சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம்: மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம்: ‘சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில் எனது கோரிக்கைக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துள்ளார்,’ என சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எம்எல்ஏ அருள் கூறியதாவது: சட்டபேரவைக் கூட்டத்தில் நேற்று முன்தினம் நான் பேசும்போது, ‘வரும் 27-ம் தேதி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப் படவுள்ளது. விழாவில் தமிழில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். சேலம் மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தேன்.

இதற்கு பதில் அளித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பேசும் போது, ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 2014-ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணி தொடங்கப்பட்டது. திமுக அரசு வந்த பிறகு தான் 2 ஆண்டுகளில் திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. நான் மூன்று முறை கோயிலுக்கு சென்று ஆய்வு செய்தேன்.

வரும் 27-ம் தேதி காலை கோயில் கும்பாபிஷேக விழாவும், மாலையில் திருத்தேர் பவனியும் நடைபெறும். கோயில் கும்பாபிஷேக விழா தமிழில் நடத்தப்படும்,’ என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE