ஒ
ரு நகரப் பூங்காவின் மத்தியில் உள்ள பெரிய மரத்தில் அணில்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஒரு அணில் மட்டும் அங்கும் வரும் நபர்களிடம் நட்பு பாராட்டத் தொடங்கியது. அங்கு வருபவர்களும் அதைப் பார்த்து ரசித்து தின்பண்டங்களை அதனிடம் பகிர்ந்துகொண்டனர். அணில், சகஜமாக அவர்களுக்கு அருகிலேயே சென்று தின்பண்டங்களை எடுத்துக் கொறித்தது.
இதை தினம்தோறும் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன், கையில் வேர்க்கடலையுடன் ஒரு நாள் பூங்காவுக்கு வந்தான். அவன் அங்குள்ள இருக்கையொன்றில் அமர்ந்தான். வழக்கம்போல அணிலும் வந்தது. கையிலுள்ள பொட்டலத்திலிருந்து வேர்க்கடலையை எடுத்துப் பக்கத்தில் வைத்தான். அது சாப்பிட்டது. பிறகு கைக்கெட்டும் தூரத்தில் திரும்ப வேர்க்கடலையை வைத்தான். இன்னும் அருகே அணில் வந்தபோது அதைப்பிடித்து தனது பையில் போட்டு உடனடியாக பூங்காவிலிருந்து வெளியேறினான்.
அணிலைக் கொண்டு சென்ற மனிதன் தனது அறைக்குப் பின்னால் உள்ள மரத்தின் கீழே அணிலைக் கட்டி வைத்தான். அணிலின் கழுத்தில் கட்டப்பட்ட கம்பியின் மறுமுனையை ஒரு செங்கலில் பிணைத்து வைத்தான். கம்பி நீளும்வரை அது செல்லலாம். தினசரி ஒருமுறை அவன் மாலையில் பின்கதவைத் திறப்பான். அணிலுக்குத் தேவையான உணவைத் தருவான். பால், தண்ணீர் எல்லாம் கிடைக்கும். மீண்டும் பூட்டிவிடுவான். அந்த அறைக்குப் பின்னால் ஒரு வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அணிலுக்கும் அதற்கும் இடையே ஒரு வேலி இருந்தது. அணிலை நாய் பார்க்கும் போதெல்லாம் அணில் பீதியடையும் அளவுக்கு அந்த வளர்ப்பு நாய் குலைக்கும்.
அணில் பயந்து பழைய ஞாபகத்தில் மரத்தின் மேலேறும். ஆனால் ஒரு அளவுக்கு மேல் கழுத்து இறுகும். திரும்ப இறங்கி மரத்தின் அருகே அமைதியாக உட்கார்ந்து எஜமானனுக்காகக் காத்திருக்கத் தொடங்கும்.
பழகத் தொடங்கிய சிறை
அணிலுக்கு இந்த வாழ்க்கை பழகிவிட்டது. வேர்க்கடலை கிடைத்தது. தண்ணீர் கிடைத்தது. நாய் குரைக்கத் தொடங்கும் போது மட்டும்தான் அதை துர்கனவாக உணரும்.
இலையுதிர் காலம் வந்தது. மரங்களிலெல்லாம் இலைகள் உதிரத் தொடங்கின. அணில் இருந்த இடத்தின் மேலுள்ள விதானத்தில் சில அணில்கள் கூட்டமாக விளையாடிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் அணிலுக்குக் குதூகலமாக இருந்தது. அதன் எஜமானனை நினைத்தது. தனது சிறைப்பட்ட நிலையையும் எண்ணியது.
அடுத்த நாள் வந்தது. எஜமானன் வெளியே போன பிறகு, மரத்துக்குக் கீழே வந்த அணில் கூட்டம், கம்பியில் கட்டப்பட்டிருந்த அணிலின் கட்டை பற்களால் கடித்துத் துண்டித்தன. அப்போது எப்போதும் இல்லாத வகையில் அந்தப் பக்கத்திலிருந்த நாய் வேலியைப் பிய்த்துவிடுவதைப் போலக் குரைத்து வேலியைத் தள்ளியது.
சிறைப்பட்ட அணில் உடனடியாக மற்ற அணில்களுடன் மரத்தின் மேலேறி விடுதலைக் காற்றைச் சுவாசித்தது.
கோடைக்காலம் வந்தது. அணில்கள் எவற்றுக்கும் உணவே கிடைக்கவில்லை. சிறைப்பட்டு விடுதலையான அணில் மட்டும் ஒரு இடத்தில் அமர்ந்து முந்தைய கோடைக்காலத்தை மனதில் அசைபோட்டது. கட்டிப்போட்டாலும் எஜமானன் ஒருவன் தினசரி உணவு கொடுத்ததையும் எண்ணி சப்புக்கொட்டியது.
உடனே அதை விடுவித்த அணில் வந்து முதுகில் தட்டி, “இந்தச் சிந்தனையால்தான் நீ முன்பு சிறைப்பட்டாய். இனி அந்த நிலை வரவே கூடாது” என்று எச்சரித்தது.
இந்தக் கதையில் செங்கல் எது? அணிலைப் பயமுறுத்தும் நாய் எது? கோடைக் காலம் எது என்பதைத் தெரிந்துகொண்டால் நம்மைக் கட்டியிருக்கும் சவுகரியமாகத் தெரியும் கட்டுகள் எவையென்று தெரிந்துகொள்ளலாம். விடுதலை என்பது என்னவென்பதையும் அறியலாம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago