கொளஞ்சியப்பர் கோயிலில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உள்ள கொளஞ் சியப்பர் கோயில் வளாகத்தில் உள்ள கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் பழமை வாய்ந்த கொளஞ்சிப்பர் கோயில் உள்ளது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோயில் வளாகத்தில் மூலவராக முருகன் வீற்றிருக்கிறார். இந்தக் கோயிலில் நம் மனதில் இருக்கும் குறைகளை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி அர்ச்சகரிடம் கொடுத்து கொளஞ்சியப்பரின் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து,

பின்பு ஒரு சிறிய நூலில் கட்டி, கோயில் வளாகத்தில் இருக்கும் வேலில் தொங்க விட்டால் நினைத்த காரியமானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. இந்த வேண்டுதலுக்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு அதிகளவில் பக்தர்கள் வருவதுண்டு. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் சில அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

போதிய பராமரிப்பின்மையால் அவை சேதமடைந்துள்ளது. குறிப்பாக கழிப்பறையை முகச்சுளிப்போடு பயன்படுத்தும் நிலை உள்ளது. அதேபோன்று முடிக்காணிக்கை செலுத்துவதும் மரத்தடியின் கீழ் தான் நடைபெறுகிறது. அதை சுகாதாரமான ஒரு இடத்தில் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கோயில் வளாகத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள மாணவர்கள் கருணை இல்லம் பூட்டியே கிடக்கிறது. பக்தர்கள் விடுதி இயங்குவதே இல்லை. மொத்தத்தில், தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோயில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் பழனியம்மாளிடம் கேட்டபோது, “கோயில் திருப்பணி நடத்த இந்து சமய அறநிலையத் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பக்தர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, கோயில் வளாகம் இனி தூய்மையாக பராமரிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE