“வள்ளலாரை இளம் தலைமுறையினர் அறிய வேண்டும். ஏனெனில்...” - குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: “இன்றைய இளைய தலைமுறையினர் யார் வள்ளலார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்” என குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசினார்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இன்று தேசிய ரத்தக் கொடையாளர் தின விழா மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை நிர்வாகி பி.கண்ணன் முன்னிலை வகித்தார். ரத்த வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இவ்விழாவில், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ரத்தக் கொடையாளர்கள், ரத்ததானம் செய்த கல்லூரிகள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு விருதுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியது: “குன்றக்குடிக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. முன்னாள் முதல்வர் கருணாநிதி, குன்றக்குடி அடிகளார் இணைந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையை தொடங்கி வைத்தனர். மடாதிபதிகள் ரத்த தானம் செய்யலாமா என்ற சர்ச்சைகள் இருந்தபோது 2000-ல் மதுரை வில்லாபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய ரத்த தான முகாமில் பங்கேற்று முதன்முதலில் நாம் ரத்ததானம் செய்து தொடங்கி வைத்தோம்.

மருத்துவர்கள் அறிவுரைக்குப்பின் சற்று நிறுத்தியிருக்கிறோம். எல்லா எல்லைகளையும் தாண்டி மனிதத்தை காப்பதுதான் மடாலயத்தின் பொறுப்புகளில் இருப்பவர்களின் மரபு என்பதுதான் இன்று சமூகத்துக்கு சொல்லவேண்டிய செய்தி. இன்றைய இளைய தலைமுறையினர் யார் வள்ளலார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். செல்வத்தை, பதவியை அள்ளிக்கொடுப்பவர் வள்ளலார் அல்ல. தனது ஊனை உருக்கி, உயிரை உருக்கி யார் அன்பையும், கருணையையும், இரக்கத்தையும் இந்த சமுதாயத்திற்கு வழங்குகிறார்களோ அவர்கள்தான் வள்ளலார்.

வள்ளலார் உலகத்திற்கு அறிவித்தது அன்னதானம். இன்றைய சமூகம் விழிப்புணர்வோடு அளிப்பது ரத்ததானம், கண்தானம், உடல்உறுப்புகள் தானம். உலகத்தில் போரே வேண்டாமென்பதுதான் தமிழ் மண்ணின் மரபு. அதனால் தான் கம்பன் போரற்ற உலகம் வேண்டும் என்றான். இரண்டாம் உலகப்போர் நிகழாமல் அதன் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தால், இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு 5 அறைகள் கொண்ட வீட்டை கட்டித்தந்திருக்கலாம். 5 ஆயிரம் மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பொது சுகாதார மருத்துவமனையை கட்டித்தரலாமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

உக்ரைனுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் போரில் ஒரு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிறது. அதில் பிஞ்சுக் குழந்தையின் பெற்றோர்கள் சிக்கி இறந்து போனார்கள். பெற்றோரை இழந்து போர்க்களத்தில் தனியாய் அழுது கொண்டிருந்த குழந்தையிடம், ஒரு பத்திரிகையாளர் புகைப்படம் எடுத்துவிட்டு ஒரு கேள்வி கேட்கிறார். நீ ரஷ்யாவா, உக்ரைனா, முஸ்லீமா, கிறிஸ்தவரா எனக் கேட்டபோது அந்தக் குழந்தை அழுதது. பின்னர் ஆதரவாய் அரவணைத்துக் கேட்டபோது, அந்தக் குழந்தை பசியோடு இருப்பதாக கூறியது. பசிக்கு சாதியில்லை, மதமில்லை, ஏற்றத்தாழ்வுகள் இல்லை.

அதனால்தான் வள்ளலார்பெருமான் சொன்னார்... கோபம் கொண்டு கொதித்து சொன்னார்... பசி என்னும் பெரும் பாவிப்பயலே என்று சொன்னார். அதனால்தான் ஜீவகாருண்ய சீலராக போற்றப்படுகிறார். யாராயினும், எந்த தேசத்தவராயினும் அவரது பசித்தீயை அணைத்திடுக என்று சொன்னார். அந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். சமயம் என்பது மனிதத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதன் அடையாளம் தான் இந்த ரத்ததானம். இஸ்லாம் மதத்தில் இறைத்தூதர்களுக்கும் இறைவனுக்கும் நடக்கும் ஓர் உரையாடல் வரும். அதில், அடுத்தவர் துன்பம் கண்டு, துயரம் கண்டு, இடது கை கொடுப்பதை வலது கை அறியாமல் உதவுகிறார்களோ அவர்கள்தான் என் படைப்பில் வலிமை வாய்ந்தவர்கள் என்பார் இறைவன்.

கண்ணீர் வடிக்கும் கண்களை துடைக்கும் கரங்கள்தான் கருணையின் கரங்கள். மரணத்தின் உச்சத்தை தொடும்போதும் இன்னொரு உயிரைக் காப்பாற்றும் உன்னத பணிதான் ரத்ததானம் செய்யும் பணி. அந்த பணி செய்யும் இளைய தலைமுறையினரை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம். எல்லா தானங்களிலும் புனிதமான தானம் ரத்த தானம். இதை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நாட்டை, சமூகத்தை மனிதத்தை, மேம்படுத்துகிற பணியில் நம்மை அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றுவதற்குத்தான் இந்த அற்புதமான ரத்ததானம் முகாம்.

கர்ணன் எவ்வளவோ தானம் செய்தான். குறிப்பாக வெறும் ரத்தத்தை மட்டும் அவன் தானமாகத் தரவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய செயல்களின் தர்மத்தை, அறத்தை ரத்தத்தின் வழியேகடவுளுக்கே தானம் தந்தான். கடவுளுக்கே தந்த காரணத்தால்தான் கர்ணன் என்ற மனிதன் தன் கரம் உயர்ந்துநிற்க கடவுளின் கரம் தாழ்ந்திருக்க அந்த தானத்தை பெற்றான்.இதுதான் நாம் ஆற்றுகின்ற அறத்தின் வலிமை.

வலிமையுடைய அறத்தில் நாம் பணிகளை ஆற்றினால் நிச்சயம் இந்த மண்ணுலகம், பாரதி சொன்னதைப்போல கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு என்ற நிலையை அடைய முடியும். அப்படிப்பட்ட இலக்கை இளைய தலைமுறை அடைய வேண்டும்” என்று அவர் பேசினார். இதில், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மருத்துவமனை கிளை ஐஎம்ஏ தலைவர் எஸ்.செந்தில்குமார், செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் வி.எம்.ஜோஸ்,அரிமா ஆளுநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் ரத்த வங்கி மேலாளர் ரவி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்