ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: பகல் பத்து உற்சவம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் தொடக்கமாக பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருஅத்யயன உற்சவம் என்றுஅழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நேற்று முன்தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை மூலஸ்தானத்திலிருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், லட்சுமி பதக்கம், புஜகீர்த்தி, பவள மாலை, காசு மாலை, முத்துச்சரம், அடுக்குப் பதக்கம் உள்ளிட்டதிருவாபரணங்கள் அணிந்து, அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு நம்பெருமாள் முன்பு அரையர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை பாடினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை தரிசித்தனர். இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து பெருமாள் புறப்பட்டு, 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்து உற்சவ நாட்களில் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

பகல் பத்து உற்சவத்தின் 10-ம் நாளான வரும் 22-ம் தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதிப்பார். வரும் 23-ம்தேதி அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. இந்த நாட்களில் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து 7-ம் திருநாளான வரும் 29-ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவை, வரும் 30-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, ஜன. 1-ம் தேதி தீர்த்தவாரி, 2-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அத்துடன் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நிறைவடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE