இ
யேசுவின் காலத்தில், யூதர்கள் பெரும்பான்மையாக வசித்துவந்த யூதேயா பகுதி, ரோமாபுரிப் பேரரசுக்குட்பட்ட ஒரு மாநிலமாக இருந்தது. பொதுவாழ்க்கையில் நீதிப் பரிபாலனம் செய்யும் உரிமையை, ரோமாபுரி அரசு யூதர்களுக்கே வழங்கியிருந்தது. அவ்வகையில் ஒவ்வொரு பெரிய ஊரிலும் யூதர்களால் நடத்தப்படும் உள்ளூர் நீதிமன்றங்கள் செயல்பட்டுவந்தன. ஆனால், பெரிய வழக்குகள் யூதேயாவின் தலைநகராக இருந்த எருசலேமின் தலைமை நியாயச் சங்கத்துக்கு கொண்டுவரப்பட்டன. இந்த நியாயச் சங்கத்தை யூதர்களின் உச்ச நீதிமன்றம் என்கிறார்கள் பைபிள் ஆராய்ச்சியாளர்கள். வழக்குகளைத் தீர்ப்பது மட்டுமல்ல; யூதத் திருசட்டத்துக்கு விளக்கம் தருவதிலும் தலைமை நியாயச் சங்கத்தின் முடிவே இறுதியானது. இதனால் யூதர்கள் தலைமை நியாயச் சங்கத்தின் அதிகாரத்துக்கு ஒருமனதாகக் கட்டுப்பட்டார்கள்.
இயேசுவை எதிரியாகப் பார்த்தவர்கள்
எருசலேமில் இருந்த யூத தேவாலயத்தின் மன்றத்தில் தலைமை நியாயசங்கம் செயல்பட்டுவந்தது. 71 உறுப்பினர்களைக் கொண்ட நியாயச் சங்கத்துக்கு, யூத மதத்தின் தலைமைக் குருவே தலைவராக இருந்தார். மதமும் ஆட்சிநிர்வாகமும் கலந்திருந்த நியாயச் சங்கத்தில் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தைத் தங்கள் வசம் வைத்திருந்த சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்கள் குருமார் வகுப்பைச் சேர்ந்த பிரபுக்களாகவும், உயர்குடியினராகவும் இருந்தனர். இவர்கள் இயேசுவின் புரட்சிகரமான போதனைகளை ஏற்கவில்லை. அவரை எதிரியாகப் பார்த்தனர். மற்றவர்களுக்கு முன்பாகத் தங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொள்ள பரிசேயர்கள் முயற்சி செய்தார்கள். சமூக அடுக்கில் முதன்மையான நிலையையும் பெரிய பட்டங்களையும் விரும்பினார்கள்.
ஆனால், இயேசு அவர்களைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “ மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள்; தாங்கள் அணியும் வேதாகம தாயத்துகளை அகலமாக்குகிறார்கள்; தங்கள் அங்கிகளின் ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபக்கூடங்களில் முன்வரிசை இருக்கைகளையுமே விரும்புகிறார்கள்; அதோடு, சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும், தங்களை ‘ரப்பீ’ என்று அழைக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்.” என்று பரிசேயர்களின் போலித்தனங்களைப் பட்டியலிட்டு விமர்சித்தார்.
யூத மதப் பழமைவாதிகளாக இருந்த இவர்களிடம் தாழ்மை என்பது மருந்துக்குக் கூட காணப்படவில்லை. இவர்களுக்கு நேர்மாறாக இயேசு போதித்த வாழ்க்கை நெறிகளும் செயல்களின் வழியே அவர் காட்டிய முன்மாதிரிகளும் அவரைப் பரிபூரண ஞானகுருவாக சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்தன. ஒருமுறை அவரை “ நல்ல போதகரே” என்று ஒருவர் அழைத்தார். அப்போது இயேசு, “ என்னை ஏன் நல்லவன் என்று அழைக்கிறாய்; கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் என ஒருவரும் இங்கு இல்லை” என்று சொன்னார். மற்றொரு தருணத்தில், தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி மனத்தாழ்மையாய் இருக்கக் கற்றுக்கொடுத்தார்.
எண்ணங்களைப் படிப்பவர்
பரிசேயர்கள், சதுசேயர்களின் வாழ்க்கை முறையை இயேசு கடுமையாகச் சாடிய நிலையில் அவர்களில் சிலர், இயேசுவின் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து, அவரை மதிக்கத் தொடங்கினர். இன்னும் சிலர் இயேசுவை மீட்பராகவும் ஏற்றுக்கொண்டர். இயேசு தனது வீட்டில் அடிவைத்து, ஒருவேளை உணவு அருந்தினால் தனது வீட்டுக்கு மீட்பு உண்டாகும் என நம்பினார்கள். இப்படி மனம் திருந்திய பலர் இயேசுவை தங்கள் வீட்டுக்கு வருகைதருமாறு அழைத்தனர்.
இவ்வாறு ஓய்வுநாள் ஒன்றில் மனந்திருந்திய பரிசேயர்களின் தலைவர் ஒருவருடைய வீட்டுக்கு விருந்து சாப்பிட இயேசு போனார். அங்கிருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். நீர்க்கோவை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவுக்கு முன்னால் போய் நின்றார். அவர் எதற்காக தன்முன்னால் வந்து நிற்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட இயேசு அவரை அந்தக் கணமே குணமாக்கியதாகக் கூறப்படுகிறது.
பந்தியில் முதன்மையான இடம்
அந்த பரிசேயர் தலைவர் வீட்டின் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அடித்துப் பிடித்து மிக முக்கியமான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை அவர் கவனித்தபோது இயேசு அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்; “யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்தால், மிக முக்கியமான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனென்றால், உங்களைவிட முக்கியமான நபரும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கலாம்.
உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று சொல்வார். அப்போது, நீங்கள் அவமானத்தோடு கடைசி இடத்துக்கு எழுந்து போக வேண்டியிருக்கும். அதனால் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் விருந்தில், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முன்னால் வந்து உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள்முன் உங்களுக்குக் கவுரவமாக இருக்கும். தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார்.
பின்பு, தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம், “ நீங்கள் மதிய உணவுக்கோ அல்லது இரவு உணவுக்கோ விருந்து கொடுக்கும்போது, உங்கள் நண்பர்களையோ சகோதரர்களையோ சொந்தக்காரர்களையோ அக்கம்பக்கத்தில் இருக்கிற பணக்காரர்களையோ அழைக்காதீர்கள். அப்படி அழைத்தால் ஒருவேளை, பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம். அது உங்களுக்குக் கைமாறு செய்வதுபோல் ஆகிவிடும். அதனால் விருந்து கொடுக்கும்போது, ஏழைகளையும் உடல் பலவீனமானவர்களையும் அழையுங்கள், அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. அதற்கான கைமாறு நீதிமான்கள் உயிரோடு எழுப்பப்படும்போது உங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago