பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா

By செய்திப்பிரிவு

மதுரை: பரவை கிராமத்தில் உள்ள முத்து நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பரவையில் முத்து நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா செப்டம்பர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த காப்புகட்டி விரதம் இருக்க தொடங்கினர். இதையடுத்து செப்டம்பர் 27 ம் தேதி முதல் தொடர்ந்து மண்டக படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க் கிழமை வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு புதன் கிழமை பரவை காவல்காரர்கள் வகையறா சார்பில் மண்டகப்படி நடை பெற்றது. அய்யனார் கோயில் பொங்கல், குதிரை எடுப்பு, பால்குடம் ஆகியவை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அன்று இரவு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காமதேனு வாகனத்தில் முத்து நாயகி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. நேற்று இரவு கருப்பணசாமி கோயில் பொங்கல், முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. அக்டோபர் 7-ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.

இதையடுத்து கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் திருவிழா நிறைவடைகிறது. புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு பெண்கள் கும்மியடித்தல் மற்றும் நாடகம், இசை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரவை, அதலை, பொதும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திருவிழாவில் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE