மகிழ்ச்சியின் சாவி மலைப்பிரசங்கம்

By அனிதா அசிசி

மனித நிலையிலிருந்து தெய்வீக நிலைக்கு மாறுவதை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சுட்டிக்காட்டுகிறது. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்றுக்கொண்ட நிலையைத் தீக்‌ஷை பெறுதலாக இந்து தர்மம் சுட்டிக்காட்டுகிறது. ஞானம் பெற்று நிர்வாணம் அடைதலைப் புத்த தர்மம் சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்தவம் ‘ஞானஸ்நானம்’ பெற்றுக்கொள்ளுதலைக் கடைப்பிடிக்கிறது.

இன்றைய மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் நாட்டுக்கும், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் எல்லையாக இருப்பது யோர்தான் நதி. இந்த நதியில் இறங்கி, யோவான் தீர்க்கதரிசியால் ‘ஞானஸ்நானம்’ எனும் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டார் இயேசு. அப்போது அவருக்குச் சுமார் 30 வயது. அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட பிறகே கிறிஸ்து ஆனார்; அதன் பொருள் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்.” (லூக்கா 3:21, 22) என்பதாகும். அதன் பிறகு மூன்றரை ஆண்டுக் காலம் இயேசு தெய்வீக நிலையில் நின்று போதனைகள் செய்யத் தொடங்கினார்.

அவரது போதனைகளில் மிகப் பெரியதாகவும் மிகமிக முக்கியமானதாகப் போற்றப்படுவது அவரது மலைப்பிரசங்கம் (Sermon on the Mount). மனித குலம் மகிழ்ச்சியான வாழ்வை அடைவதற்கான பாதையை அவர் மலைப்பிரசங்கத்தில் செய்த போதனைகள் சுட்டிக் காட்டுகின்றன. இயேசுவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான மத்தேயு தனது நூலில் 5 முதல் 7 வரையான அதிகாரங்களில் மலைப்பிரசங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இவற்றில் காணப்படும் வசனங்கள் ஒவ்வொன்றுமே மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுக்கான திறவுகோலாக இருக்கின்றன. எனினும் மலைப்பிரசங்கத்தின் போதனைகள் இங்கே சுருக்கமாகத் தரப்பட்டிருக் கின்றன. முடிந்தவரை விவிலிய மொழி சிதையாவண்ணம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை உங்கள் பொக்கிஷ அறையாகிய இதயத்தில் சேமித்துக்கொள்ளுங்கள்

உப்பும் ஒளியும்

மக்கள் கூட்டத்தைப் பார்த்த அவர், மலைமீது ஏறினார்; அவர் உட்கார்ந்தபோது, சீடர்கள் அவரிடம் வந்தார்கள். அவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார் இயேசு:

“நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு உவர்ப்பிழந்துபோனால், அதற்கு எப்படி மீண்டும் உவர்ப்பூட்ட முடியும்? வெளியே கொட்டப்பட்டு மனிதரால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறெதற்கும் அது உதவாது.

“நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள். கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் தெளிவாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்; உங்கள் கண் பொல்லாததாக இருந்தால், உங்கள் முழு உடலும் இருளடைந்து இருக்கும்.

மலைமீது இருக்கும் நகரம் மறைவாயிருக்க முடியாது. உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு உங்கள் பரலோகத் தந்தையை மகிமைப்படுத்துவார்கள்.

கோபமும் சமாதானமும்

“கொலை செய்யாதீர்கள்; மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தந்தை உங்கள் குற்றங்களை மன்னிப்பார்;

உங்கள் காணிக்கையைச் செலுத்த ஆலயத்திற்கு நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள் மீது ஏதோ மனக்குறை இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால், உங்கள் காணிக்கையைச் செலுத்தும் முன் முதலில் அவரிடம் போய்ச் சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

“உங்கள்மீது வழக்கு தொடுக்கிறவரோடு நீங்கள் நீதிமன்றத்திற்குப் போகும் வழியிலேயே விரைவாகச் சமாதானம் செய்துகொள்ளுங்கள்.

எதிரிகள் நண்பர்களே

“‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், உங்களுக்குத் தீங்கு செய்கிறவருக்குத் தீங்கு செய்யாதீர்கள்; எவராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; வட்டியில்லாமல் கடன் வாங்க வருகிறவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள்

“‘சக மனிதர்மீது அன்பு காட்ட வேண்டும், எதிரியையோ வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தந்தையின் பிள்ளைகளாக இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர் களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பொழியச் செய்கிறார்

விளம்பரம் வேண்டாம்

“மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் தானதர்மம் செய்யும்போது, தம்பட்டம் அடிக்காதீர்கள்; உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குத் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அப்போது, நீங்கள் செய்யும் தானதர்மம் மற்றவர்களுடைய பார்வைக்கு மறைவாக இருக்கும்; எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் நீங்கள் செய்வதைப் பார்த்து உங்களுக்கு உரிய பலனை அளிப்பார்.

நினைப்பும் நிஜமும்

“வாழ்க்கைத் துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இச்சை உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் உள்ளத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.

கவலை வேண்டாம்

“ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், எஜமானன் ஒருவரை வெறுத்து மற்றவரை நேசிப்பார்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை உதாசீனப்படுத்துவர். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஒரே நேரத்தில் அடிமையாக இருக்க முடியாது.

அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுப்பது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உணவைவிட உங்கள் உயிரும் உடையைவிட உங்கள் உடலும் அதிக முக்கியம் அல்லவா? வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; என்றாலும், உங்கள் வானுலகத் தந்தை அவற்றுக்கும் உணவளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா?

அதனால், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்