சேந்தன் எனும் சிவபக்தன். விறகு வெட்டி. அதை விற்று, காசாக்கி, பிறகு உணவாக்கி... எனும் சாதாரண வாழ்க்கை. ஆனாலும் தினமும் சிவனடியார் ஒருவருக்காவது உணவு வழங்கிவிடவேண்டும், சேந்தனுக்கு. இல்லையென்றால் தூக்கமே வராது அவனுக்கு!
ஒருநாள் மழை. கடும் மழை. இயல்பு வாழ்க்கை பாதித்தது. விறகு வெட்டமுடியவில்லை. அப்படியே வெட்டினாலும் முழுக்க நனைந்திருந்ததால், விற்கவே இல்லை. விற்றால்தான் காசு கிடைக்கும். காசு கிடைத்தால்தான் பசியாறமுடியும். முக்கியமாக, சிவனடியாருக்கு உணவு வழங்கமுடியும். தவித்துப் போன சேந்தன், கேழ்வரகுதான் இன்றைக்கு என தேற்றிக் கொண்டான். கேழ்வரகில் களி செய்தான். ‘அப்பாடா... சிவனடியாருக்கு உணவு தயார்’ என பூரித்தான். ஆனால் சிவனடியார்?
அப்போது வந்தார் சிவனடியார் ஒருவர். சேந்தன் சிவனடியாரை வரவேற்றான். கைகூப்பினான். விழுந்து வணங்கினான். சிவனடியாராக வந்த சிவபெருமான், களியை எடுத்து, ரசித்து ரசித்துச் சாப்பிட்டார். ருசித்து ருசித்துச் சாப்பிட்டார். வார்த்தைக்கு வார்த்தை பாராட்டினார். வாய்க்கு வாய் பாராட்டினார். ‘இது களியமுது’ என புகழ்ந்தார். நெகிழ்ந்து நெக்குருகிப் போனான் சேந்தன்! மீண்டும் விழுந்து வணங்கினான்.
மறு நாள். விடிந்தது. பிரமாண்டமான சிதம்பரம் கோயிலின் நடை திறக்கப்பட்டது. தீட்சிதர்கள் சிவபூஜைக்காக, சந்நிதி சந்நிதியாகத் திறந்து, பூஜை கைங்கர்யத்தில் இறங்கினார்கள். அப்போது, சிவனார் குடிகொண்ட கருவறைக் கதவைத் திறந்தார்கள். ஆச்சரியம். பிரமித்துப் போய் அப்படியே நின்றார்கள்.
கருவறை வாசலில் களி. மூலவரின் திருவாயில் களிப் பருக்கைகள். திருக்கரத்தில் களி. சந்நிதியில் எங்கு திரும்பினாலும் களியமுது!
‘இதுவரை இந்த உணவை இறைவனுக்குப் படைத்ததே இல்லையே... எப்படி இப்படி?’ குழம்பினார்கள். தவித்தார்கள் தீட்சிதர்கள். ஊர்மக்களுக்கு சேதி பரவியது. மன்னனுக்கும் சென்றது. அதனிடையே மன்னனுக்கு கனவு. கனவில் வந்த ஈசன், சேந்தனின் களியமுதையும் அதன் ருசியையும் அவனுடைய பக்தியையும் தெரிவித்தார்.
அன்றைய தினம், ஆலயத்தில்... ஸ்ரீநடராஜர் ரதோத்ஸவத்தில் பவனி வரும் வைபவம். மன்னனும் வந்திருந்தான். மக்களும் கூடியிருந்தனர். தேர் வடம் பிடிக்க மன்னன் உட்பட அனைவரும் ஆவல்கொண்டு இழுத்தனர். முதல்நாள் பெய்த மழையால், சேறாகிவிட்டிருந்தது. சேற்றில் சிக்கிக் கொண்டது தேர்ச் சக்கரம். ஒரு அடி கூட நகரவில்லை. நகர்த்த முடியவில்லை.
தேர் வடம் பிடிப்பவர்களில் ஒருவனாக சேந்தனும் நின்றிருந்தான். கூட்டத்துடன் கூட்டமாக நின்று, வடம் பிடித்தான். அப்போது, ‘சேந்தனாரே! என் மீது பல்லாண்டு பாடுங்கள். நீர் பல்லாண்டு பாடினால்தான் தேர் நகரும்’ என்று கோயிலில் இருந்த அனைவருக்குமாக அசரீரி கேட்டது. மன்னர், தீட்சிதர்கள், மக்கள் என அனைவரும் திகைத்துப் போனார்கள்.
யார் இந்த சேந்தன் என்று கூட்டத்தைக் கூட்டமாகப் பார்த்தார்கள். அன்று சேந்தன் எனும் ஏழை, சேந்தனார் என உலகத்தாரால் அறியப்பட்டான். களியமுதும் சிவனாருக்கு உரிய முக்கியமான நைவேத்தியமாக ஆனது!
‘சாமீ. நமக்கு பாட்டெல்லாம் வராது சாமீ’ என்றான் சேந்தன். ‘உன்னைத்தான் தெரியும் எனக்கு. பாட்டு தெரியாதே’ என்றான். ‘முடியும். பாடு. இன்று நீ பாடுவாய்’ என மீண்டும் கேட்டது அசரீரி!
’மன்னுக தில்லை...’ என்று கண்கள் மூடி, கரம் குவித்துப் பாடினான் சேந்தன். பிறகு அவர்...சேந்தனார்... பதிமூன்று பாடல்கள் பாடினார். மெய்யுருகிப் போனார்கள். சட்டென்று சகதியில் இருந்து நகர்ந்து முன்னேறியது தேர்!
அதுவரை சேந்தனாக இருந்தவன், சேந்தனார் எனப் போற்றப் பட்டார். அவரைச் சுற்றிக் கொண்டார்கள். காலில் விழுந்தார்கள். வணங்கினார்கள். அப்போதுதான் நேற்று துவங்கி இதோ... இப்போது வரை நடப்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து, உணர்ந்து, தெளிந்து, சிலிர்த்து உருகினார் சேந்தனார்!
மனிதர்களுக்குள் சாதாரணன், அசாதாரணமானவன் என்பதெல்லாம் உண்டு. ஆனால், ஏழையோ சாமானியனோ... அங்கே உண்மையான பக்தியே கடவுளைக் குளிர்விக்கும். மகிழச் செய்யும். அருள் செய்ய வழிவகுக்கும்!
சேந்தனாருக்கு, சிவபெருமானே வந்து அருள்புரிந்த நன்னாள்... மார்கழித் திருவாதிரைத் திருநாள். எனவே இன்றும் சிவாலயங்களில், மார்கழி திருவாதிரையின் போது, களி செய்து இறைவனுக்குப் படைத்து பிரசாதமாக வழங்குவது தொடர்கிறது.!
‘திருவாதிரைக்கு ஒரு வாய் களி! உண்ணாதவருக்கு நரகக் குழி’ என்பார்கள் முன்னோர்கள்!
மார்கழித் திருவாதிரை நன்னாள் நாளைய தினம் (2.1.18). சிவாலயத்துக்குச் சென்று ஆடல்வல்லானைத் தரிசிப்போம். களியமுது படைத்து வீட்டில் பூஜிப்போம். திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்... என்று அம்பலத்தான் பெயர்சொல்லித் துதிப்போம்.
யார்கண்டது? உங்கள் வீட்டுக் களியைச் சாப்பிட, வந்தாலும் வருவார் சிவனார்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago