குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நாளை (அக்.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நடப்பு ஆண்டில் நாளை (அக்.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு இன்று (அக்.14) காலை 11 மணிக்கு காளி பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது. தொடர்ந்து நாளை அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, வீதி வீதியாக சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். அக்டோபர் 25-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனைகள் நடைபெறும். மேலும், தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கோயில் கலையரங்கத்தில் தினமும் மாலையில் திருமுறை இன்னிசை, சமய சொற்பொழிவு,கோலாட்டம், பரத நாட்டியம், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி இன்னிசை, வில்லிசை போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு உருவங்களில் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். அக்டோபர் 25-ம் தேதி அதிகாலையில் கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயிலில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

தொடர்ந்து காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதியுலா வந்து மாலையில் கோயிலை அடைந்தவுடன் கொடியிறக்கம் நடைபெறும். இதையடுத்து பக்தர்கள் தங்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ம.அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் பகவதி, கோயில் செயல் அலுவலர் இரா.இராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE