அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று செயலாற்றிக் கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையின் உன்னதமான காரியம். வாழ்க்கையை உன்னதப்படுத்துபவையும் இவையே. வாழ்க்கையை அர்த்தமாக்குபவை, அடுத்தது அடுத்தது என்று செயலில் இறங்குவதுதான்! அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை... மிகக் கொடுமையானது.
தன்னுடைய பணிகளை இன்னொருவர் தீர்மானிப்பது என்பது மிகக்கொடுமை. தேவர்களின் பணிகளும் முனிவர்களும் செயல்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் முடங்கிப் போயின. மகிஷி எனும் ஒற்றை அரக்கியின் செயல்கள், அனைவரின் செயல்களையும் கலைத்துப் போட்டன.
இந்திரலோகத்தை தன் வசமாக்கிக் கொண்டாள் மகிஷி. சூரியன், வாயுபகவான், அக்னிபகவான், சந்திர பகவான், வருண பகவான், எமதருமன் என உலகை இயங்கச் செய்யும் தொழில் செய்யும் அனைவரும் இவளின் அட்டூழியத்தால் சிக்கிக் கொண்டார்கள். இவர்களின் செயல்கள் சின்னாபின்னமாயின.
இயற்கைக்கு மாறாக எல்லாமே அவளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. அவள் சொல்வதெ சட்டம் என்றாகிப் போனது. இயற்கையே ஸ்தம்பித்துப் போகும் மோசமான சூழ்நிலை உருவானது.
‘‘மகிஷியை உடனே வதம் செய்யுங்கள் சுவாமி. அவளை அழித்தால்தான், உலகம் சீராகும். சீராக இயங்கும். உங்களால்தான் அவளை அழித்து, எங்கள் இயக்கத்தை சீர்படுத்த முடியும். உலக மக்களை செம்மைப்படுத்த முடியும். மகிஷியை அழித்தால்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி. மகிஷி அழிந்தால்தான் எங்களுக்கு நிம்மதி. அவளை அழித்தொழியுங்கள் சுவாமி’’ என்று பரமேஸ்வரனையும் மகாவிஷ்ணுவையும் தரிசித்து, பிரம்மா தலைமையில் எல்லோரும் முறையிட்டனர். மன்றாடினர். மனமுருகி வேண்டினர்.
அதைக் கேட்டு அதிரும்படிச் சிரித்தார் சிவபெருமான். ‘‘மகிஷி என்பவள் சாதாரணமானவள் அல்ல. அவளை அழிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அவளின் முந்தைய பிறவியைச் சொன்னால் நடுநடுங்கிப் போய்விடுவீர்கள். ஆனால், எதிரியை முழுவதுமாக அறிவதே புத்திசாலித்தனம். எதிரியின் முழுபலத்தையும் அறிந்தால்தான் நம்முடைய பலத்தை அதிகரிக்கும் உபாயங்களைக் கைக்கொள்ளமுடியும்’’ என்று சொன்ன சிவனார், அவளைப் பற்றி, அரக்கியைப் பற்றி, மகிஷியைப் பற்றி, மகிஷியின் முற்பிறவி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
அவள் பெயர் லீலாவதி. முந்தைய பிறவியில் இதுதான் அவளின் பெயர். இப்போது அரக்கியாக ஆட்டம் காட்டுகிறாள். முற்பிறவியில் ஆகச் சிறந்த பெண். குணவதி. உத்தமமானவள். காலவ மகரிஷியின் மகளாக இருந்தவள்தான் இப்போது மகிஷியாகி இருக்கிறாள்.
லீலாவதி, காலவ மகரிஷியின் செல்ல மகள். அத்திரி மகரிஷியின் மைந்தன் தத்தாத்ரேயன். இவர்கள் இரண்டுபேருக்கும் அற்புதமாக நடந்தது திருமணம். கருத்தொருமித்து இனிதே வாழ்ந்தனர்.
சிலபல வருடங்கள் கடந்தன. இந்தநிலையில்... லீலாவின் கணவனான தத்தாத்ரேயன் என்கிற தத்தனுக்கு, தவம் செய்வதில் விருப்பம் அதிகரித்தது. காட்டுக்குச் சென்று பர்ணசாலை அமைத்து தவமிருப்பதில் ஆர்வமாக இருந்தான். அதாவது இல்லறம் விடுத்து துறவறம் போக நினைத்தான்.
ஆனால் ஆவேசமானாள் லீலாவதி. ‘இதற்கு கல்யாணமே செய்துகொள்ளாமல் இருந்திருக்கலாமே’ என்று எகிறினாள். ‘நீ என் புருஷன். நான் உன்னுடைய மனைவி. உன் தேவைகளை நான் பூர்த்தி செய்வதும், என் தேவைகளை நீ நிவர்த்தி செய்வதும் மிக மிக முக்கியம். அதுவே இல்லறம். அதுவே அறம். நல்லறம்.
இந்த உலகுக்கு எவர் வேண்டுமானாலும் ராஜாவாக இருக்கட்டும். ஆனால் எனக்கு ராஜா என் கணவரான நீதானே. அதேபோல், யார் வேண்டுமானாலும் மகாராணியாக இருந்து உலகை ஆளலாம். ஆனால் நான்தானே உனக்கு மகிஷி. ராணி. மகாராணி. ஆகவே உன்னைப் பிரிய மாட்டேன். பிரிந்து போக உன்னை விடவும் மாட்டேன்’’ என்று ஆவேசம் பொங்கப் பேசிக்கொண்டே போனாள்.
அவளின் பேச்சு, தத்தனுக்கு ஆத்திரமூட்டியது. அவன் கோபமானான்.
‘‘ஒரு பெண்ணைப் போலவா பேசுகிறாய் நீ. மகாராணி என்கிறாய். மகிஷி என்று பிதற்றுகிறாய். ராஜ்ஜியத்தை ஆளும் பக்குவமும் நிதானமும் கொண்டவர்களே மகாராணி அந்தஸ்துக்கு உரியவர்கள்.
கூத்தாடப் போகிறேன் என்றா சொன்னேன். இப்படி குதிக்கிறாய். பெண்டாளப் போகிறேன் என்றா சொன்னேன். இப்படி தடை விதிக்கிறாய். துறவறம் போகிறேன் என்றுதானே சொன்னேன். இப்படி துள்ளிக்குதித்தி அரக்கி போல் ஆவேசம் காட்டுகிறாய். தவம் செய்யப் போகிறேன் என்று அமைதியாகத்தானே சொன்னேன். இப்படி அரக்கத்தனம் காட்டுகிறாய்.
நீ அரக்கியாகவே இருந்துவிடு. மகிஷி மகிஷி என்று அலட்டிக் கொள்கிறாயே. மகிஷியாகவே இருந்து தொலை போ. எருமைத் தலையுடன் அரக்கியாகவே ஆகிப்போ. அரக்கக் குலத்தில், அசுரக் குலத்தி பிறந்து அசிங்கப்பட்டால்தான் புத்தி வரும் உனக்கு’’ என்று தத்தன் சாபமிட்டான்.
உத்தமி லீலாவதியின் உத்தம குணங்கள், அவளின் ஆவேசத்தாலும் தவம் செய்யப் போகும் கணவனைத் தடுத்ததாலும் நாசமாயின. எண்ணமே சத்ரு. அவளின் எண்ணமே, அவளை அழித்தது. அசுரத்தனம் கொண்டவளாக்கியது. அப்படியொரு சாபத்தைக் கணவனே தரும் நிலைக்கு ஆளானாள்.
கரம்பன் என்பவனின் மகளாகப் பிறந்தாள். அசுரக் கூட்டத்தில் அசுர குணங்களுடன், அரக்க சிந்தனைகளுடன், துர்குணங்களுடனேயே பிறந்து, வளர்ந்தாள். இப்போது அவள் மகிஷி. மொத்த அரக்கக் குணங்களும் கொண்ட அரக்கி. ராட்சஷி. அன்பு அண்ணனை வேறு இழந்துவிட்டாள். இன்னும் வெறி கொண்டு திரிகிறாள். பேயாட்டம் போடுகிறாள்.
‘‘ஆனால், காலம் நெருங்கிவிட்டது. அவளின் அந்த சாபத்தில் இருந்து அவள் விமோசனம் அடையப் போகிறாள். மரணமும் ஒருவகையில், விமோசனம்தான். அவள் அழிக்கப்படப் போகிறாள். மகிஷி அழியப்போகிறாள்’’ என்றார் சிவபெருமான்.
‘‘சிக்கலான வரத்தை வாங்கியிருக்கிறாளே சுவாமி. பிரம்மாவிடம் எக்குத்தப்பானதொரு வரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறாளே. உங்களுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பிறக்கும் பையனால்தான் எனக்கு அழிவு வரவேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறாளே. இதெப்படி சாத்தியம்? எவ்விதம் நடக்கும்? எப்படியோ... அவள் அழிய வேண்டும்’’ என்று இந்திரன் உட்பட எல்லோரும் புலம்பினார்கள்.
சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். புன்னகைத்துக் கொண்டார்கள். ஏற்கெனவே நிகழ்ந்த சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டார்கள்.
அது... பாற்கடலில் அமிர்தம் எடுத்த சரிதம். அப்படி அமிர்தம் எடுக்கும் வேளையில், மகாவிஷ்ணு செய்த சரிதம்... அரக்கக் கூட்டத்தை ஏமாற்ற, அவர்களை திசை திருப்ப எடுக்கப்பட்ட அவதாரத்தின் சரிதம்.
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago