பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று (நவ.20) மாலை தொடங்கியது.

ஆறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழா இன்று (நவ.20) மாலை 5.30 மணிக்கு நடந்த சாயரட்சை பூஜைக்கு பின் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவார பாலகர்கள், மயில்வாகனம், நவ வீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது.

கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்கச் சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7.30 மணிக்கு தங்கரதப் புறப்பாடு நடைபெற்றது. நவ.26-ம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 4.45 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு மற்றும் மலைக்கோயிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, மாலை 6.15 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE