ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே நூரோந்து சாமி மலையில் உள்ள சிவன் கோயிலில் எண்ணெய்க்குப் பதில் இளநீரை ஊற்றி பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர். மேலும், இங்குள்ள மடத்தின் மூலம் மலைவாழ் மக்களுக்குக் கல்வி, உறைவிடம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தேன்கனிக்கோட்டை வட்டம் கோட்டையூர் ஊராட்சியில் 3,600 அடி உயரத்தில் நூரோந்து சாமிமலை உள்ளது. இம்மலை மீது இருந்து பார்த்தால் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குள் பரந்து விரிந்து காவிரி ஆறு நுழையும் இயற்கை அழகை காணலாம். இம்மலையில் யானைகள், சிறுத்தைகளின் நடமாட்டமும், மூலிகைச் செடிகளும் நிறைந்துள்ளன.
இங்கு 850 ஆண்டுகள் பழமையான குகைக் கோயிலில் சிவலிங்கம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர் ஒருவர் வாழ்ந்துள்ளார். அந்த சித்தர் வைத்திருந்த பாத்திரத்தில் அள்ள அள்ள உணவு வந்துள்ளது. ஒருமுறை இதைச் சோதிக்க சிலர் முயன்றபோது ஒரு உருண்டை ராகி களியில் 100 பேருக்கு உணவு வழங்கியதோடு, அவரும் சாப்பிட்டுள்ளார்.
அதனால், 101 எண்ணைக் குறிக்கும் வகையில் நூரோந்து சாமி (கன்னட மொழியில்) என சித்தர் அழைக்கப்பட்டதாகவும், அதனால், அந்த ஊருக்கு நூரோந்து சாமிமலை என அழைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். குகைக் கோயிலிலிருந்து 3 கிமீ செங்குத்தான கரடுமுரடான சாலை வழியாகச் சென்றால் நூரோந்து சாமி சித்தரின் ஜீவ சமாதியும், மடமும் உள்ளது.
மேலும், இங்கு மடத்தின் 12 மடாதிபதிகளின் ஜீவ சமாதியும் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இரவு பகலாக உணவு அளிக்கப்பட்டு வருகிறது. குகைக் கோயிலில் சிவலிங்கத்தின் அருகே உள்ள விளக்கில் எண்ணெய்க்குப் பதில் தண்ணீர் மற்றும் இளநீர் ஊற்றி தீபம் ஏற்றப்படுகிறது. இங்கு தமிழகம், கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இளநீர் தீபம் ஏற்றி வழிபட்டுச் செல்கின்றனர்.
இது தொடர்பாக அங்குள்ள மடத்தின் 13-வது மடாதிபதி சதாசிவம் கூறியதாவது: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மலையாக இந்த மலை உள்ளது. நூரோந்து சாமி சித்தர் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். இதை அறிந்த மைசூர் மகாராஜா, சித்தரின் சேவையைப் பாராட்டி வாள் மற்றும் வைரம் வழங்கியுள்ளார். அந்த வாள் இன்றும் ஜீவசமாதியில் உள்ளது.
தற்போது, மடத்தின் மூலம் இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு உணவு, உடை, கல்வியை இலவசமாக வழங்கி வருகிறோம். மேலும், வீடு இல்லாத மலைவாழ் மக்களுக்கு வீடு கட்ட மடத்துக்குச் சொந்தமான நிலங்களை வழங்கி உள்ளோம். தற்போதும், இந்த மலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதற்கு சாட்சியாக குகைக் கோயிலில் எண்ணெய்க்குப் பதில் தண்ணீர் மற்றும் இளநீர் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டு எரிகிறது.
முக்கிய விசேஷ நாட்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் இளநீர் வாங்கி வந்து அகல் விளக்கை ஏற்றி வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago