சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று (டிச.18)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 26-ம் தேதி தேர்த் திருவிழாவும், 27-ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் கோலாகலமாக நடைபெறும்.

நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றி வைக்கிறார். நாளை (டிச.19) சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி வெள்ளி சந்திரப் பிரபையில் எழுந்தருள, வாகன வீதியுலா நடைபெறும்.

வரும் 20-ம் தேதி தங்க சூரியப் பிரபை வாகனத்தில் வீதியுலா, 21-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதியுலா, 22-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதியுலா, 23-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலா, 24-ம் தேதி தங்க கைலாச வாகன வீதியுலா நடைபெறுகிறது. வரும் 25-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுக்குதிரையில் செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

வரும் 27-ம் தேதி புதன்கிழமை காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறுகிறது. வரும் 28-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் ஆருத்ரா தரிசன விழா நிறைவடைகிறது.

உற்சவம் நடைபெறும் 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து, திருவெம்பாவை உற்சவம் நடைபெறும். உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE