செ
ல்வம் உலகியல் தேவைகளுக்கானது. தாங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியலுக்கு ஏற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ இந்த உலகில் வாழ வந்தவர்கள் அனைவரும் தேடியே ஆக வேண்டியது செல்வம். அறிவும் அப்படித்தான். அறிவையும் எல்லோரும் தேடித்தான் ஆக வேண்டும். செல்வத்தைப் போலவே, தாங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியலுக்கு ஏற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ எல்லோரும் அறிவைச் சேகரிக்கத்தான் செய்கிறார்கள். என்றபோதிலும், செல்வச் சேகரமும் அறிவுச் சேகரமும் ஒரு மாதிரியானவை அல்ல. ஏன்? செல்வச் சேகரிப்பில் தன்முயற்சி மட்டும் போதுமானதில்லை. அதில் ‘ஊழ்வினை’ என்ற கண்ணுக்குத் தெரியாத அமைப்பும் உதவ வேண்டும். ஆனால், அறிவுச் சேகரிப்பில் தன்முயற்சி மட்டுமே போதுமானது; அதில் கண்ணுக்குத் தெரியாத எந்த அமைப்பும் உதவிக்கு வருவதுமில்லை; அறிவைத் தருவதுமில்லை.
முயற்சியின்றி அறிவு இல்லை
மகாபாரதக் கிளைக் கதை ஒன்றில் யவக்கிரீதன் என்ற ஒரு முட்டாள் கதாபாத்திரமுண்டு. தன்னை இகழ்கிறவர்கள் எல்லோரும் பாராட்டும்வகையில் தான் ஒரு அறிவாளியாகிவிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அறிவை வேண்டித் தவம் செய்தான். தவத்தை மெச்சி இந்திரன் வந்தான். ‘என்ன வேண்டும்?’ என்றான். யவக்கிரீதன் ‘அறிவு வேண்டும்’ என்றான். ‘அறிவு என்பது நீயாக முயன்று பெறுவது; என் வரத்தினால் அது வருவதில்லை’ என்று சொல்லி இந்திரன் போய்விட்டான். ‘அறிவு வரம் பெறுவதற்கு இன்னும் கடுமையாகத் தவம் செய்ய வேண்டும் போலிருக்கிறது’ என்று எண்ணியவாறே ஆற்றங்கரையில் நடந்துகொண்டிருந்தான் யவக்கிரீதன். ஆற்றங்கரையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர் கரையிலிருந்த மணலைக் கையால் அள்ளி ஆற்றுக்குள் வீசிக்கொண்டிருந்தார். ‘என்ன செய்கிறீர்கள்?’ என்றான் யவக்கிரீதன். ‘ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டுகிறேன்’ என்றார் பெரியவர். யவக்கிரீதன் சிரித்தான்: ‘ஆற்றுக்குள் இறங்காமல் அணை கட்ட முடியுமா? அதுவும் மணலைக் கொண்டு? அதுவும் கையால் அள்ளி?’ என்று கேலி செய்தான். ‘அறிவைப் பெறுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், அதை வரத்தால் பெற்றுவிடலாம் என்று நீ நினைக்கும்போது, ஆற்றுக்குள் இறங்காமலே அணை கட்டிவிடலாம் என்று நான் நினைப்பது மட்டும் தவறாகுமா?’ என்று கேட்டுவிட்டுப் போனார் பெரியவர். அறிவு கண்ணுக்குத் தெரியாத அமைப்புகளால் அருளப்படுவதில்லை. தன்முயற்சியால் தெளியப்படுவது.
பேய் அறிவு எது?
செல்வத்தைச் சிறு செல்வம், பெருஞ் செல்வம் என்று வகைப்படுத்தலாம். அவ்வாறே அறிவையும் சிற்றறிவு, பேரறிவு என்று வகைப்படுத்தலாம். என்றபோதிலும், செல்வப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் ஒரே மாதிரியானவை அல்ல. ஏன்? செல்வப் பெருக்கம் அளவைப் பொறுத்தது. குறைய வைத்திருந்தால் சிறுசெல்வம்; நிறைய வைத்திருந்தால் பெருஞ்செல்வம். ஆனால், அறிவுப் பெருக்கத்தை அப்படிச் சொல்ல முடியாது. செய்திகளை அறிந்து வைத்திருக்கிறவன்தான் அறிவாளி என்றால் விநாடி வினா நிகழ்ச்சிகளில் நிறைய விடை சொல்கிறவர்களே பேரறிவாளிகள் என்று ஆகிவிடும். அறிவு என்பது அளவைப் பொறுத்ததில்லை; தன்மையைப் பொறுத்தது. அறிந்து வைத்திருக்கும் செய்திகளின் எண்ணிக்கை கணக்கில்லை; அறிந்து வைத்திருப்பது எதை என்பதுதான் கணக்கு.
நல்லது. எதை அறிந்து வைத்திருந்தால் அறிவு எனலாம்?
...தன்னை அறிவது அறிவாம் அஃதுஅன்றிப்
பின்னை அறிவது பேய்அறிவு ஆகுமே
(திருமந்திரம் 2318)
- என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர். தன்னையே தான் அறிந்து வைத்திருக்கிற அறிவுதான் அறிவு; தன்னை அறிகிற வேலையை விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் அறிகிற அறிவு பேய் அறிவு. அதென்ன பேய் அறிவு? பேய்கள் நிலைகொள்ளாமல் உழலும்; அலையும்; தவிக்கும். அவற்றுக்கு ஏதேனும் ஒரு பிடிமானத்தில் தங்களை நங்கூரம் இட்டு நிறுத்திக்கொள்ளத் தெரியாது. அதைப் போல, கண்டதையெல்லாம் அறிந்து, அறிந்ததை எல்லாம் தனக்கே உரித்தாக்கிக்கொள்ள நினைத்து அத்தனைக்கும் ஆசைப்பட்டு, அவற்றை அடைய நினைத்துப் பின்னால் ஓடி நடந்து, கிடைத்துவிட்டால் நுகர்ந்து சலித்து, கிடைக்காவிட்டால் வருந்தி இளைத்து, அறிய வேண்டியது எதை, மேலும் அலைபாயாமல் தன்னை நங்கூரம் இட்டு நிறுத்திக்கொள்வது எதில் என்று புரியாமல் தடுமாறி நிற்பது பேய் அறிவு.
தன்னை அறியவேணும் அகப்பேய்!
சாராமல் சார வேணும்!
பின்னை அறிவதுஎலாம் அகப்பேய்,
பேய்அறிவு ஆகுமடி!
(அகப்பேய்ச் சித்தர், 78)
என்று கருத்து மாறாமல், சொல் மாறாமல் திருமந்திரத்தை வழிமொழிகிறார் அகப்பேய்ச் சித்தர்.
தன்னை அறிந்து இன்பம்
உற வெண்ணிலாவே – ஒரு
தந்திரம்நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே
(திருவருட்பா, 2ஆம் திருமுறை)
என்று ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் ஒருவரான’ வள்ளலாரும் உடன்படுகிறார்.
தன்னை அறிதலை இன்னும் நியாயப்படுத்தி அழுத்துகிறார் திருமூலர்:
தன்னை அறியத் தனக்கு
ஒரு கேடு இல்லை;
தன்னை அறியாமல் தானே
கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்,
தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே.
(திருமந்திரம் 2355)
ஒருவர் தனக்கு வெளியில் உள்ள பொருட்களையெல்லாம் அறிவதைப் போலவே தன்னையும் அறிந்திருக்க வேண்டாமா? அறிதல் என்ற செயல்பாட்டைப் புறத்தில் உள்ள பொருட்களிலிருந்து தொடங்கினாலும், அறியும் பொருளாகிய தன்னையும் அதில் உட்படுத்திக்கொள்ள வேண்டாமா? ‘என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிற?’ என்று அடுத்தவரிடம் கேட்பவர் அடி முட்டாள் இல்லையா? தன்னையே தன்னுடைய குறைநிறைகளோடு தனக்குத் தெரியாதென்றால் பிறரையும் பிறவற்றையும் நான் அறிவதிலும் அறிக்கையிடுவதிலும் என்ன முழுமை இருக்க முடியும்? என் நிறையை நான் அறியாததால் அல்லவா மற்றவரைப் பெரியவராக எண்ணி அவர் காலில் விழுந்து வணங்குகிறேன்? என் குறையை நான் அறியாததால் அல்லவா மற்றவரைச் சிறியவராக எண்ணி அவரை என் காலில் விழச் செய்கிறேன்?
கருத்தை மேலும் கெட்டிப்படுத்துகிறார் திருமூலர்:
தானே தனக்குப் பகைவனும்
நட்டானும்;
தானே தனக்கு மறுமையும்
இம்மையும்;
தானே தான்செய்த
வினைப்பயன் துய்ப்பானும்;
தானே தனக்குத்
தலைவனும் ஆமே.
(திருமந்திரம், 2228)
அறிந்தவர்கள் சிலரைப் பகைவர்கள் என்றும் சிலரை நண்பர்கள் என்றும் குறித்து வைத்திருக்கிறவர்களே, நீங்கள் அறிக: உங்களுக்கு நீங்களே பகைவர்; உங்களுக்கு நீங்களே நண்பர். இப்பிறப்பில் நான் இவ்வாறு இருக்கக் காரணம் இது, மறுபிறப்பில் நான் வேறொன்றாய்ப் பிறக்க வழிசெய்வது இது என்று கணக்குப் பார்க்கிறவர்களே, நீங்கள் அறிக: இப்பிறப்பில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, மறுபிறப்பில் என்னவாக ஆகப் போகிறீர்களோ, அனைத்துக்கும் காரணம் நீங்களே. அதற்கான வினையைச் செய்தவரும் நீங்களே; அந்த வினையின் பயனை நுகர்பவரும் நீங்களே. ஆகவே, மரியாதைக்குரியவர்களே! உங்களுக்கு ஆணையிடுகிற, உங்களைச் செயல்படுத்துகிற தலைவர் நீங்களே. அதை அறியாமல் பிறரைத் திட்டாதீர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
எனவே, கேடு என்பது தன்னை அறியாதிருப்பது. நன்மை என்பது தன்னை அறிவது. தன்னை அறிக. தன்னை அறியும் அறிவை அறிக. அறிந்துவிட்டால், போற்றுவதும் போற்றப்படுவதும் தூற்றுவதும் தூற்றப்படுவதும் என்று எல்லாமும் தனக்குள்ளே இருப்பது விளங்கும். தன்மதிப்பென்னும் சுயமரியாதை, தன்னை அறிவதிலிருந்தே முளைக்கிறது.
(அறிதல் விகாசம் பெறும்) தொடர்புக்கு:
arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago