‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்று சொல்லுவார்கள். உண்மைதான். கடவுளின் அருளின்றி இங்கே, எதுவுமே சாத்தியமில்லை. இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல், எதுவும் எவருக்கும் இங்கே எந்தக் காரியமும் நிகழ்வதே இல்லை. அதுதான் தெய்வ சக்தி; தெய்வ சாந்நித்தியம்; தெய்வ பலம்!
‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்பது சத்திய வார்த்தை. அங்கிங்கெனாதபடி... எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன்.
‘உன் கடவுள் தூணிலும் இருப்பானா’ என்று தன் மகன் பிரகலாதனிடம் இரணியன் நக்கலாகக் கேட்டதற்கு, ‘ஆமாம்... இருப்பான்’ என்று உறுதிபடச் சொன்னான் பிரகலாதன். அப்போது, ஒருகணம் யோசித்தார் நரசிம்ம மூர்த்தி.
‘அடடா... இந்த இரண்யன் மகா அயோக்கியனாயிற்றே. தன் ஆவேசத்தையெல்லாம் தன்னுடைய அயோக்கியத்தனத்தையெல்லாம் உடனே தூணில் காட்டிவிடுவானே! தூணானது தூள்தூளாகும்படி அடித்து துவம்சம் செய்துவிடுவானே. அப்படித் தூணில் இல்லாது போனால், ‘பாத்தியா... எங்கே உன் மகாவிஷ்ணு. கடவுளாவது ஒண்ணாவது...’ என்று நாத்திகம் பேசிக் கொக்கரிப்பானே. பாவம் பிரகலாதன். இந்தச் சிறுவனின் நம்பிக்கை நசிந்துவிடுமே. பொய்யாகிவிடுமே. தவித்துப் போவானே.
அதர்மம் வெறியாட்டம் போடலாம். ஆனால் ஒருபோதும் அதர்மத்தின் முன்னே, தர்மம் தலைகுனிந்து நிற்கக் கூடாது. கெட்டவன், பகட்டாகவும் படாடோபமாகவும் வாழ்ந்து தொலைக்கலாம். ஆனால் நல்லவன் அவனுக்கு முன்பாக, கூனிக்குறுகி ஒருபோதும் நிற்கக் கூடாது.
இப்படியாக யோசித்திருப்பான் போல இறைவன். சட்டென்று, அங்கே இருந்த எல்லாத் தூண்களிலும், தூண்களுக்கு உள்ளேயும் போய் இருந்துகொண்டானாம்.
இப்போது இரணியன், எந்தத் தூணை உடைத்தாலும் அதில் இருந்து வெளிப்பட, வெளிப்பட்டு எல்லோருக்கும் காட்சி தர, காட்சி தந்த கையுடன், இரணியனை வதம் செய்ய, வதம் செய்து முடித்ததும் தர்மம் வெல்லும், தர்மமும் இறைபக்தியும் ஒருபோதும் தோற்காது என்பதை உலகுக்குச் சொல்லத் தயாராக இருந்தான்.
இரணியன் தூணை உடைக்க, அங்கிருந்து தூணில் இருந்து இரண்டாகப் பிளந்தபடி பிரசன்னமானார் நரசிம்ம மூர்த்தி. கெட்டதை, கெட்டவனை, அதர்மக்காரனை, அட்டூழியம் செய்தவனை, தீயதை, கொடுங்கோலனை கொடூரமாகத் துவம்சம் செய்தார். தர்மத்தைக் காத்தருளினார் என்கிறது புராணம்.
இப்படியான ஓர் அரக்க குணத்தை, ஆணவத்தை, அட்டூழியத்தை, அடங்காத வன்முறையை அழிப்பதற்கு கடவுளின் அவதாரம், இறைவனின் வருகை தேவையாக இருந்தது அங்கே! அதுவே ஐயப்ப அவதாரம்.
‘ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே...’ என்றொரு வாசகம் உண்டு. பெண்ணின்றி இந்த உலகில் எதுவுமில்லை. பெண்ணே போற்றத்தக்கவள். பெண்ணே பிரபஞ்சம். பெண்ணே சக்தி. பிரபஞ்ச சக்தி. அவள் நினைத்தால், உருவாக்கவும் செய்வாள். அழிக்கவும் முற்படுவாள்.
சக்தி எங்கிருக்கிறதோ அங்கே ஆணவமும் அழிவும் சேர்ந்தே இருக்கிறது. இதைத்தான் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும் நமக்கு உணர்த்துகிறது.
‘தானே பலம் பொருந்தியவர்’ என்று இந்த உலகில் யார் நினைத்தாலும் அவர்களின் பலமே அவர்களுக்கு சத்ருவாகிவிடும். வினையாகிவிடும். அதாவது பலவீனமாகிப் போகும். அதாவது ஒருவரின் பலம் எதுவோ... அதுவே அவருக்குப் பலவீனம்!
‘அவன் ரொம்ப நல்லவன்தாம்பா. ஆனா, இந்த நல்லகுணம்தான் அவனை ஏமாளியாக்கிருது’ என்போம் சிலரைப் பார்த்து. ‘எல்லார்கிட்டயும் பிரியமா, ஸ்நேகிதமாப் பழகுவான் அவன். ஆனா என்ன... யார் நல்லவன், யார் கெட்டவன்னு தெரிஞ்சுக்க முடியாமப் போச்சே...’ என்போம்.
இருபது முப்பது வருடங்களுக்கு நேர்மையானவன் என்று ஒருவரைச் சொன்னோம். ஆனால் இப்போது அத்தகைய நேர்மை குணம் கொண்டவர்களை, சாமர்த்தியம் இல்லாதவன் என்கிறோம். ஆக, பலம் எதுவோ அதுவே பலவீனமாகிவிடும்.
ஆக்கத்துக்கு பயன்பட வேண்டிய சக்தி அழிவுக்குப் பயன்பட்டது. நல்லதுக்குப் பயன்பட வேண்டிய பக்தி, கெட்டதற்குப் பயன்படுத்தப்பட்டது. அதர்மம் பேயாட்டம் போடும். ஆனால் தர்மம் ஒருபோதும் தோற்காது என்பதே விதி. இறைவன் எழுதி வைத்த விதி.
‘தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்பது இதைக் குறித்தே சொல்லப்பட்டது. இதை வலியுறுத்தியே முன்மொழியப்பட்டது.
மகிஷி எனும் அரக்கியின் ஆட்டமும் இப்படிப்பட்டதுதான். அவளின் கொடுங்குணமும் தர்மம் வெற்றி பெறும் என்பதை நமக்கெல்லாம் உணர்த்துவதற்குத்தான்!
ஒரு சிறிய அகல்விளக்கில் இருந்து கிடைக்கும் வெளிச்சம், இருட்டையே துரத்திவிடும் வல்லமை கொண்டது. அந்தச் சிறிய விளக்கின்... வெளிச்சத்தின் வீரியம் வெளிப்பட வேண்டும் எனில், இருள் இருக்கவேண்டும் அல்லவா. பகலில் ஏற்றப்படும் வெளிச்சத்தால் எவருக்கும் எந்தப் பயனும் இல்லையே!
அதனால்தான் மகிஷியின் அரக்க குணத்தின் மூலமாக, தர்மம் காக்க வந்தார் இறைவன். கர்வமும் ஆணவமும் இருந்தால், அறிவைக் கொண்டு உலகையும் உலகமக்களையும் அச்சுறுத்தினால், அவர்களுக்கு அழிவு நிச்சயம் எனும் நம்பிக்கையை நமக்கு விதைப்பதற்காக, கடவுளின் வருகை நிகழ்ந்தது.
கொஞ்சநஞ்சமா மகிஷியின் ஆட்டம். ஒட்டுமொத்தமாக எல்லோரையும் கிடுகிடுக்கச் செய்த மகா அரக்கி அல்லவா அவள்.
எருமைத் தலையும் மனித உடலும் கொண்டவள் மகிஷி. அசுரர் கூட்டத்துக்குத் தலைவனான மகிஷன் என்பவனின் தங்கை. ஆகவே அரக்கக்குணம், கூடப்பிறந்ததானது. அண்ணன் மகிஷனைப் போல் அளப்பரிய சக்தியைப் பெற்றிருந்தாள் தங்கை மகிஷியும். அவனைப் போலவே உலகத்தாரை ஆட்டிப்படைத்தாள். அண்ணனைப் போலவே தேவர்களை நோகடித்தாள். முனிவர்களை ஓடச் செய்தாள்.
மகிஷனின் அரக்கக் குணத்தால், மூவுலகும் கதிகலங்கின. செய்வது அறியமால் கைபிசைந்து தவித்தன. இந்திரனையே தோற்கடித்தான். இந்திரலோகத்தையே கைப்பற்றினான். அப்படிக் கிடைத்துவிட்டதாலேயே இன்னும் ஆட்டம் போட்டான். அது பேயாட்டம். வெறியாட்டம். ஆனால் என்ன... ஒருபெண்ணால் அழிந்தொழிந்தான்.
பிரம்மாவிடம் வரம் வாங்கியவன்தான் அவன். ஆனாலும் எல்லா வரமும் வாங்கினான். ‘ஒரு பெண்ணால் எனக்கும் மரணம் நிகழக்கூடாது’ என்று வாங்கவில்லை. ஒரு பெண்ணானவள் நம்மை எதுவும் செய்துவிடமுடியாது பெண்ணை ஏளனமாக நினைத்தான். பலவீனமானவள் என்று கொக்கரித்தான். அந்த பலமே அவனுக்கு பலவீனமாயிற்று. அவன், எதைப் பலவீனம் என்று நினைத்தானோ, யாரை பலஹீனமானவர்கள் என்று நினைத்தானோ... அந்த பலஹீனமானது, அதாவது பெண்ணானவள் தன் பலத்தை நிரூபித்தாள். மகிஷன் எனும் அசுரனை அழித்தொழித்தாள் பராசக்தி.
இப்போது தங்கையின் முறை ஆரம்பம். அவளும் அரக்கிதான். கெட்ட விதைதான். மகிஷியும் ஆடினாள். எல்லோரையும் அல்லலுக்கு ஆளாக்கினாள்.
இந்த முறை அவளின் முடிவு. அழிவு. ஆனால் வந்தது சிவ விஷ்ணுவின் அடையாளம். இரண்டு சக்திகளும் கலந்த மகாசக்தி. அந்தச் சக்திதான்... ஐயன் ஐயப்ப சுவாமி!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி, ஐயப்ப சரிதத்துக்குள் நுழைவோம்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago