சதுரகிரியில் நவராத்திரி விழாவுக்கு அனுமதி கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலில் உள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி விழா கொண்டாட அனுமதி வழங்க கோரி, வீடுகளில் கருப்புக் கொடியேற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சதுரகிரி கோயிலில் ஆனந்தவல்லி அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில், பாரம்பரிய முறைப்படி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின் ஆடுகள் பலியிட தடை, இரவு வழிபாட்டுக்கு தடை என நவராத்திரி வழிபாட்டுக்கு வனத்துறை பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக். 15-ல் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

இதில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்நிதி பின்புறம் உள்ள கொழு மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளி கொழு வீற்றிருப்பார். நவராத்திரி விழாவில் தினசரி இரவு அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் முளைப்பாரி வளர்க்கப்பட்டு விஜய தசமி அன்று ஆனந்த வல்லியம்மன் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் அம்புவிடும் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இதற்காக விழாவின் கடைசி 3 நாட்கள் கோயிலில் இரவில் தங்கி அம்மனுக்கு பொங்கலிட்டு பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நவராத்திரி விழா குறித்த வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில் வட்டாட்சியர் முத்துமாரி வத்திராயிருப்பு வனச்சரகர் பிரபாகரன், சாப்டூர் வனச்சரகர் செல்லமணி மற்றும் ஏழூர் சாலியர் சமுதாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நவராத்திரி விழாவில் கடைசி 3 நாட்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் கோயிலில் இரவில் தங்கி பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அக்டோபர் 22, 23, 24 ஆகிய கடைசி 3 நாட்கள் மட்டும் காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்த வனத்துறை இரவில் தங்க தடை விதித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சுந்தர பாண்டியம் பகுதியில் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சத்திரப்பட்டி, புனல்வேலி உள் ளிட்ட ஏழூர் சாலியர் சமூக மக்களும் வீடுகளில் கருப்புக் கொடி யேற்றி உள்ளனர்.

இது குறித்து ஏழூர் சாலியர் சமுதாயத் தலைவர் சடையாண்டி கூறுகையில் நவராத்திரி விழாவில் 11 நாட்களும் சதுரகிரியில் சுவாமி தரிசனம் செய்யவும், கடைசி 3 நாட்கள் கோயிலில் இரவில் தங்கவும், பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்த வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துகிறோம்.

வனத்துறை, அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (அக்.12) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE