பல்லாயிரம் பேர் நம்புகிற, மதிக்கிற, வழிபடுகிற தெய்வத்தை யாரேனும் வசை பாடுவார்களா? சூடும் சொல் அல்லாது சுடும் சொல் சொல்வார்களா? சொல்வார்கள். சொல்லால் அடித்த கதைகள் மட்டும் அல்ல; கல்லால் அடித்த கதைகளும் சைவத்தில் உண்டு.
நம்பி ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனார் சைவக் குரவர் நால்வரில் ஒருவர்; தேவாரம் பாடிய மூவரில் ஒருவர். திருமுனைப்பாடி நாட்டில் தோன்றித் தீந்தமிழ் பாடிய இருவருள் ஒருவர்; ‘வன்தொண்டன்’ என்று இறைவனால் அழைக்கப்பட்ட ஒரே ஒருவர். இந்தச் சுந்தரருக்குத் திருமணம் நிகழ இருந்தது. தாலி கட்டப் போகும் நேரத்தில் வயதான வேதியர் ஒருவர் வந்தார். ‘தம்பி, நிறுத்து! நீ எனக்கு அடிமை!’ என்றார். சுந்தரர் வெகுண்டார். ‘அந்தணர்கள் வேறொரு அந்தணர்க்கு அடிமையாகும் வழக்கம் உண்டா? இப்படி ஒருவன் பேசி இன்றுதான் கேட்கிறோம்! பிதற்றுகிறான் பித்தன்!’ என்று வேதியரை வைதார்.
‘பித்தன், பேயன் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்! வழக்கைத் திசை திருப்பாமல் பேச வேண்டியதைப் பேசு; செய்ய வேண்டுவதைச் செய்!’ என்றார் வேதியர். பிறகு வழக்கு ஊராரால் நாட்டாண்மை செய்யப்பட்டு, வழக்குக்கு உரிய ஆவண ஆதாரங்கள் காட்டப்பட்டு, வேதியருக்குச் சுந்தரர் அடிமைதான் என்று தீர்ப்புரைக்கப்பட்டு, சுந்தரர் வேதியருக்கு அடிமைப்பட்டு, வேதியராக வந்தவர் வேறு யாரும் அல்லர் இறைவர்தாம் என்று சுந்தரரால் உணரப்பட்டபோது, ‘என்னிடமே வம்பு செய்த முரட்டுத் தொண்டா! என்னைப் பாடு’ என்றான் இறைவன்.
‘நின்றது நிற்கப் பாடச் சொன்னால் என்ன பாடுவேன்?’ என்று திகைத்தார் சுந்தரர். ‘அன்பில் புரண்டு வருகிற சொல்லெல்லாம் பாட்டுத்தான். வைத சொல்லெல்லாம் வாழ்த்துத்தான். பித்தன் என்று என்னை வைதாய் அல்லவா? வைத சொல்லாலேயே வாழ்த்து’ என்றான் இறைவன். ‘பித்தா, பிறைசூடி, பெருமானே, அருளாளா’ என்று விளித்துப் பாடி இறைவனோடான தன் தொடர்பைப் புதுப்பித்துக்கொள்கிறார் சுந்தரர்.
நன்றாக இருங்கள்
வந்தவன் இறைவன் என்று தெரியாததால் திட்டினார்; தெரிந்திருந்திருந்தால் திட்டியிருக்க மாட்டார் என்பவர்கள் காண்க: இறைவனை நன்கு அறிந்த பின்னும் இறைவனைத் திட்டுகிறார் சுந்தரர். ஒருவரிடம் ஓர் உதவி கேட்டுப் போகிறோம் என்று வையுங்கள். ஏதோ காரணத்தால் பற்றி அவர் செய்யாமல் விட்டுவிட்டார்.
நமக்குக் கோபம் வருகிறது. உரிமையும் தகுதியும் உடைய நமக்குச் செய்யாமல் விட்டுவிட்டாரே? அதற்காக ‘எனக்கு உதவாத நீ நாசமாய்ப் போ’ என்று அவரை வெளிப்படத் திட்ட முடிகிறதா? இல்லை. ‘நல்லது; வாழ்க வளமுடன்!’ என்று வாழ்த்திவிட்டு வந்துவிடுவதில்லையா? இந்த வாழ்த்து, ஒருவரை வையாமல் வைகிற வேலை இல்லையா? அந்த வேலையைச் செய்கிறார் சுந்தரர்:
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியவர் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர்! திருவாரூரீர்!
வாழ்ந்து போதீரே! (சுந்தரர் தேவாரம், 7:95:1)
‘நான் உங்கள் ஆளில்லையா? துன்பத்தால் நொந்து போயிருக்கிறேன் இல்லையா? என் துன்பத்தை முறையிட்ட பிறகுமா சும்மா இருப்பீர்கள்? நன்றாக இருங்கள் திருவாரூர்க்காரரே!’
சுந்தரரைப்போலக் கடவுளைச் சொல்லால் அடித்தவர் மட்டுந்தான் உண்டென்று கருத வேண்டாம்; கல்லால் அடித்தவரும் உண்டு. அவர் பெயர் சாக்கிய நாயனார். பவுத்த மதத்தைத் தழுவித் துறவியானவர். அவர் காலம் பவுத்தத்துக்கும் சமணத்துக்கும் மாற்றாகச் சைவம் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த காலம். சைவம் சொன்னவை சாக்கிய நாயனாருக்குச் சம்மதமாக இருந்தன. ஆனால், பவுத்தத் துறவுநெறியில் இருந்துகொண்டு சைவத்துக்கு வெளிப்படையாக ஆதரவு காட்ட முடியாத நிலை. என்றாலும் மனம் ஈடுபட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் தான் போகும்வழியில் இருந்த சிவலிங்கத்தின்மீது கல்லொன்றை எடுத்து எறிந்து, தான் மலரைத்தான் எறிந்ததாகக் கற்பித்துக் கொண்டார்; அதை மலராகவே கருதி ஏற்றுக்கொண்டான் இறைவன்.
கல்லாலே எறிந்ததுவும் அன்பான படிகாணில்
வில்வேடர் செருப்படியும் திருமுடியில் மேவிற்றால்,
நல்லார்மற்று அவர்செய்கை அன்பாலே நயந்துஅதனை
அல்லாதார் கல்என்பார் அரனார்க்குஅது அலர்ஆமால். (பெரிய புராணம், 3649)
திண்ணப்பன் என்ற கண்ணப்பன் அவனது செருப்புக் காலைத் தூக்கித் தன் தலைமேல் வைத்ததையே பிழையாகக் கருதாத கடவுள், கல்லையா கோளாறு சொல்லிவிடுவார்? மடையர்களுக்குத்தான் அவை செருப்பும் கல்லும்; கடவுளுக்கு அவை அன்புமலர்கள்.
குணம் காணவும் தெரிய வேண்டும்
மனிதர்களிடத்தில் குறைகள் இருக்கும்தான்; இடம்தெரியாமல் சிலர் பேசிவிடுவதும் செய்துவிடுவதும் இயற்கைதான். அதற்காகக் குற்றங்களையே கண்டுகொண்டிருக்கக் கூடாது; குணம் காணவும் தெரிய வேண்டும். ஆடு பிழுக்கை இடுகிறது. பிழுக்கை இட்ட இடத்திலேயே படுத்துக்கொள்கிறது. பால்மடுவில் பிழுக்கை ஒட்டியிருக்குந்தான். பால் கறக்கப் போகிறவன் ஆட்டுப் பிழுக்கையை வாரிப்போட்டுப் பால்மடுவைக் கழுவிப் பால் கறந்து குடிப்பதில்லையா? பால்மடுவில் பிழுக்கை பட்டுவிட்டது என்பதற்காகப் பால்மடுவை வெட்டச் சொல்கிறவன் முட்டாள் இல்லையா?
...பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்!
பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்...
(சுந்தரர் தேவாரம், 7:54:1)
திருமூலர் சொல்கிறார்:
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்துஅருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்துஅன்பு செய்துஅருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்துஅன்பு செய்யும் மருள்அது ஆமே.
(திருமந்திரம் 280)
எந்த ஒன்றும் இகழ்கிறவர்களுக்குக் கிடைக்காது; புகழ்கிறவர்களுக்குத்தான் கிடைக்கும் என்பது உலக வழக்கம். எனவே, ஒன்றை அடைய நினைக்கிறவர்கள் அதைப் புகழ்வார்கள். தங்கள் புகழ்ச்சி தகுதியானதுதானா என்பது அவர்களுக்குப் பொருட்டே இல்லை. தன் தேவை நிறைவேற வேண்டும்; தான் நினைத்ததைப் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலாதிக்காரர்கள் நடந்துகொள்கிற முறை கண்மூடிப் புகழ்தல்; போற்றுதல். ஆனால், எந்த ஒன்றையும் பொருட்டாக நினைக்காதவர்கள், எதுவுமே கிடைக்காதென்றாலும் புகழ வேண்டியதைப் புகழ்வார்கள்; கையிருப்பைக்கூட இழக்க நேரிடும் என்றாலும் இகழ வேண்டியதை இகழ்வார்கள்.
இகழ்ந்தவர்கள் இழந்ததென்ன, புகழ்ந்தவர்கள் பெற்றதென்ன என்பதையெல்லாம் ஈசன் அறிவான். வழங்கும் காலம் வரும்போது வரிசைமுறை நோக்கி வழங்க வேண்டியதை வழங்குவான். இறைவனின் கணக்கில் நீங்கள் புகழ்ந்தீர்களா, இகழ்ந்தீர்களா என்பதில்லை; எதைச் செய்திருந்தாலும் அதை உள்ளன்போடும் உயிர் அருளோடும் செய்தீர்களா என்பதுதான். அன்பு என்றால் அப்படி ஒரு கிறுக்கு கடவுளுக்கு.
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சிஇல் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது ஆமே
(திருமந்திரம் 283)
ஆண்-பெண் கலத்தலில் அறிவு அழிந்துபோய் அன்பு என்ற உணர்ச்சி மட்டுமே எஞ்சி நிற்பதைப் போலவே, இறைவன்-உயிர் கலத்தலிலும் அறிவு பின்னிலை எடுத்து, அன்பு முன்னிலை எடுக்கும். அறிவினால் அணைகட்டிப் பாதுகாக்கப்பட்ட அன்பு ஒரு கட்டத்தில் கரைகடந்து பெருகி, அன்பு என்பது ஓர் உணர்ச்சி என்ற நிலை மழுங்கி, அன்பே தானாகி, தானே காணாமல்போன நிலை உருவாகும்.
அன்பு சிவம்இரண்டு என்பர் அறிவிலார்;
அன்பே சிவம்ஆவது ஆரும் அறிகிலார்;
அன்பே சிவம்ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்துஇருந் தாரே. (திருமந்திரம் 270)
தேடப்படும் பொருளும் அன்புதான்; தேடும் வழியும் அன்புதான்; தேடும் பொருளும் அன்புதான்; தேடிக் கண்டடைந்த நொடியில் தான் அற்றுத் தானாகப்போவதும் அன்புதான். அன்பும் சிவமும் வேறுவேறு என்கிறவர்களே, அறிக: சிவம் என்பது அன்பு; அன்புதான் சிவம். சிவமாகுங்கள் அன்பர்களே!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago