சபரிமலையில் நெரிசல் அதிகரிப்பதால் நேரடி முன்பதிவை குறைக்க முடிவு: தினசரி பக்தர்கள் வருகை 1.20 லட்சமாக உயர்வு

By செய்திப்பிரிவு

குமுளி: சபரிமலையில் நெரிசலைத் தவிர்க்கவும், வசதியான தரிசனத்துக்கு கூட்டத்தை முறைப்படுத்தவும் நேரடி முன்பதிவு குறைக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள மூங்கில் தோப்பில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், சபரிமலை வழிபாடு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றது. இதில் தேவஸ்தான அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், வனத் துறை அமைச்சர் சசீந்திரன், தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, "குழந்தைகள், பெண்கள் தரிசனத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தகுதியானதன்னார்வலர்களைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். சபரிமலையின் உண்மையான நிலவரம் குறித்த தகவல்கள் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும்" என்றார்.

சபரிமலை தேவசம்போர்டு சிறப்புச் செயலாளர் எம்.ஜி.ராஜமாணிக்கம் கூறும்போது, "பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இதை 80 ஆயிரமாக முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

18-ம் படிகள் வழியே ஒருமணி நேரத்தில் 4,200 பேர் ஏறிச் செல்ல முடியும். சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள், முதியவர்களாக உள்ளனர்.

இதனால் ஒரு மணி நேரத்துக்கு 3,800 பேர் மட்டுமே 18-ம் படி வழியேசெல்ல முடிகிறது. வசதியான தரிசனத்துக்காக, நிலக்கல்லில் உள்ள தரிசன நேரடி முன்பதிவைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

தேவசம்போர்டு அதிகாரிகள் கூறும்போது, "மண்டல பூஜை தொடங்கியது முதல் சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். கடந்த 6-ம் தேதிக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 88 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE