அறுபடை வீடுகளாக கருதப்படும் முருகன் கோயில்களில் ரூ.599 கோடியில் 238 திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு: முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் கோயில்களில் மட்டும், திமுக ஆட்சியில் ரூ.599 கோடி மதிப்பில் 238 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கே.வி.முரளிதரன், ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளாக கருதப்படும் கோயில்களில், இந்த ஆட்சி அமைந்ததும், ரூ.599 கோடி மதிப்பீட்டில் 238 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதோடு, குன்றத்தூர் கோயிலில் ரூ.3.27 கோடி, மருதமலை முருகன் கோயிலில் ரூ.37 கோடி, வயலூர் முருகன் கோயிலில் ரூ.3 கோடி என அறுபடைகள் அல்லாத முருகன் கோயில்களில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 173 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிய வணிக வளாகம், பக்தர்கள் இளைப்பாறும் கூடம் என 24 பணிகள் நடந்து வருகின்றன. சென்னிமலைக்கு செல்லும் 4 கிமீ தூரம் உள்ள தார்சாலை ரூ.6.70 கோடியில் சீரமைக்கப் படவுள்ளது. திருப்பரங்குன்றத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு ரோப் கார் வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படவுள்ளது.

திமுக ஆட்சி அமைந்த பின், கோயில்களுக்குச் சொந்தமான ரூ.5,338 கோடி மதிப்புள்ள நிலங்களை, இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சொந்த கட்சிக்காரர்களே தவறு செய்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். முன்னாள் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு புகார்கள் உள்ளன.

மீடியாக்கள் மூலம் புகழ் பெற வேண்டும் என்பதற்காக சித்து வேலை செய்கிறார். இதுவரை வெளிநாட்டில் உள்ள 36 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 185 சுவாமி சிலைகள் கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலை திருட்டு நடக்காமல் இருக்க, இந்த ஆட்சியில் 245 உலோகத் திருமேனி அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE