ஆண்டாள் திருப்பாவை 2 | அனைவருக்கும் உதவி செய்வோம்!

By கே.சுந்தரராமன்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!

மாதங்களில் நான் மார்கழி என்று கூறிய கண்ணனை வழிபடுவதற்காக, ஆயர்ப்பாடி தோழியரை முதலில் அழைத்த கோதை, இப்போது, உலகில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள். இறைவனின் கருணை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த ஆண்டாள், நல்ல விஷயங்களை பலருக்கு சொல்ல வேண்டும் என்று விருப்பம் கொள்கிறாள். இறைவனை அடையும் வழிகளை ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்குகிறாள்.

எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று தோழிகளிடம் ஒரு பட்டியலை அளிக்கிறாள். நல்லவற்றை செய்து, அல்லாதனவற்றை விலக்க வேண்டும். அதிகாலையில் உறக்கம் தவிர்த்து, எழுந்து நீராடி, பெரியோரிடம் ஆசி பெற்று, தூய உள்ளத்துடன் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளைப் போற்றிப் பாட வேண்டும்.

நெய் பால் கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எவ்வித அலங்காரமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, கண்களில் மையிட வேண்டாம். கூந்தலில் நறுமண மலர்கள் சூட வேண்டாம். யாரைப் பற்றியும் யாரிடமும் புறம் சொல்லக் கூடாது. கோபம் தவிர்த்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நம்மை நாடி வருவோருக்கு இல்லை என்று சொல்லக் கூடாது. அறவழியில் நின்று அனைவருக்கும் உதவிகள் பல செய்ய வேண்டும். நாம் உய்வடைய இதுவே சிறந்த வழியென்று நினைத்து பாவை நோன்பை நோற்போம் என்று தனது தோழிகளுக்கு நல்வழி காட்டுகிறாள் கோதை நாச்சியார்.

முந்தைய பகுதி: நாராயணனே நமக்கே பறை தருவான்..!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE