மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா: பெருவுடையாருக்கு 48 பொருட்களால் அபிஷேகம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1,038-வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களால் நேற்று அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் சதய நட்சத்திரத்தில், அவருக்கு சதய விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி,நடப்பாண்டு சதய விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று காலை மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில் ராஜராஜ சோழன்- உலகமாதேவி

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார். தொடர்ந்து, ராஜராஜசோழன் மீட்டெடுத்த திருமுறை நூல்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், திருமுறை நூல்களை யானை மீது ஏற்றி, மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவ பூத இசைக் கருவிகள் வாசிப்புடன், கோயிலில் இருந்து கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலை வரை ஊர்வலமாகக் கொண்டுசென்றனர்.

இந்த ஊர்வலத்தின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 108 ஓதுவார்கள் தேவாரப் பாடல்களை பாடினர். தொடர்ந்து, மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம், சதய விழாக் குழு, அரண்மனை தேவஸ்தானம் சார்பில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, கூட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆலக்குடி ராஜ்குமார், வெற்றித் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் செழியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். மேலும்,பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும்107 அமைப்புகளைச் சேர்ந்தோர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தஞ்சை பெருவுடையாருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

பின்னர், பெரிய கோயிலில் உள்ள ராஜராஜ சோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து, சிவச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தினர். அப்போது, ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 48 மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

மாலையில் இசை நிகழ்ச்சிகளும், இரவில் ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE