கிறிஸ்துவின் தானியங்கள்: புறாக்களைப் போல நடந்துகொள்ளுங்கள்

By அனிதா அசிசி

யேசு யூதேயாவில் இருந்த எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் போதித்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். நோய்களையும் பலவீனங்களையும் குணமாக்கினார். மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, அவருடைய மனம் உருகியது. ஏனென்றால், மேய்ப்பர் இல்லாத ஆடுகளைப் போல அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தனர். அவர் தன்னுடைய சீடர்களிடம், “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானராகிய பரலோகத் தந்தையிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று கூறினார்.

பன்னிரண்டு சீடர்கள்

அதன் பின்னர் தன் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்தார். மனிதர்களைப் பிடித்த பேய்களை விரட்டுவதற்கும் எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும் குணமாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் இவைதாம்: பேதுரு என்ற சீமோன், இவருடைய சகோதரர் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, இவருடைய சகோதரர் யோவான்; பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா என்றும் இயேசு உயிர்த்தெழுந்தபின் அவரது காயங்களைத் தொட்டுணர்ந்த பின்னரே நம்பியதால் சந்தேகத் தோமா என்றும் இவர் அழைக்கப்பட்டார்; வரி வசூலிப்பவரான மத்தேயு; அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு; பக்தி வைராக்கியமுள்ளவர் என்று அழைக்கப்பட்ட சீமோன், இயேசுவைப் பின்னர், காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து ஆகியோர்.

இலவசமாகப் பெற்றீர்கள்,

இலவசமாகக் கொடுங்கள்

தன் சீடர்களை அனுப்பி வைக்கும்முன் அவர்களுக்கு இயேசு விரிவான அறிவுரைகளைக் கொடுத்து அனுப்பினார்: “பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது எனப் பிரசங்கியுங்கள். நோயாளிகளைக் குணப்படுத்துங்கள், இறந்தவர்களை உயிரோடு எழுப்புங்கள், தொழுநோயாளிகளைச் சுத்தமாக்குங்கள், பேய்களை விரட்டுங்கள். இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள். தங்கம், வெள்ளி, அல்லது செப்புக் காசுகளை உங்களோடு கொண்டு போகாதீர்கள். பயணத்துக்காக உணவுப் பையையோ இரண்டு உடைகளையோ செருப்புகளையோ தடியையோ எடுத்துக்கொண்டு போகாதீர்கள். ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.

நீங்கள் எந்த நகரத்துக்குப் போனாலும், எந்தக் கிராமத்துக்குப் போனாலும், தகுதியுள்ளவர் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவருடனேயே தங்கியிருங்கள். ஒரு வீட்டுக்குள் செல்லும்போது, அங்கிருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் வாழ்த்துச் சொன்னபடி அவர்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்; தகுதியில்லாதவர்களாக இருந்தால், அந்தச் சமாதானம் உங்களிடமே திரும்பட்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது உங்களுடைய வார்த்தைகளைக் கேட்காவிட்டால், அந்த வீட்டையோ நகரத்தையோ விட்டுப் புறப்படும்போது உங்களுடைய பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்த நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும்” என்றார்.

மக்கள் உங்களை வெறுப்பார்கள்

பின்னர் செல்லும் நகரங்களில் மக்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை அவர் எடுத்துக் கூறினார். “இதோ! ஓநாய்கள் நடுவில் ஆடுகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகிறேன்; அதனால், பாம்புகளைப் போல் எச்சரிக்கையாகவும் புறாக்களைப் போல் கள்ளம் கபடம் இல்லாமலும் நடந்துகொள்ளுங்கள். அதே நேரம் கவனமாக இருங்கள்; ஏனென்றால், மனிதர்கள் உங்களை உள்ளூர் நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்; தங்களுடைய ஜெபக்கூடங்களில் உங்களை முள்சாட்டையால் அடிப்பார்கள். அது மட்டுமல்ல; நீங்கள் என்னுடைய சீடர்களாக இருப்பதால், உங்களை ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள், அப்போது நீங்கள் அவர்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் சாட்சி கொடுக்க முடியும். ஆனாலும், அவர்கள் உங்களை அதிகாரிகள் முன் நிறுத்தும்போது, எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்குத் தந்தையால் அருளப்படும். அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும். சகோதரனின் சாவுக்குச் சகோதரனும் பிள்ளையின் சாவுக்கு அப்பாவும் காரணமாக இருப்பார்கள். பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழுந்து, அவர்களுடைய சாவுக்குக் காரணமாவார்கள். நீங்கள் என் சீடர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்; ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்பு பெறுவார். அவர்கள் உங்களை ஒரு நகரத்தில் துன்புறுத்தினால், வேறொரு நகரத்துக்குத் தப்பித்து ஓடுங்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனித குமாரன் வருவதற்குள் உலகில் உள்ள எல்லா நகரங்களிலும் பிரசங்கித்து முடித்திருக்கவே மாட்டீர்கள்” என்றவர், ஊழியப் பயணத்தில் எவ்வாறு பிரசங்கிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

சத்தமாகவும் வெளிப்படையாவும்

பிரசங்கியுங்கள்

“மூடி மறைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, ரகசியமாக வைக்கப்படுகிற எதுவும் வெட்ட வெளிச்சமாகாமல் போகாது. நான் உங்களுக்கு இருட்டில் சொல்வதை நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; காதோடு காதாகச் சொல்வதை விட்டு வீட்டின் மாடிகளில் நின்று உரக்கப் பிரசங்கியுங்கள். உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள். மனிதர்களுக்கு முன்னால் என்னை ஏற்றுக்கொள்கிறவனை என் பரலோகத் தந்தைக்கு முன்னால் நானும் ஏற்றுக்கொள்வேன். என்மேல் காட்டும் பாசத்தைவிடத் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ அதிக பாசம் காட்டுகிறவனும் தன் மகனிடமோ மகளிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீடனாக இருக்க முடியாது. தன்னுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் எனக்குச் சீடனாக இருக்க முடியாது. தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள முயல்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகத் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்