அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் இருந்து சேலம் வந்த அட்சதை கலசங்களுக்கு சிறப்பு பூஜை

By செய்திப்பிரிவு

சேலம்: அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் பூஜை செய்யப்பட்ட அட்சதை கலசங்கள் சேலம் மரவனேரியில் உள்ள மாதவம் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் இருந்து, சேலம் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட அட்சதை கலசம் சேலம் மரவனேரியில் உள்ள மாதவம் மண்டபத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்குள்ள வெற்றி விநாயகர் கோயிலில் அட்சதை கலசம் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஆர்எஸ்எஸ் சேலம் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஊடகத் துறை செயலாளர் சீனிவாசன், விஹெச்பி மாவட்டத் தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அட்சதை கலசம் குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில், பங்கேற்பதற்கு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட உள்ளது. அதற்காக, அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் பூஜை செய்யப்பட்டு, அட்சதை கலசங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த அட்சதையுடன், அழைப்பிதழையும் கொடுத்து, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருமாறு, ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அழைப்பிதழ் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE