கோயில் என்றாலே சைவத்தில் சிதம்பரந்தான். சிதம்பரத்துக்கென்ன அத்தனை சிறப்பு? இறைவனை உருவமாகவும் (கூத்தன்), அருவுருவமாகவும் (இலிங்கம்) மட்டுமல்லாது, அருவமாகவும் (சிற்றம்பல வெளியாகிய சிதம்பர இரகசியம்), வடிவநிலைப்படுத்தப்பட்ட ஒரு மெய்யியற் கொள்கையாகவும்கூட (கூத்தன் வடிவத்தில் சித்தாந்தப் பெருங்கொள்கை) காட்ட முனைகிற இடம் அது என்பதால் சிதம்பரம் சிறப்பு.
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பதம்ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே? (திருமந்திரம் 2723)
என்று திருமூலர் விசாரிக்கும் தென்தில்லை மன்றாடியை, அணிதில்லைச் சிற்றம்பலவனை அனைவரும் அறியவே விரும்புகிறார்கள். ஆனால் அறியும் வழி எது?
நந்தனார் போக விரும்பிய தலம் தில்லைச் சிற்றம்பலம். வேதியரிடத்தில் தொண்டூழியம் செய்த நந்தனார் சிதம்பரம் போக வேண்டி ஆண்டையாகிய வேதியரிடம் அனுமதி கேட்க, வேதியர் மறுக்க, நந்தனார் மன்றாட, வேதியர் நந்தனாரை வேலையில் முடுக்கிவிட, இறையருளால் நந்தனார் வேலையை முடித்துவிட, வேதியர் மலைத்துப் போகிறார்.
படித்தும் என்ன எங்கள் வேதம் – அதில்
பார்த்ததுஇல்லை இந்தப் பகவன்நல் கீதம்
எடுத்துச் சொன்னாய்சிவ போதம் – அது
ஏற்காமல் போச்சுது என்பிடி வாதம் (நந்தனார் சரித்திரக் கீர்த்தனை)
‘நந்தா, வேதம் படித்தும் நான் காணாத இறைவனை, வேதம் படிக்காத நீ கண்டிருக்கிறாய். கண்ட இறைவனைக் காட்டு எனக்கும்’ என்கிறார்.
ஐயே மெத்தக் கடினம் – உமக்குஅடிமை
ஐயே மெத்தக் கடினம்!
என்று தொடங்குகிறார் நந்தனார். அடிமைத் தொண்டூழியம் செய்வது எவ்வளவு கடினம் பாருங்கள். ‘வேலையைக் காட்டு’ என்றால் காட்ட முடியும்; ‘கடவுளையும் காட்டு’ என்றால் காட்ட முடியுமோ?
என்றாலும் நந்தனார் காட்ட முயல்கிறார்:
...மானஅபிமானம் விட்டுத் தான்ஆகி நின்றவர்க்குச்
சேனாதி பதிபோலே ஞானாதி பதிஉண்டு
பாருமே! கட்டிக் காருமே! உள்ளே சேருமே! அது பூருமே!...
‘மானாபிமானம் விட்டுத் தான் ஆகி நிற்றல்’
என்பதுதான் நந்தனார் கண்டுகொண்ட வழி.
மானாபிமானம் விடுதல் என்பதென்ன?
ஒரு காரியத்தைச் செய்கிறோம். அதைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், கருமமே கண்ணாகி, நம்மை மறந்து அதில் தலைப்படுகிறோம். அதைக் காணும் உலகம், பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்காமல் காரியத்தையே பார்த்துக்கொண்டு பேயாய்த் திரிவதாகப் பழிக்கும். சிலவேளை சிரிக்கும். ஆனால் கருமமே கண்ணானவர்களுக்கு அதைக் குறித்து நாணம் இருக்காது. அவர்கள் மானாபிமானம் விட்டவர்கள்.
தான் ஆகி நிற்றல் என்பதென்ன?
உலகம் நமக்கு உருவேற்றிக்கொண்டே இருக்கிறது. உலகம் உருவேற்றியவாறு உண்கிறோம்; உடுக்கிறோம்; உழைக்கிறோம். ஆதிக்கம் செய்ய வேண்டிய இடங்களையும் அடங்கி இருக்க வேண்டிய இடங்களையும் உலகம் நமக்குக் கற்பித்து வைத்திருக்கிறது. கற்பித்தவாறு செய்கிறோமா என்று நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. நம் வசத்தில் நாம் இல்லை. உலகத்தின் அதிகார வசத்தில் இருக்கிறோம். நம் வசத்துக்கு நாம் மீளுதலே விடுதலை; தன் வசத்தில் ஒருவர் இருத்தலே தான் ஆகி நிற்றல்.
இவ்வாறு மானாபிமானம் விட்டுத் தன் அறிவைப் பற்றித் தான் ஆகி நின்றவர்களின் உள்ளத்துக்குள் அறிவின் தலைவனாகிய ஞானாதிபதி தானே ‘பூந்து’ நுழைகிறான்.
திருமூலர் சொல்கிறார்:
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே (திருமந்திரம், 2349)
தன்னைத் தன் பிம்பத்தின்வழியாகவும், தன்னைப் பின்தொடர்கிறவர்களுடைய கருத்தின் வழியாகவும், இன்ன பிற ஊடகங்களின் வழியாகவும் அறிய முயலாமல், தன்னைத் தன் வழியாகவே அறிய முயல்கிறவன்தான் தலைவன். தனக்குத் தானே தலைவன் ஆதல்தான் ஆன்மிகம். தனக்கே தான் தலைவனாக இல்லாதபோது, தன்னைப் பிறருக்குத் தலைவனாக முன்வைத்துக்கொள்ளுதல் அரசியல். ஆன்மீகம் வேறு; அரசியல் வேறு. தனக்குள்ளேயே தன்னை அறிகிறவன் இறைவனைத் தேடிக் காடுமலை திரியாமல் தனக்குள்ளேயே கடவுளைக் கண்டுகொள்வான். தன்னிலே தன்னைக் கண்டுகொள்ள முடியாதவன் தலைவனும் ஆக மாட்டான்; கடவுளையும் காண மாட்டான்.
அகத்தில் இருப்பவனுக்கு என்ன வேண்டும்
கடவுள் தன்னிலிருந்து வேறானவன் என்று கருதி அவனைப் புறத்தில் தேடுகிறார்கள். கண்டுபிடித்துவிட்டதாகக் கருதிச் சிலை வடித்துக்கொள்கிறார்கள். கற்சிலை செய்துகொண்டது போக உற்சவரும் செய்துகொள்கிறார்கள். உற்சவருக்கு ஐம்பொன்னில் திருமேனி வடிக்கத் தங்கத்தைக் கொடை வழங்குகிறார்கள். கொடை கொடுத்த தங்கம் திருடுபோகிறது; ஆனாலும் கடவுள் திருடுபோவதில்லை. ஏனென்றால் திருடுபோகும் இடத்தில் கடவுள் இல்லை. இறைவன் இருக்குமிடம் சொல்கிறார் திருமூலர்:
தான்என்று அவன்என்று இரண்டாகும் தத்துவம்;
தான்என்று அவன்என்று இரண்டும் தனில்கண்டு,
தான்என்ற பூவை அவன்அடி சாத்தினால்
நான்என்று அவன்என்கை நல்லதொன்று அன்றே. (திருமந்திரம் 1607)
தான் (உயிர்) என்றும், அவன் (இறைவன்) என்றும் இரண்டு பொருள்கள். தான் இருப்பது உடம்பில்; இறைவன் இருப்பது வெளியில் என்று கருத வேண்டாம். தன்னிலேயே இருக்கிறான் அவன். எனக்குள்ளே இருக்கிற இறைவனுக்கு நான் ஏதெனும் வழங்கிப் பூஜை செய்ய வேண்டாமா? புறத்தில் இருக்கிற இறைவனாக இருந்தால் தங்கம் வழங்கலாம். அகத்தில் இருக்கும் இறைவனுக்கு என்ன வழங்குவேன்? என்று மயங்க வேண்டாம். உங்களையே இறைவனுக்குப் பூவாக்கிச் சாத்திக்கொள்ளுங்கள். உங்களையே பூவாக்கிச் சாத்திக்கொண்டபிறகு நான் என்று சொல்லிக்கொள்ள நீங்கள் ஏது மிச்சம்?
‘வான் கெட்டாலும் தான் கெடாத தலைவனுக்கு என்னையே நான் படைத்துக்கொண்டபோது, ஊன் கெட்டேன்; ஊனுக்குள் உட்கார்ந்திருந்த உயிர் கெட்டேன்; உணர்வு கெட்டேன்; உணர்வுக்கு ஊற்றான உள்ளம் கெட்டேன்; அனைத்துக்கும் தளமான நான் கெட்டேன்’ என்று தெள்ளேணம் கொட்டுகிறார் மாணிக்கவாசகர். (திருவாசகம், திருத்தெள்ளேணம், 18)
வெங்காயத்தை உரித்தபிறகு வெங்காயம் இல்லை; உரித்தவன் மட்டுமே இருப்பதைப்போல, தன்னை மறந்து, தலைவன் தாளைத் தலைப்பட்டுவிட்ட பிறகு, தான் இல்லை; இறைவனே இருக்கிறான். திருமூலர் பாடுகிறார்:
எங்கும் திருமேனி; எங்கும் சிவசத்தி;
எங்கும் சிதம்பரம்; எங்கும் திருநட்டம்;
எங்கும் சிவமாய் இருத்தலால், எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டுஅதே. (திருமந்திரம் 2722)
உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் இருக்கிற எல்லாம் இறைத் திருமேனிதான். இயங்குகிற எல்லாம் சிவசத்திதான். பார்க்கின்ற வெளியெல்லாம் சிதம்பரந்தான். ஆடுகிற எல்லாம் திருக்கூத்துத்தான். பார்க்கும் இடம் எங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமாய்ப் பரமசிவம். திருமேனி செய்யத் தங்கக் கொடை தேவையில்லை.
திருமூலர் வந்து சேர்ந்த இந்த இடத்துக்கே நந்தனாரையும் கொண்டு வந்து சேர்க்கிறார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார்.
ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை. ‘மானாபிமானம் இன்றித் தானாகி நின்றவர்க்கு ஞானாதிபதி உண்டு பாருமே! உள்ளே சேருமே!’ என்று சிதம்பரத்துக்குப் போகாமல் தனக்குள்ளேயே இறைவனைக் காணும் வித்தையை நந்தனார் வழியாக வேதியருக்குக் கற்றுக்கொடுத்த கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனாரை மட்டும் ஏன் சிதம்பரத்துக்கு அனுப்பினார்? கோபாலகிருஷ்ண பாரதியாரின் வரிகளிலேயே சொல்வதென்றால்,
இதைக் கண்டாரும் கிடையாது! விண்டாரும் சொன்னதில்லை!
(பகிர்வு தொடரும்)
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago