தெய்வத்தின் குரல்: மாய சக்திதான் அம்பாள்

By செய்திப்பிரிவு

ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக்கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்தமயமான பிரம்மத்திலிருந்துதான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது.

ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்திதான் அம்பாள் என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம்.

உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.

அவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.

ஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறு கதி இல்லை. அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்தப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, சம்சாரத்திலிருந்து ஜனன மரணச் சூழலிலிருந்து, விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றில்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.

மாயா என்றால் எது இல்லையோ அது என்று அர்த்தம். இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது? அது எப்போதும் இல்லாதது அல்ல. எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது.

அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதை நினைக்கிறோம். அவற்றிடம் ஆசை, துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம்.

இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். அம்பாளை உபாசித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அபூர்வமாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே.

தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்துகொண்ட பின், வெளியே மாற்றிக்கொண்டும், அழித்துக்கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது.

இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்துவிடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது, அதாவது மாயைதான், அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.

மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது.

மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக்கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும் மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தைச் செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம்.

ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களில் இருந்தும், மனசின் ஒயாத சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.

காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்.

இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறார்கள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிக்கும்.

மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வசப்படுத்திக்கொண்டுவருகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை.

மனோ ரூபேக்ஷ கோதண்டா - பஞ்ச தன்மாத்ர ஸாயகா என்று, இதையே லலிதா ஸஹஸ்ர நாமம் கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கி வந்திருக்கிறாள்.

இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களைச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. அவற்றை அடக்கி சம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாக பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள்.

ராக ஸ்வரூப பாசட்யா க்ரோதாகாராங்குசோஜ்வலா என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றைத் தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்