வைகுண்ட ஏகாதசி விழா | பார்த்தசாரதி கோயிலில் 23-ல் சொர்க்க வாசல் திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 23-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதையடுத்து, கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, பல்வேறு துறை அலுவலர்களுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் மேற்கொண்டார்கள். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று கோயிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

டி.பி. கோயில் தெரு வழியாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை இரண்டரை மணிக்கு 1,500 பக்தர்களை அனுமதிப்பதென்றும், உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் 850 நபர்களை அனுமதிப்பதென்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பிறகு காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரையில் பொது தரிசனம் தான் இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட இருக்கின்றது. அன்றைய தினம் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீதேறி தரிசனம் செய்வதற்கு தடை செய்வதை இந்து சமய அறநிலையத் துறை அனுமதிக்காது. கோயில்களில் படிப்படியாக சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.அந்த வகையில், இந்த ஆண்டுவைகுண்ட ஏகாதசிக்கு பார்த்தசாரதி கோயில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE