கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்: தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் சிறப்பு வழிபாடு

By செய்திப்பிரிவு

அரியலூர்/தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று பிரம்மாண்ட முறையில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 100 மூட்டை பச்சரிசியால் சமைக்கப்பட்ட சாதம், பதிமூன்றரை அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரர் லிங்கத்தின் மீது சாற்றப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், மாலையில் லிங்கத்தின் மீது சாற்றப்பட்ட சாதத்தை களைந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் காஞ்சி மட அன்னாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.

பெரிய கோயிலில்...: இதேபோல, தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்கள் வழங்கிய 1,000 கிலோ அரிசியைக் கொண்டுசமைத்த சாதம் மற்றும் வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு,பீட்ருட், அவரைக்காய் உள்ளிட்டகாய்கள், ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம் உள்ளிட்ட பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE