திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் விமரிசையாக நடைபெற்ற ராகு, கேது பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

கும்பகோணம்/மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழாவும், மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழாவும் நேற்று நடைபெற்றன.

ராகுதலமாகப் போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், துணைவிகள்நாகவல்லி, நாகக்கன்னியுடன் மங்கல ராகுவாக அருள்பாலிக்கிறார் ராகுபகவான்.

ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு ராகு பகவான் பின்னோக்கி நகர்வது, ராகு பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது.

அதன்படி, நேற்று பிற்பகல் 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, நேற்று உற்சவர்ராகுபகவானுக்கு சிறப்பு ஹோமம், மூலவர் ராகுபகவானுக்கு மஞ்சள், திரவியம், இளநீர், தேன், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து தங்கக் கவசம் சாத்தப்பட்டு, ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நாளை (அக்.9) முதல் அக்.11-ம்தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

இதேபோல, கேது பகவான், துலாம் ராசியில் இருந்து கன்னிராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள சவுந்தர நாயகிஉடனுறை நாகநாத சுவாமி கோயிலில் நேற்று பிற்பகல் 3.41 மணிக்குகேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு ஹோமம், பால், பன்னீர், இளநீர்,சந்தனம் உள்ளிட்ட 16 வகையானபொருட்களால் கேது பகவானுக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரத்தில் கேது பகவான் காட்சியளித்தார். தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளானபக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE