மாயூரநாதர் கோயில் துலா உற்சவ தேரோட்டம்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயில் துலா உற்சவ தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை உடனுறை மாயூர நாதர் கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நவ.13-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருத்தேருக்கு எழுந்தருளினார். புதிதாக செய்யப்பட்டுள்ள 2 சிறிய தேர்களில் வள்ளி,தெய்வானை சமேத முருகப் பெருமான், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பல வாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். சிறப்பு மிக்க துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி இன்று (நவ.16) காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வதானேஸ்வரர் கோயிலில்...: இதேபோல, மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளியதும், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE