அழகர்கோயிலில் திரளான ஐயப்ப, முருக பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

மதுரை: கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று, அழகர் கோயிலில் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாதப் பிறப்பிலிருந்து ஐயப்பன், முருகனுக்கு மாலையணிந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். வேண்டுதல் செய்யும் பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கேரளத்திலிருந்து பக்தர்கள் நேற்று அதிக அளவில் அழகர் கோவிலுக்கு வந்திருந்தனர்.

அதே போல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர். இவர்கள் மலை மீதுள்ள நூபுரகங்கையில் புனித நீராடினர். பின்னர், சோலை மலை முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மலையடி வாரத்திலுள்ள கள்ளழகர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

18-ம் படி கருப்பண சாமி சந்நிதியிலும் தரிசனம் செய்தனர். இதே போல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE