மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு உற்சவம் தொடக்கம்: பக்தர்கள் மாலை அணிய, இருமுடி கட்ட ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன்கோயிலில் பக்தர்கள் மாலை அணியவும், இருமுடி கட்டிக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்பவர்கள், கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவது வழக்கம். இன்றுகார்த்திகை மாதப் பிறப்பு என்பதால், பல கோயில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு மஹோத்சவம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, இங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலில் அதிகாலை 4.30 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் மாலை அணிந்து கொள்ளலாம்.

அதிகாலை 5.30 மணியில் இருந்து இருமுடி கட்டிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருமுடி கட்டுவதற்கு முன்பு கோயிலின் டிக்கெட் கவுன்ட்டரில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மாலை அணிவது, இருமுடி கட்டிக் கொள்வதற்கு தேவையான மாலை, வேட்டி, துண்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கோயில் வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். நவ.17-ம் தேதி (இன்று) தொடங்கி மகரவிளக்கு பூஜை நடைபெறும் ஜன.15-ம் தேதி வரை கோயிலில் தினமும் மாலை 6.40 மணிக்கு ஐயப்ப பக்தர்களின் கற்பூர ஜோதி வழிபாடும், தொடர்ந்து,கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த நாட்களில் மகாலிங்கபுரம் ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறும். இதற்கும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாக மேலாளர் அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE