நிமித்தக் காரணம், உபாதானக் காரணம் என்று இரண்டு உண்டு. ஒரு பானை இருந்தால் அது உண்டாவதற்கு மண் என்று ஒரு வஸ்து இருக்க வேண்டும். மண்தான் பானைக்கு உபாதான காரணம். ஆனால் மண் எப்படிப் பானையாக ஆகும்? தானே அது ஒன்று சேர்ந்து பானையாகுமா? குயவன்தான் மண்ணைப் பானையாகப் பண்ண வேண்டியிருக்கிறது. மண்ணினால் ஒரு பானை உண்டாக வேண்டுமானால் அதற்குக் குயவன் என்ற காரணமும் வேண்டியிருக்கிறது. குயவன்தான் நிமித்தக் காரணம். ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் சொன்ன நிமித்தம் வேறு, இந்த நிமித்தம் வேறு.
அணுக்களை உபாதானக் காரணமாகக்கொண்டு ஈச்வரன் என்கிற நிமித்த காரணம் ஜகத்தைப் பண்ணியிருக்கிறது என்பது நியாய, வைசேஷிகக் கொள்கை.
மண்ணைப் பானையாக்குவதற்குக் குயவன் அவசியம் வேண்டும். அவன் இல்லாவிட்டால் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை என்ற விளைவை மண்ணிலிருந்து குயவன் உண்டாக்குகிறான் என்று சொல்வார்கள். இதற்கு ஆரம்பவாதம் என்றும், அஸத், கார்ய வாதம் என்றும் பெயர். ‘ஸத்’ என்றால் இருப்பது. ‘அஸத்’ இல்லாதது. வெறும் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை அதிலிருந்து விளைந்தது. இப்படித்தான் ஈச்வரன் அணுக்களைக் கொண்டே அணுக்களில் இல்லாத சிருஷ்டியைப் பண்ணியிருக்கிறான் என்கிறார்கள். இது நியாய கொள்கை.
‘ஐஸ்’ உத்தேசம் கொண்டதா
ஸாங்கியர்களுக்குக் கடவுளே கிடையாது என்று முன்னேயே சொல்லியிருக்கிறேன். அவர்கள் பிரகிருதி என்ற இயற்கையே ஜகத்தாகப் பரிணமித்தது என்பார்கள். இது இந்தக் காலத்து நாஸ்திகர்கள் சொல்வது மாதிரியே என்று நினைத்து விடக்கூடாது. ஏன் என்றால் நிர்குண பிரம்மத்தின் ஸ்தானத்தில் இருக்கப்பட்ட, சுத்த ஞான ஸ்வரூபமான ‘புருஷன்’ என்பவனையும் ஸாங்கியர்கள் சொல்வார்கள். ஜடமான ப்ரகிருதி இத்தனை ஒழுங்காக இயங்குவதற்கு புருஷனின் ஸாந்நித்தியமே காரணம் என்பார்கள்.
ஸாந்நித்தியம்தான் காரணம், புருஷனே நேராக ஈடுபட்டு ஸ்ருஷ்டியைச் செய்யவில்லை என்கிறார்கள். சூரிய வெளிச்சத்தில் தானாக பயிர் முளைக்கிறது, ஜலம் வற்றுகிறது, துணி காய்கிறது; ஸந்நிதி விசேஷத்தாலேயே இவை நடக்கின்றன. சூரியன் இங்கே உள்ள இன்ன பயிரை முளைக்க பண்ண வேண்டும், இந்த குட்டையிலுள்ள ஜலத்தை வற்ற வைக்க வேண்டும் என்று நினைத்தா இவை நடக்கின்றன? `ஐஸ்` கட்டியைத் தொட்டால் கை மரத்துப் போகிறது.
அதனால் அந்த `ஐஸ்` நம் கையை மரக்கப் பண்ண வேண்டும் என்று உத்தேசித்ததாகச் சொல்லலாமா? இப்படித்தான் புருஷன் ஸ்ருஷ்டியிலே கொஞ்சங்கூடப் பட்டுக் கொள்ளாவிட்டாலும் புருஷனிடமிருந்து பெற்ற சக்தியாலேயே பிரகிருதி இத்தனையையும் தன்னிலிருந்து தானே உண்டாக்கிக் கொள்கிறது. நிமித்த காரணம் என்பதாக ஈச்வரன் என்று ஒருவன் பண்ணவில்லை. பிரகிருதியே இப்படி ஸ்ருஷ்டியாகப் பரிணமித்திருக்கிறது என்பது ஸாங்கியர் கொள்கை. இதற்குப் பரிணாமவாதம் என்று பேர்.
ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான்
அஸத், கார்ய வாதத்திற்கு மாறாக ஸாங்கியர்கள் ஸத், கார்ய வாதத்தைச் சொல்கிறார்கள். உபாதானக் காரணமான மண்ணிலே இல்லாத பானையை நிமித்த காரணமான குயவன் பண்ணினான் என்று அஸத், கார்யவாதிகள் சொல்கிறார்களல்லவா? ஸத், கார்யவாதிகளான ஸாங்கியர்கள், “மண்ணுக்குள்ளே பானை முதலிலேயே இருக்கத்தான் செய்தது. எள்ளுக்குள்ளேயே இருக்கிற எண்ணெயைத்தானே வாணியன் செக்கிலே ஆட்டி வெளிக்கொண்டு வருகிறான்? அதுபோல மண்ணில் மறைமுகமாக இருக்கிற பானைதான் பிறகு காரியத்தால் வெளியிலேயும் பானையாக வருகிறது.
மண்ணை உபயோகித்தால்தானே பானை வருகிறது? எள்ளை வைத்துப் பானை பண்ண முடியுமா? அல்லது மண்ணைப் பிழிந்து எண்ணெய் எடுக்க முடியுமா? பானையிலே இருப்பதனைத்தும் மண்ணின் அணுக்கள்தான். அந்த அணுக்களின் ரூபத்தை இப்படி ஒழுங்கு செய்ததால் பானை என்ற ஒன்று உண்டாயிருக்கிறது” என்பார்கள்.
நம் ஆசாரியாள், “ஆரம்ப வாதமுமில்லை. பரிணாம வாதமும் இல்லை. பிரம்மம்தான் மாயா சக்தியால் இத்தனை ஸ்ருஷ்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரமாத்ம குயவனுக்கு வேறாக ஒரு மண்ணே இல்லை. அதனால் ஆரம்பவாதம் சரிப்படாது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது – பால் தயிராகப் பரிணமித்த மாதிரி என்றாலும் தப்பு. அப்படிச் சொன்னால் பால் தயிரானபின் தயிர்தான் இருக்குமே தவிர பால் இருக்காது. இம்மாதிரி பரமாத்மா, ஜகத் பரிணமித்தபின் இல்லாமல் போய்விட்டார் என்றால் அது மஹா தப்பல்லவா? அதனால் பரிணாமமும் இல்லை. தான் தானாக சுத்த ஞான ஸ்வரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே இன்னொரு பக்கம் மாயையால் ஜீவ-ஜகத்துக்களாகத் தோன்றுகிறார். இதெல்லாம் ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான், வேஷம்தான்.
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago