விழுப்புரத்தில் பழமையான செங்கல் கோயில், சிற்பங்கள் கண்டறிவு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பழமையான செங்கல் கோயில், சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் வரலாற்று ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வு செய்தார். அங்கு பழமையான செங்கல் கோயில் மற்றும் ஐயனார், சப்த மாதர் சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது: விழுப்புரம் நகரம் மாம்பழப்பட்டு சாலையில், காட்பாடி ரயில்வே கேட் வடக்கில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு திறந்த வெளியில் ஐயனார் கோயில் அமைந்துள்ளது. இந்த ஐயனார் தட்டாம் பாளையத்து ஐயனார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வழக்கமான தனது இணையர் இல்லாமல் தனியாக அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.

அவருக்கு அருகிலேயே சப்தமாதர் சிற்பங்கள் வடக்கு நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் அனைத்தும் ஒரே பலகைக் கல்லில்கலையம் சத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இவர்களை செல்லியம்மன் என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இச்சிற்பங்கள் காணப்படும் அதே வளாகத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் செங்கல் கோயில் ஒன்றும் காணப்படுகிறது.

கலை நயத்துடனும் வேலைப் பாடுகளுடனும் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் உள்ளே தற்போது சிற்பங்கள் எதுவும் இல்லை. புற்றுகள் நிறைந்துள்ள இக்கோயிலை அம்மன் கோயில் என வழிபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் செங்கல்லால் ஆன சுவர்களும் உள்ளன.

இங்குள்ள ஐயனார், சப்த மாதர் சிற்பங்கள் மற்றும் செங்கல் கோயில் ஆகியவை கி.பி.15-16ம் நூற்றாண்டுக்கு உரியவை என மூத்த கல்வெட்டு ஆய்வாளர் சு.ராஜ கோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பெரிய அளவில் கோயில் ஒன்று இருந்து மறைந்துள்ளது. தற்போது எஞ்சிய தடயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

இதைச் சார்ந்து ஓர் ஊரும் இருந்திருக்கலாம். விழுப்புரம் நகர எல்லைக்குள் இவை காணப்படுவது சிறப்புக்கு உரியதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE