கார்த்திகை தீப திருவிழா பணிகள் தொடங்கியது - திருவண்ணாமலை கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்; நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 17 நாட்கள் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது.

பஞ்சபூத தலங்களில் அக்னிதலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவ.14-ம் தேதி தொடங்குகிறது. 17 நாட்கள் விழா நடைபெறும். மூலவர் சன்னதி முன்பு தங்க கொடிமரத்தில் நவ.17-ம் தேதி கொடியேற்றப்பட்டதும் 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும்.

7-ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நவ. 26-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு காணலாம். முன்னதாக, அன்றையதினம் அதிகாலை 4 மணிக்கு, மூலவர் சன்னதியில் பரணிதீபம்ஏற்றப்படும். இதையடுத்து, ஐயங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நவ.30-ம் தேதி நிறைவுபெறும்.

இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டதும் மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர், சம்பந்த விநாயகர் சந்நதி முன்பு பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசைஒலிக்க ராஜகோபுரம் முன்பு பந்தக்காலை நட்டு வைத்து, தீபாராதனையை சிவாச்சாரியார்கள் காண்பித்தனர். முன்னதாக, 5 தேர்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE