சதுரகிரியில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்: வனத் துறை அனுமதி மறுப்பால் பக்தர்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆனந்தவல்லி அம்மன் நவராத்திரி திருவிழாவில் கடைசி 3 நாட்கள் பகலில் மட்டுமே வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாக வனத்துறை மீது பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனந்தவல்லி அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சுந்தரமகாலிங்கம் சந்நிதி பின் உள்ள மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளி கொலு வீற்றிருப்பார்.

அம்மனுக்கு முளைப்பாரி வளர்த்து, பொங்கலிட்டு, ஆடு பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர். விஜயதசமி தினத்தில் ஆனந்த வல்லி அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். கரோனா ஊரடங்கு காலத்திலும் கட்டுப் பாடுகளுடன் பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி நவராத்திரி விழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்பு பக்தர்கள் கோயிலில் இரவில் தங்க வனத்துறை தடை விதித்துவிட்டது. நவராத்திரி விழாவில் சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் 11 நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவும், கடைசி 3 நாட்கள் இரவில் தங்கி பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து வத்திராயிருப்பு வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பக்தர்கள் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க முடியாது என வனத்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இதை கண்டித்து வனத்துறை அலுவலகம் முன் பக்தர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சதுரகிரியில் நவராத்திரி விழா நேற்று காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. சுந்தர மகாலிங்கம் மற்றும் ஆனந்த வல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்பு ஆனந்தவல்லி அம்மன், மண்டபத்தில் எழுந்தருளினார். இந்நிகழ்வில் பங்கேற்க வனத்துறை தடை விதித்துவிட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

நவராத்திரி விழாவின் இறுதி 3 நாட்களான அக். 22, 23, 24-ல் பகலில் மட்டும் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தங்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாக வனத்துறை மீது பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சதுரகிரி நவராத்திரி விழா குறித்து மதுரை மாவட்டம் பேரையூரில் இன்று (அக். 16) அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

மேலும்