துளி சமுத்திரம் சூபி 15: அவனுக்குச் சொந்தமற்றது உலகில் உண்டா!

By முகமது ஹுசைன்

மனிதனின் தேவைகளை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். ஒன்று உடல் சார்ந்தது மற்றொன்று மனம் சார்ந்தது. உடலின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும்வரை மனம் தன் தேவைகளை வெளிப்படுத்தாது. அவை பூர்த்தியானவுடன்தான் மனம் தன் தேவைகளை மெல்ல வெளிப்படுத்த ஆரம்பிக்கும். உடலின் தேவைகள் என்றும் மாறாமல் நிரந்தரமாக இருக்கும். ஆனால், மனம் தன் அபிலாஷைகள் மூலம் நம் மேல் திணிக்கும் ஆசையோ நிரந்தரமற்று மாறிக்கொண்டேயிருக்கும். ஏனென்றால், மனத்தின் அபிலாசைகளுக்கு எல்லைகளே கிடையாது.

சாமானியர்கள் மனத்தின் அபிலாஷைகளுக்கு அடிமையாகிவிட்டதை உணர்ந்தபின்னும் அதிலிருந்து மீளமுடியாமல் ஓடிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால், ஞானிகள் அதை உணர்ந்தவுடன் தம்மை அதிலிருந்து விலக்கிக்கொள்வார்கள். எந்த அகங்காரத்தைத் தன் பலமாகக்கொண்டு அது அவர்களை அடிமைப்படுத்தியதோ, அதே அகங்காரத்தை நீர்த்துப் போகச் செய்து அவர்கள் மனத்தை வெற்றிகொள்வார்கள். ஒரு சாமானியனைப் போன்று மனத்தின் பின் ஓடிப் பெரும் செல்வம் சேர்த்து பின் அதன் சூழ்ச்சி புரிந்தவுடன், அதைத் துச்சமெனத் தூக்கியெறிந்து ஞானியானவர் ஷகீக் பல்கீ.

நூல்களைச் சுமக்க ஒட்டகங்கள்

ஷகீக் பல்கீ எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயற்கையிலேயே இவர் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருந்தார். சிறுவயது முதலே இவர் அறிவின்பால் மிகுந்த மோகம் கொண்டிருந்தார். தேடித் தேடிப் படித்துக் கற்பதும், பின் அதை ஆராய்ந்து புரிவதும் மட்டுமே இவரது வாழ்வாகச் சிறு வயதிலிருந்தது. இவர் இளைஞராகும் முன்பே இவரது கற்றல் தளம் மிகப் பரந்து விரிந்த ஒன்றாக இருந்தது. ஏறக்குறைய 1,700 ஆசிரியர்கள் இவருக்குக் கற்றுக்கொடுத்ததாகவும் இவர் வாங்கிய புத்தகங்களைச் சுமந்துசெல்வதற்காகவே பல ஒட்டகங்கள் தேவைப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.

இவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம், எதில் வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம். அவை அனைத்துக்கும் இவரிடம் விடையிருக்கும். அந்தக் காலகட்டத்தில் தனக்குத் தெரியாத ஒன்று இந்த உலகினில் இல்லையென்று அவர் பெருமையாகச் சொல்லிக்கொண்டும் சில காலம் திரிந்துள்ளார்.

இந்தப் பெருமைப் பேச்சுகள் ஒரு கட்டத்தில் அவருக்கு ஒருவிதச் சலிப்பை ஏற்படுத்திவிட்டன. “எனக்கிருக்கும் இந்த அறிவால் என்ன பலன்? யார் யாரோ தோண்டிவைத்திருக்கும் கிணறுகளிலிருந்து நீரை அள்ளிப் பருகுவது போன்று இவ்வுலகில் யார் யாரோ நிரப்பி வைத்திருக்கும் அறிவைத் தேடிப் படித்துக் கற்றறிந்து தெரிந்துகொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. யார் யாரோ இட்ட பிச்சைகளில் பரந்து விரியும் இந்த அறிவை எப்படி எனதென்று உரிமை கோர முடியும். இந்த உரிமையற்ற அறிவால் எனக்கு என்ன சிறப்பு” என்று யோசித்தார். அதுவரை பெருமையென அவரால் போற்றி வளர்க்கப்பட்ட அவரது அறிவு இந்த எண்ணத்தின் பின்னான அடுத்த கணமே அவருக்கு மதிப்பற்ற ஒன்றாக மாறிவிட்டது.

பரந்து விரிந்த வணிக சாம்ராஜ்யம்

தனதென்று உரிமை கோரிக்கொள்ளும் ஒன்றை மட்டுமே இனி அடைவதென முடிவுசெய்தார். அது எது என்ற சிந்தனையில் சில நாட்கள் மூழ்கினார். அப்போதுதான் அவர் கவனம் செல்வத்தின் பால் திரும்பியது. உடனடியாக அவர் அதை ஈட்டும் முயற்சியில் வணிகத்தில் குதித்தார். அதுவரை எதிலும் அறிவை மட்டும் பார்த்தறிந்த அவர் கண்களுக்குப் பணம் மட்டுமே எங்கும் தெரிந்தது. அவரது அறிவாற்றலால் குறுகிய காலத்திலேயே அவர் வெற்றிகரமான வணிகராக வலம்வர ஆரம்பித்தார். செல்வம் மலைபோல் குவிந்தது. சொத்துகள் எல்லையற்று விரிந்தன.

நாடே அவரை வியந்து பார்க்கத் தொடங்கியது. வணிகத்தில் தன்னால் ஒன்றை நூறாக மாற்ற முடியும் என்று பெருமையுடன் பேசித் திரிந்தார். அந்தப் பெருமைப் பேச்சு ஆணவமாகத் தோன்றினாலும் அதுதான் உண்மையும்கூட. நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் பிரயாணம் செய்து தன் வணிகத்தை விரிவாக்கிக்கொண்டே சென்றார்.

ஆசைகள் மாறினாலும் தேவைகள் மாறினாலும் சிறுவயதிலிருந்தே அவரிடம் மாறாத ஒரு பண்பிருந்தது. அது அவரது இறை நம்பிக்கை. எந்தக் காலத்திலும் அதை அவர் கைவிடவில்லை. ஒருமுறை அவர் வணிக நிமித்தமாக துர்கிஸ்தான் சென்றபோது, அங்கே சிலையை வழிபட்ட ஒரு மனிதனைக் கண்டு மிகுந்த வேதனையுற்றார். அவனிடம் எல்லையற்ற கடவுளை ஒரு சிறு சிலையில் சுருக்குவது நியாயமாகுமா என்று கேட்டார்? அந்த மனிதன் மெல்லத் திரும்பிப் பார்த்து “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக வந்துள்ளீர்கள்?” என்று கேட்டார். ஷகீக் தன்னைப் பற்றிச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார். “எல்லையற்ற அந்தக் கடவுளுக்குச் சொந்தமற்ற ஒன்றென்று எதுவும் இவ்வுலகில் உண்டா?”என்று கேட்டபடி அந்த மனிதன் எழுந்து சென்று மறைந்தார்.

தன்னுடையது எது?

அவர் சொல்லிச்சென்ற அந்த நொடியில் ஷகீக் அனைத்தையும் இழந்து அனைத்தையும் உணர்ந்தார். முதன்முறையாகத் தானென்பதை மறந்து தொழுகையில் ஈடுபட்டார். தானே தனதில்லை எனும்போது பெற்ற அறிவும் சேர்த்த அறிவும் தன்னுடையதாக எப்படி மாறுமென்று யோசித்தார். தன்னிடமிருக்கும் இந்த அறிவும் சொத்தும் பிறருக்குக் கொடுப்பதற்கே என்று முடிவுசெய்து சொந்தஊர் நோக்கி நெக்குருகப் பிரார்த்தித்தபடி பயணித்தார். தன் கைவசமிருந்த பணத்தையெல்லாம் வரும்வழியெங்கும் இல்லாதோருக்குக் கொடுத்தபடியே ஊர்வந்து சேர்ந்தார். உடனேயே, முதல்வேலையாகத் தன் சொத்துகள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு ஹஜ்ஜுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்.

ஹஜ் கடமையை முடித்துத் திரும்பியபோது அவர் வாழ்ந்த ஊரில் அவருக்குச் சொந்த வீடுகூட இல்லாமல் இருந்தது. வறியவனாகவே இருப்பது துயரமென்றால் செல்வத்தில் மூழ்கித் திளைத்தபின் வறியவனாக வாழ்வதென்பது பெரும் துயரம். ஆனால், இந்தத் துயரமெல்லாம் சாமானியர்களுக்குத்தானே? முற்றும் துறந்தவர்களுக்கு ஏது துயரம்? ராஜாவைப் போன்று வாழ்ந்த ஊரில் ஒரு யாசகனைப் போன்று மகிழ்வுடன் நாடோடியாகத் திரிந்தார். ஏளனப் பார்வைக்குப் பதிலாக அவரது ஊர் மக்களும் அவரை மிகவும் மரியாதையுடன் போற்றிக் கொண்டாடினர்.

தன்னறிவைக் கொடுத்துத் தன்னைப் பார்க்க வந்தவர் அனைவரின் அறிவையும் பெருகச் செய்தார். பள்ளிகளில் அவர் ஆற்றும் உரையைக் கேட்பதற்கு மன்னர் முதல் சாமானியர்வரை கூடுவது அப்போது வழக்கமாக இருந்தது. 810-ம் வருடம் நடந்த ஒரு போரில் அம்புகளின் தாக்குதலுக்குள்ளானார். அருகிலிருந்த தன் உறவினரிடம் “உன் மனைவியுடன் முதல்முறையாக உணர்ந்த இன்பத்தை இப்போது நீ உணர்கிறாயா?” என்று கேட்டுள்ளார்.

அந்த உறவினர் பயத்துடன் ‘இல்லை’யென்று சொன்னார். ஆனால், ஷகீக்கின் செவிகளுக்கு அது கேட்காமலே போயிற்று.

(மெய்ஞானம் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்