நமக்கெல்லாம் திருப்பாவை தந்த ஆண்டாளை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை, பாசுரங்களால் பரந்தாமனை மெய்யுருகப் பாடிய ஆண்டாள் நாச்சியாரை நாம் கொண்டாட வேண்டாமா. அவளை ஆடிப்பூரத்தில் கொண்டாடுவது போல், கொண்டாடி மகிழ்வது போல், வணங்கிப் போற்றுவது போல், இன்னொரு தினமும் இருக்கிறது. அது... கூடாரை வல்லி விழா! இந்த விழா நாளைய தினம். அதாவது... மார்கழி 27ம் நாள். ஜனவரி 11ம் தேதி. நாளைய தினம் வியாழக்கிழமை நன்னாளில், ஆண்டாளைக் கொண்டாடுவோம்.
முன்னதாக, கூடாரைவல்லி வைபவம் நிகழ்ந்த காரணங்களைப் பார்ப்போம்.
'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ எனும் பாசுரம், மார்கழி மாதம் 27ம் நாள் அனுசந்தனம் செய்யப்படுகிறது. அதாவது இந்தப் பாடலைப் பாடி, திருமாலை வழிபடுவார்கள் பக்தர்கள். அதாவது நாளைய தினமான, ஜனவரி 11ம் தேதி.
ஆண்டாள்... எவ்வளவு சிறந்த பக்தை; எத்தனை நேர்த்தியாக தமிழ்மொழியை ஆட்சி செய்திருக்கிறாள் பாருங்கள்.
முதல் ஐந்து பாடல்களில், நோன்பு நோற்பதன் மாண்பைக் கூறுகிறாள் . அடுத்து, ஆறு முதல் பதினைந்தாம் பாடல் வரை கண்ணனது லீலாவினோதங்களை விவரிக்கிறாள். அறியாமையில் மூழ்கி, உறங்கிக் கொண்டிருக்கும் ஆயர்குலப் பெண்களை உறக்கத்தில் இருந்து விழித்தெழப் பாடுகிறாள். இறைவனின் அனுபவங்களைப் பெறாமல் அறியாமையில் தவழும் மானிடர்களை விழித்தெழக் கூறுவதாக அமைந்துள்ளன இந்தப் பாடல்கள்!
பதினாறாம் பாசுரம் முதல் இருபத்தி ஐந்தாம் பாசுரம் வரை, கண்ணனின் மாளிகையிலும் மற்றும் சுற்றுப் புறத்திலும் இருக்கும் பலரையும் துயிலெழப் பாடுகிறாள். அதாவது, நந்தகோபன், வாயிற்காப்போன், யசோதாபிராட்டி, நம்பின்னைபிராட்டி அதாவது திருமகள்... அதையடுத்து நிறைவாக கண்ணபிரான் ஆகியோரை துயிலெழுப்புகிறாள். இருபத்தி ஆறாவது பாசுரத்தில், கண்ணபிரானை நேரடியாக அழைத்து, நாங்கள் நோன்பு நோற்கத் தேவையானவற்றைப் பரிசாக அளீப்பாயாக என்கிறாள்.
இருபத்தி ஏழாம் நாள் பாசுரத்தில், அதாவது மார்கழி 27ம் தேதிக்கான பாசுரத்தில், கண்ணபிரான் தன் பேரருளை தங்களுக்குத் தந்துவிடுவான் என்கிற நம்பிக்கையான எண்ணத்தில், அவன் கைத்தலம் பற்றுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவனைக் கைத்தலம் பற்றினால், தாமும் ஓரளவேனும் அவனுக்கு ஒப்பாக, நிகராக, இணையாக இருக்கவேண்டுமே என நினைக்கிறாள்.
ஏனெனில், இரண்டாம் நாள் பாசுரத்தில், அவனுடைய நினைப்பில் வருந்தி கண்களுக்கு மை தீட்ட மாட்டோம், பெண்களுக்கே உரிய வகையில் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் சுபாவத்தில் இருந்து மாறுபட்டு, வளையல்கள் அணியாமல், பாலுண்ணாமல், நெய் சேர்த்துக் கொள்ளாமல், அழகிய ஆடைகளை உடுத்திக் கொள்ளாமல் இருப்போம் என்று உறுதிபடச் சொல்கிறாள்.
ஆனால், 26 நாட்கள் கழித்து, 27ம் நாளன்று பாடகம் என்னும் தண்டை (சிலம்பு) கால்களுக்கும் சூடகம் எனும் வளையல்களை கைகளுக்கும் அணிவோம். புஜகீர்த்தி எனும் தோள்வளை அணிவோம். காதுகளுக்கு அழகூட்டுவதற்காக, தோடுகள் அணிவோம். மேலும் முகத்தில் பொலிவூட்ட தோடுக்கு மேலாகவே, சிறிய பூப்போன்ற தோடு அணிந்துகொள்வோம்.
மேலும் காதுகளில் உள்ள தோடுகளின் பாரம் தாங்காமல், காது இழுத்துக் கொண்டு போகுமாம். அதைச் சரிசெய்ய, ‘மாட்டல்’ எனும் அணிகலன், கழுத்தில் பலவிதமான ஆரங்கள், மணிமாலைகள் அணிந்துகொள்வார்களாம்! புத்தாடையை உடுத்திக் கொள்வோம். கூந்தலுக்கு நறுமணம் கமழும் மலர்களைச் சூடிக்கொள்ளலாம் என்கிறாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்!
இவையெல்லாம் யாருக்காக?
கண்ணபிரான் எம்மைக் காண , என்னுடைய வேண்டுகோளை ஏற்று, தன் திருமாளிகையை விட்டு நேரில் வர இருக்கிறான். ஆகவே, அவன் பார்க்கும் போது, நாம் அமங்கலமாக இருக்கக் கூடாது. அவனுடைய கண்களுக்கு நிறைவாக, கண்டதும் மனம் பூரித்து, நெகிழ்ந்து, என்னை அவன் ஆட்கொள்ளவேண்டும். இதற்காகத்தான் இத்தனை அலங்காரங்களும் பண்ணிக் கொள்கிறாளாம் ஆண்டாள்!
வேண்டுகோளை ஏற்று, கைத்தலம் பற்ற இருக்கிறான் என்பது உறுதியாகி விட்டதால், பாவையர் அனைவரும் புத்தாடை அணிந்து, அழகாக அலங்கரித்துக் கொண்டு, பால்சாதம் மூடும்படியாக நெய் விட்டு பால் சாதம் செய்து, அதைக் கண்ணனுக்கு படைத்து, அனைவரும் சேர்ந்து கையில் எடுத்தால், முழங்கை வரை வழியும் நெய் கொண்ட பால் சோறை அனைவரும் கூடியிருந்து சாப்பிட்டு , கிருஷ்ணானுபவத்தை மகிழ்வோம் வாரீர் என அனைவரையும் அழைக்கிறாள் ஆண்டாள் எனச் சொல்லிப் பூரிக்கிறார் மதுரை அழகர்கோவில் ஸ்தானீக அர்ச்சகர் அம்பி பட்டாச்சார்யர்.
திருமாலான கண்ணனையே மணாளனாக அடைய வேண்டி, ஆண்டாள் எனப்படும் கோதை நாயகி, பல்வேறு பாசுரங்கள் இயற்றியுள்ளார். அவையெல்லாம் நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. இது நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதி. அதில், கண்ணனையும் அழகரையும் அரங்கனையும் போற்றிப் பாடியிருக்கிறார் ஆண்டாள்.
ஆண்டாளின் குலதெய்வம் கள்ளழகர். அதாவது பெரியாழ்வாரின் குலதெய்வம் கள்ளழகர். ஆகவே, கள்ளழகர் குறித்துப் பாடுகிறாள். அதாவது, மகாவிஷ்ணுவையே மணாளனாக அமைய வேண்டும் என்கிற கோரிக்கையை அழகரிடம் முன்வைக்கிறாள்.
‘நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடா நிறைய வெண்ணைவாய் நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைய அக்காராஅடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கோளே!’ என்கிறாள்.
அதாவது, ‘நூறு தடா நிறைய வெண்ணெய் பரவி வைத்தேன். நூறு அண்டா நிறைய வெண்ணெய் நைவேத்தியம் செய்தேன்’ என்கிறார். ‘நூறுதடா நிறைய அக்கார அடிசில் சொன்னேன். அதாவது நாம் நமது குலதெய்வத்துக்கு பொங்கலிடுவது போல், ஆண்டாள் , தன்னுடைய ஆசை பூர்த்தியானால், அழகருக்கு (பால் பொங்கல் போல்), அக்கார அடிசில் நூறு தடாவில் வைப்பேன் என உறுதியளிக்கிறாள்.
ஆண்டாள், அழகரிடம் விண்ணப்பித்த சிறிது காலத்திலேயே அரங்கனுடன் இரண்டறக் கலந்துவிட்டார். எனவே, அவளது ஆசையை, வேண்டுதலை, நேர்த்திக்கடனைச் செலுத்தமுடியவில்லை அவளால்! அதாவது, அக்கார அடிசில் சமர்ப்பிக்கவில்லை.
ஆயிற்று. ஒருவருடமா.... நூறு வருடமா. 2,000 வருடங்கள் ஓடின. அதாவது, ஆண்டாள் காலத்துக்கு சுமார் 2,000 வருடங்களுக்குப் பின்னர் பிறந்த உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் அபிலாஷையை அறிந்து கொண்டு, அவளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், அழகருக்கு முன்பாக வந்து அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, ‘நூறு தடா அக்கார அடிசில்’ நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார்.
பிறகு, அந்தப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல... அங்கே ஆண்டாளும் வயது வித்தியாசம் பார்க்காமல், உடையவரை... ‘அண்ணனே...’ என்று அழைத்தாராம்! ’பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே’ - ஒரு பாவையாக இருந்தபோது, அவளது மனோபீஷ்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியவர் தகப்பன். அதையடுத்து தமையன். எனவே ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாள் ஆண்டாள்!
அன்று முதல், கூடாரவல்லி என்றும் 27ம் நாள் பாசுரத்தில், ’பால் சோறு மூட நெய் பெய்து’ என்று இருப்பதால், அக்கார அடிசிலான பால் சோறு, நூறு தடாவில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில், கள்ளழகருக்கு நடைபெற்று வருகிறது.
இதையே பிற்காலத்தில் ஏனைய கோயில்களிலும் கொண்டாடத் தொடங்கினார்கள்.
கூடாரவல்லி தினம் என்றால், கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக ஆண்டாள் உறுதியாக நம்பிய நன்னாள். ஜீவாத்மா - பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது என உறுதி என்பதை நிருபீத்த வைபவம்!
எனவே இந்த நாளில், நாளைய தினத்தில், அனைவரும் இல்லங்களிலும் அருகில் உள்ள கோயில்களிலும் பால்சோறு எனப்படுகிற அக்கார அடிசில் செய்து, பகவானுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தார் அனைவரையும் அழைத்து பகிர்ந்து வழங்குங்கள். பெண்கள் புத்தாடை அணிந்து கொள்வதும் அணிகலன்கள் அணிந்து கொள்வதும் சுபிட்சத்தைக் கொடுக்கும். ஆண்டாளின் மன விருப்பத்தை நாராயணன் நிறைவேற்றித் தந்தருளியது போல், நம் விருப்பங்களை அந்த ஆண்டாளே நிறைவேற்றி அருள்வாள்.
முடிந்தால், ஆண்டாளுக்கு அழகாய் ஒரு புடவை எடுத்து சார்த்துங்கள். ரோஜாவும் சாமந்தியும் முல்லையும் தாமரையும் என மலர்கள் சூட்டுங்கள். மகிழ்ந்து போவாள் ஆண்டாள்.
’மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேரொ லெம்பாவாய்; எனும் பதத்தின் மூலம், ஆண்டாள் உலக ஒற்றுமையை சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறாள். அதாவது இறைவன் முன்னே அனைவரும் சமம் எனும் உணர்வை வலியுறுத்தியவள். நமக்கெல்லாம் வழிகாட்டி!
அதன் பொருட்டே, வைணவத் தலங்களில் சமதர்ம சமுதாயம் எனும் அடிப்படையில், காலை மாலை வேளைகளில், ஆண்டாளின் பாசுரமும் திவ்விய பிரபந்தப் பாசுரங்களும் பாடப்படுகின்றன. பிறகு பக்தர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்து (இதை கோஷ்டி விநியோகம் என்பர்) பிரசாதங்களை விநியோகம் செய்யும் மரபு உண்டாயிற்று. அந்த சமயத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், அறிவுடையார், அறிவிலார், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல், அனைவரும் ஒன்றாகப் பாடி பகவானுக்கு அமுது செய்த பிரசாதங்களை உண்டு மகிழும் வழக்கம், நாம் பெற்றது ஆண்டாளால்தான் என்கிறார் மதுரை அம்பி பட்டாச்சார்யர்.
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கேகண்ணி உகந்தளித்தாள் வாழியே!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago