திருச்செந்தூரில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி...: காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசுக்குப் புறப்பட்டு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகேயுள்ள திருக்கல்யாண மண்டபம் வந்தடைந்தார். மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனி சப்பரத்தில் எழுந்தருளி, தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார்.

இரவு தெற்கு ரதவீதி- மேல ரதவீதி சந்திப்பில் சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் கோயில் ராஜகோபுர வாயிலில் உள்ள திருப்பணி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று, மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE