நதிகளைப் பூஜித்தால் நீர்வளம் -ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு

By என்.ராஜேஸ்வரி

நீர் வளம் இருந்தால்தான் அங்கு மனிதன் உட்பட ஜீவராசிகள் வாழ முடியும். அதனாலேயே விண் ஆய்வாளர்கள் சந்திரனிலும், செவ்வாயிலும் நீர் ஆதாரங்களைத் தேடுகின்றனர். நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

தமிழர்கள் இதனைப் பன்னெடுங்காலம் முன்னரே அறிந்து நீர் வழிபாட்டை மதங்களுக்குள் உட்படுத்தாத ஒரு பண்டிகையாக மாற்றினார். இயற்கையைப் போற்றும் விதமாக ஆற்றினை வழிபட்டனர். மழை தருவதில் முக்கியப் பங்காற்றும் கடலும் மக்களால் அன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

கடலன்னை, காவிரியன்னை என்று உயிர் தரும் நீர் நிலைகளை எல்லாம் அன்னை என்றே அழைக்கிறோம். அதனால்தான் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக ஆடி விளங்குகிறது.

தை பிறந்தால் வழி

இப்படி உன்னதமான இம்மாதத்தில் கல்யாணம் போன்ற விசேஷங்களை நடத்துவதில்லை. இதற்குக் காரணம் பக்தர்களின் கவனமெல்லாம் இறை வழிபாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான்.

மார்கழி மாதமும் பீடுடைய, அதாவது, சிறப்புடைய மாதம் என்பதால் இறைவனைப் போற்றிப் பாட வேண்டிய மாதமாகிறது. ஆண்டாளின் திருப்பாவையும் அன்றைய மாதத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அதனால்தான் மார்கழி மாதத்தை அடுத்த தை மாதத்தில் கல்யாண முகூர்த்தங்கள் குறிப்பார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொலவடை கிராமங்களில் மிகப் பிரபலம்.

இப்படி உன்னதமான இம்மாதத்தில் கல்யாணம் போன்ற விசேஷங்களை நடத்துவதில்லை. இதற்குக் காரணம் பக்தர்களின் கவனமெல்லாம் இறை வழிபாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான். மார்கழி மாதமும் பீடுடைய, அதாவது, சிறப்புடைய மாதம் என்பதால் இறைவனைப் போற்றிப் பாட வேண்டிய மாதமாகிறது.

ஆண்டாளின் திருப்பாவையும் அன்றைய மாதத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அதனால்தான் மார்கழி மாதத்தை அடுத்த தை மாதத்தில் கல்யாண முகூர்த்தங்கள் குறிப்பார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொலவடை கிராமங்களில் மிகப் பிரபலம்.

பன்னிரெண்டு மாதங்கள் கொன்ட ஆண்டினை உத்தராயணம், தட்சிணாயணம் என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். இதில் உத்தராயணத்தை தேவர்களின் பகலாகவும், தட்சிணாயணத்தை அவர்களின் இரவாகவும் பாவிப்பார்கள்.

அக்கணக்கின்படி ஆடி மாதம் தேவர்களின் மாலை நேரம். மாலையில் விளக்கேற்றும் நேரம் அம்பாளுக்கும் தாயாருக்கும் உரியதாகக் கருதப்படுவது ஐதீகம். எனவே தேவர்களின் மாலை நேரமான ஆடி, பெண் தெய்வங்களுக்கு உரியதாகக் கொண்டாடப்படுகிறது.

அம்மனுக்கு உகந்த ஆடியில் கொண்டாடப்படும் பண்டிகைகளும் விழாக்களும் அநேகம். அவை ஆடிப் பிறப்பு, ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடித் தபசு, ஆடிப் பூரம் ஆகியவை ஆகும்.

விசேஷமான வெள்ளிக் கிழமைகள்

‘சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை உடை உடுத்தி’ என்று பெண் தெய்வத்தைப் போற்றும் இம்மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் விசேஷமானவை. வெள்ளிக் கிழமை விடியற்காலை வாசலில் கோலமிட வேண்டும்.

பூஜை அறையிலும் கோலமிட்டுக் குத்து விளக்கேற்றி அம்மனுக்கு உகந்த லலிதா சகஸ்ரநாமம், ஆதிசங்கரர் அருளிச் செய்த கனகதாராஸ்தவம், செளந்தர்யலஹரி ஆகியவற்றில் இயன்றவற்றைப் படிக்க வேண்டும். பின்னர் அம்மனுக்கு உகந்த உளுந்து வடை, பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

ஆடிப் பெருக்கு அன்று காவிரி உட்பட தமிழக நதிகளை மக்கள் கொண்டாடுவதுண்டு. அவர்கள் இந்த நீர்நிலைகளில் குளித்து முடித்து, அவரவர்களது குல வழக்கப்படி ஆடை உடுத்துவார்கள். ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை அடுக்கி நதிக்கரையில் வைத்து நதிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு நோக்கிக் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். புதுமணப் பெண் தாலி மாற்றிக் கட்டிக்கொள்ளும் வழக்கமும் உண்டு.

கடற்கரை கலவை சாதம்

மாலையில் மக்கள் சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புளியஞ் சாதம், கத்திரிக்காய் சாதம், தயிர் சாதம் என ஏதேனும் கலந்த சாதம் கட்டிக்கொண்டு குடும்பமாக வந்து நதி அல்லது கடற்கரையில் அமர்ந்து உண்டு களிப்பதும் உண்டு. இவ்வாறு நீர்நிலைகளைப் போற்றும் பண்பாட்டைக் கொண்டவர்கள் தமிழர்கள்.

நீர்நிலை அருகில் இல்லாத நகரில் இருப்பவர்கள் தங்களது இல்லத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கோ அல்லது சுத்தமான பாத்திரத்தில் பிடித்து வைத்த நீரையோ பூஜை செய்து வழிபடலாம் என்கிறார் அமிர்தவல்லி அம்மாள்.

இதனால் நீரின் அருமையை அனைவரும் நினைவு கூருவர் என்ற அவர், பாகுபாடின்றி வீட்டில் வேலை செய்யும் பெண் உட்பட உறவினர் மற்றும் நண்பர் இல்லத்துப் பெண்கள் ஆகிய அனைவருக்கும் குங்குமம், தாம்பூலம், ரவிக்கைத் துணி ஆகியவற்றை அன்புடனும் மரியாதையுடனும் அளிக்க வேண்டும் என்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE