திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நேற்று அதிகாலை நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த14-ம் தேதி தொடங்கியது. கடந்த15-ம் தேதி பிடாரி அம்மன் உற்சவம், 16-ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில்,கோயிலில் நேற்று கொடியேற்றம்நடைபெற்றது.

இதையொட்டி, மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. மங்கல இசை ஒலிக்க, வேதமந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பின்னர்மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, `அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. முதல் நாளான நேற்று காலை வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்தனர். நேற்று இரவு மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 23-ம் தேதி மகா தேரோட்டம், 26-ம் தேதி மகா தீபம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கார்த்திகை தீபத் திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைவரை வருவதற்காக 180 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மலைஉச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைதரிசிக்க 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE