உயிர் வளர்க்கும் திருமந்திரம் 12: ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே

By கரு.ஆறுமுகத்தமிழன்

டவுளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினால் போதும்; அந்த விவாதத்தை முழுமையான விவாதம் ஆகவிடாமல், குறுக்கே ஒரு சுவர் எழுந்து மறிக்கும். அதை நம்பிக்கை என்க. யோசிக்கும் வேளையில், கடவுளைப்பற்றித்தான் என்றில்லை; இதுதான் என்னுடைய கொள்கை, கோட்பாடு என்று நாம் வரித்துக் கொண்டுவிட்ட எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கிய அடுத்த நொடி நம்பிக்கை என்னும் சுவர் எழுந்து குறுக்கே நின்று மறிக்கும். விவாதிக்கத் தொடங்கியவர்கள் நம்பிக்கைக்கு இப்பாலும் அப்பாலும் உள்ளவர்கள் ஆவார்கள். இப்பால் உள்ளவர்கள் ஏதோ ஒன்றின் நம்பிக்கையாளர்கள்; ஆகவே விவாதிக்க மறுப்பவர்கள். அப்பால் உள்ளவர்களோ அந்த ஏதோ ஒன்றை நம்பாதவர்கள், அல்லது வேறு ஏதோ ஒன்றை நம்புகிறவர்கள், அல்லது எதையுமே நம்பாதவர்கள்; ஆகவே விவாதிக்கத் தயங்காதவர்கள்.

தாங்கள் நம்புகின்ற ஒன்றை விவாதிக்க மறுப்பதனாலேயே நம்புகிறவர்கள் எல்லோரையும் மூடர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள் சிலர். அப்படிச் செய்வது சரியல்ல. நம்பும் முறைமையில் மூட நம்பிக்கை, நம்பிக்கை என்று இரண்டு உண்டு. மூட நம்பிக்கை என்பது ஒரு கருத்தின் முக மதிப்பை நினைத்தோ, அல்லது அந்தக் கருத்தை எடுத்துரைத்த நூலின் அல்லது ஆளின் முக மதிப்பை நினைத்தோ, அந்தக் கருத்தை ஆராயாமல் ஏற்றுக் கொண்டுவிடுவது. ஆனால் நம்பிக்கையை அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆராய்ந்து ஆராய்ந்து ஒரு கருத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வருவது; இறுதி செய்யப்பட்ட அந்த முடிவை நம்பிக்கையாக்கிக் கொள்வது; பிறகு அந்த நம்பிக்கை வழிந்தோடி வற்றிப் போய்விடாமல் அதற்கு கரைகட்டி, அணைகோலி, அந்த நம்பிக்கையையே தங்கள் கைவிளக்காக வைத்துக்கொள்வது—‘போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே,’ ‘வாழ்வே போற்றி, என் வைப்பே போற்றி’ என்று தான் தேடிக் கண்டடைந்ததை மணிவாசகர் தனக்குத் துணையாக வைத்துக்கொண்டதைப்போல.

தெளிந்த பின் குழம்ப வேண்டாம்

அவ்வாறே, தாங்கள் நம்பாத ஒன்றை விவாதிக்க முன்வருவதனாலயே நம்பாதவர்கள் எல்லோரையும் பகுத்தறிவாளர்கள் என்று அடையாளப்படுத்தி விடுகிறார்கள் சிலர். அப்படியும் சொல்லிவிட முடியாது. நம்பிக்கையோ, நம்பிக்கை இன்மையோ, தானே பகுத்தாராயாத எதுவும் மூட நம்பிக்கைதான்—கடவுள் இருப்பாக இருந்தாலும் சரி, கடவுள் மறுப்பாக இருந்தாலும் சரி.

தேற்றித் தெளிமின்; தெளிந்தீர் கலங்கன்மின்

ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே,

மாற்றிக் களைவீர் மறுத்துஉங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே (திருமந்திரம் 172)

என்கிறார் திருமூலர். ஆற்று வெள்ளம் அகப்பட்டுக்கொண்டவரைப் புரட்டி எடுத்து அலைக்கழிப்பதுபோல, நீங்கள் கற்றுக்கொண்ட எல்லாம்—சிறுகச் சிறுகச் சேகரித்துக் கையிருப்பாக வைத்திருக்கும் எல்லாம்—செல்வம் என்று கருதுகிற எல்லாம்—உங்களை முரண்பட்ட திசைகளில் செலுத்திக் கலக்கி எடுக்கும். அலைக்கழிவை மாற்றிக் களைந்து மெல்ல நிலை கொள்ளுங்கள். எது திசை, எது வழி என்று ஆராய்ந்து தெளியுங்கள். தெளிந்த பின்னால் மீண்டும் குழம்பாதீர்கள். அந்தத் தெளிவு உங்களை ஏதோ ஒன்றின்மேல் சார்புபடுத்தும். அந்தச் சார்பு உங்களை உறுதிப்படுத்தும். அந்த உறுதி,

காலா! உனை நான் சிறுபுல் என மதிக்கிறேன்; என்தன்

கால்அருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்

(பாரதி, காலனுக்கு உரைத்தல்)

-என்று உங்களை முழங்க வைக்கும்.

எதையுமே தேற்றாமல் தேர்ந்தெடுக்கச் சொல்வதில்லை அறிவர்கள்—கடவுள் உட்பட. ‘கடவுளைப்பற்றி, உயிரைப் பற்றி, உலகத்தின் தோற்றத்தைப்பற்றி என்று எல்லாவற்றைப்பற்றியும் மறைநூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது; எனவே அங்குமிங்கும் தேடி அலைந்து கொண்டிருக்காமல் மறைநூல்களில் சொல்லப்பட்டவற்றைக் கேள்வியின்றி அப்படியே நம்புங்கள்’ என்று மறை ஓதிகள் சொன்னபோது, அவற்றை நம்பாமல் ஆராயத் தலைப்பட்டார்கள் அறிவர்கள். அதற்கு மறுப்புக் குரல் எழுப்பினார்கள் மறை ஓதிகள். அவர்களுடைய மறுப்புக் குரலைப் புறக்கணித்து, உண்மையைத் தேடி, ஆராய்ந்து, அறிவுக்கு ஏற்புடைய வகையில் அடையாளம் கண்டபிறகு, தாங்கள் கண்டுகொண்டதை நம்பத் தொடங்கினார்கள் அறிவர்கள்.

தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை,

யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்

ஓதுமின், கேள்மின், உணர்மின், உணர்ந்தபின்

ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே (திருமந்திரம் 301)

‘கடவுள் யார் தெரியுமா? தேவருக்கெல்லாம் தேவன்! அழகுக்கெல்லாம் அழகன்!’ என்றெல்லாம் உங்களுக்குச் சொல்லப்படும். ஆனால் நானோ உங்களுக்குச் சொல்கிறேன்: அவ்வாறு சொல்லப்படுகிற கடவுளை, உள்ளது உள்ளவாறு அறிந்தவர்கள் யாரென்று தேடுங்கள். அவர்கள் அறிந்தது என்னவென்று அவர்களைக் கேளுங்கள். அத்தோடு நிறைவடைந்து நம்பிவிடாமல், கடவுளைப் பேசுகிற மறை நூல்களைக் குடைந்து ஆராயுங்கள். அவற்றில் சொல்லப்பட்டவை, சொல்லாமல் விடப்பட்டவை என்று எல்லாவற்றைக் குறித்தும் கேள்வி எழுப்பிக்கொண்டு விடை தேடுங்கள். உங்கள் அறிவு தருகிற விடையை அறிந்துகொள்வதோடு நிறுத்திவிடாமல் அத்துடன் உணர்வுப்பூர்வமாய் ஒன்றி அதில் நில்லுங்கள். நீங்கள் ஓங்கி நிற்பீர்கள்.

ஆற்றில் கிடந்தும் துறையறியாதவர்

திருமூலர்தான் இப்படிச் சொல்கிறார் என்று கருதவேண்டாம். அறிவர்கள் எல்லோரும் இப்படியே சொல்கிறார்கள். பட்டினத்தார் சொல்வதைக் கவனியுங்கள்:

நீற்றைப் புனைந்துஎன்ன? நீராடப் போய்என்ன? நீ, மனமே,

மாற்றிப் பிறக்க வகைஅறிந்தாய் இல்லை! மாமறைநூல்

ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?

ஆற்றில் கிடந்தும் துறைஅறியாமல் அலைகின்றையே!

(பட்டினத்தார், பொது, மெய்யுணர்வு, 40)

திருநீறு பூசுவதால், காலையும் மாலையும் நீராடுவதால், மாமறை நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஏழுகோடி மந்திரத்தையும் உச்சரிப்பதால் உண்மை அறிவு கிடைத்துவிடுமா? ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டவன் கரைசேர வேண்டுமானால் துறை எங்கே இருக்கிறது என்று தலை தூக்கிப் பார்ப்பது ஒன்றுதான் வழி. மந்திரம் சொல்வதால் மாங்காய் பழுக்காது.

அதற்காக உலகியல் அறிவை அடைவதோடு எல்லாவற்றையும் அறிந்துவிட்டதாக அறிதல் முயற்சியை நிறுத்திக்கொண்டுவிட முடியாது.

அறிவுஅறிவு என்றுஅங்கு அரற்றும் உலகம்;

அறிவு அறியாமை யாரும் அறியார்;

அறிவு அறியாமை கடந்து அறிவுஆனால்,

அறிவு அறியாமை அழகியவாறே. (திருமந்திரம், 2362)

உலகியல் அறிவு மட்டுமே அறிவு என்று அரற்றிக்கொண்டும் அறிவித்துக்கொண்டும் இருக்கிறது இந்த உலகம். அதை நம்பி, வெறும் உலகியல் அறிவை மட்டுமே பெற்றுக்கொண்டு நிறைவடைந்துவிடுவது என்பது முழு அறிவைப் பெற்றதாக ஆகாது. உலகியல் அறிவு மட்டுமே அறிவு என்று நம்புவது உண்மையில் அறியாமை. இந்த அறியாமையை ஆராய்ச்சியினால் தாண்டிக் கடந்து, உலகியலுக்கு அப்பால் இருப்பதையும் அறிய முடிந்தால், முன்பு அறிவு என்று தழுவப்பட்டது அறியாமையும் ஆகலாம்; அறியாமை என்று தள்ளப்பட்டது அறிவும் ஆகலாம். ஆராய்ந்து தெளிக. அவரவர் அறிவு அவரவர்க்கு என்றாலும் அறிவது அழகுதான்.

குருட்டாம்போக்கில் ஏதோ ஒன்றை நம்புவது மூட நம்பிக்கையென்றால், அதற்கு எதிராக நிற்பது பகுத்தாராய்கிற அறிவு. பகுத்தாராய்கிற அறிவினால் ஆய்ந்து மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை என்றால், அதற்கு எதிராக நிற்பது அதே பகுத்தறிவினால் வேறொரு கோணத்தில் ஆய்ந்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நம்பிக்கை.

கடவுள் விவகாரத்தில் இங்கு நடப்பது ஒரு நம்பிக்கைக்கும் மற்றொரு நம்பிக்கைக்கும் இடையிலான முரண்பாடே அன்றி அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான மோதல் அன்று. ஆனால் இதை உணராமல் இரு குழுவினர் மோதிக்கொள்வது கடவுளறிய அறியாமைதான்.

(தொடர்ந்து அறிவோம் )

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்