விருதுநகரில் பாரம்பரியத்தை பறைசாற்றும் புலியாட்டத்துடன் நடைபெற்ற மகர்நோன்புத் திருவிழா

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்கத் திருவிழாக்களில் ஒன்றான மகர்நோன்புத் திருவிழா புலியாட்டத்துடன் நடைபெற்றது.

வீர விளைட்டுகளில் தமிழர்கள் சங்க காலம்தொட்டு தலைசிறந்தவர்களாக இருந்து வருகின்றனர். காளையை அடக்கும் வீரமிகு ஆண்மகனுக்கே பெண் கொடுப்பது என்ற வழக்கமும் நம் முன்னோர்களிடம் இருந்து வந்தது. இளைஞர்கள் தங்களை வீரத்தை நிரூபிக்க கிராமத்திலுள்ள மைதானத்தில் இளவட்டக் கல் இருந்ததையும் நாம் அறிவோம். இளைஞர்களின் வீரத்தை நிரூபிப்பதற்காகவும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்களை வெளியில் அழைத்து வந்து ஊரார் பார்க்கச் செய்வதற்காகவுமே முன்னோர் காலத்தில் திருவிழாக்கள் நடத்தப்பட்டன.

ஆனால், மாற்றங்கள் பல வந்தாலும், இளைஞர்களின் வீரத்தை நிரூபிக்கும் வகையில் வீர விளையாட்டுக்களுடனும், பெண் பார்க்கும் படலத்துடனும் நடத்தப்படும் வினோத மகர் நோன்புத் திருவிழா விருதுநகரில் பாரம்பரியமாக ஆண்டுதோறும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜய தசமியன்று இத்திருவிழா அனைத்து சமுதாயத்தினராலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை அடுத்து நடத்தப்படும் பெரிய விழா இந்த மகர்நோன்புத் திருவிழா. விஜய தசமி நாளில் துர்கை அசுரனை வதம் செய்வதைக் கொண்டாடும் வகையில் நேற்றும் இவ்விழா விருதுநகரில் வீர விளையாட்டுக்களுடன் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்டது. இன்று காலை மதுரை சாலையில் வன்னி வனம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி சொக்கநாத சுவாமி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

மழை பெய்ய வேண்டியும், விவசாயம், தொழில்கள் சிறக்க வேண்டியும், ஊர் நன்மைக்காகவும் அம்புவிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தங்கக் குதிரை வாகனத்தில் அர்ந்தபடி சொக்கநாத சுவாமி எட்டுத் திக்கிலும் அம்பெய்தார். இந்த அம்பைப் பிடிப்பதற்கும், அதை எடுத்துச் செல்வதற்கும் பக்தர்களுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டது.

அதைத்தொர்ந்து, காலையில் தேவர்கள், யாதவர்கள், நாயக்கர்கள் தங்கள் சார்பில் குறிப்பிட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு புலி வேடமிட்டு தங்கள் பகுதியிலிருந்து மதுரை சாலையில் மேலதாளத்துடனும், வாத்தியங்களுடனும், வான வேடிக்கைகளுடனும் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

புலி வேடமிட்ட அந்த நபர் தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும் ஊர்வலத்தின்போது செய்து காட்டினார். அவரோடு வரும் சிறுவர், சிறுமியர்கள். இளைஞர்கள் சிலம்பம் சுற்றிக்கொண்டும், குஸ்தி போட்டுக்கொண்டும் வந்தனர். அவர்களோடு அச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியவர்களும் கலந்து கொண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

பல்வேறு இடங்களில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த புலிவேடமிட்ட நபர்கள், மாரியம்மன் கோயில் முன் வழிபட்டு மதுரை சாலை வழியாக வந்தனர். அப்போது, மேற்கு காவல் நிலையத்தில் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக புலிவேடமிட்ட நபர், காவல் துறை அதிகாரிகள் முன் வீர சாகசங்களை செய்து காட்டினார்.

தொடர்ந்து, பலர் சிலம்பம் சுற்றி காவல்துறை அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தினர். டிஎஸ்பி பவித்ரா உள்பட காவல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இதே போன்று, மாலையில் நாடார் சமூகத்தினர் புலி வேடமிட்ட நபருடன் ஊர்வலம் வருவர். அச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் மதுரை சாலையிலுள்ள நந்தவனத்திலும் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் கூடியிருப்பார்கள். இது நாடார் சமூகத்தினருக்கான பெண் பார்க்கும் படல நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE