மணப்பாடு ஆலயத்தில் மகிமைப் பெருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தலத்தில் 444-வது மகிமைப் பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை காலையில் பல்வேறு சபையினர், பள்ளிகள் பங்கேற்ற திருப்பலிகள் நடைபெற்றன. 10-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6.30 மணி திருப்பலிக்கு பின் ஐந்து திருக்காய சபை பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவைத் திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

நேற்று காலை 4.30 மணிக்கு பங்கு மற்றும் திருச்சிலுவைத் திருத்தலத்தில் திருப்பலி, 5 மணிக்கு திருச்சிலுவைத் திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலி, 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி ஐந்து திருக்காய சபையினர் பவனி, தொடர்ந்து ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஜந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் நியமனம், மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடைபெற்றது. காலை 11 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடைபெற்றது.

இன்று (செப். 15) தேதி புனித வியாகுல அன்னை திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள், புனித யாகப்பர் ஆலய நலக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE