

அந்தத் தீராத நேசத்தை ருசித்தவன்

அத்தனை அடிமைகளுக்கும் உண்மையான தோழனாக இருப்பான்

அந்தத் தீராத நேசத்தை ருசித்தவன்

அடிமைகள் அனைவரிடமும் தன்னைத் தாழ்த்திக் கொள்வான்

அந்தத் தீராத நேசத்தை ருசித்தவன்

அடிமைகளின் பாதைகளில் ஆறுதலாய் இருப்பான்

அந்தத் தீராத நேசத்தை ருசித்தவன்

அடிமைகளின் பிரவுவிடம் ஆத்மார்த்தமாக இருப்பான்.


(ஞானத்தின் தேன் ஊறும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்