காஞ்சி மகான் என்றும் மகாபெரியவா என்றும் போற்றப்படும் மகா ஞானிக்கு நாளைய தினம் ஆராதனை நன்னாள். இந்த நாளில், காஞ்சி மகானை நினைப்போம். அவரை ஆராதித்து அவரின் பேரருளைப் பெறுவோம்.
சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரி அப்போது மெட்ராஸ் ஸம்ஸ்க்ருதக் கல்லூரி என்றே அழைக்கப்பட்டது. அங்கே காஞ்சி மகாபெரியவர், ஒருமுறை முகாமிட்டிருந்தார். தினமும் வீதியாக வலம் வந்தும் தரிசனம் தருவது காஞ்சி மகானின் வழக்கம்.
அப்போது பக்தர்கள் பலரும் இவரின் வருகைக்காகக் காத்திருப்பார்கள். தெருவின் இரண்டுபக்கமும் நின்று கொண்டு, மகாபெரியவரைத் தரிசிக்கும் ஆவலில் நின்றிருப்பார்கள். சிலர் பூரணகும்ப மரியாதை செய்வார்கள். இன்னும் சிலர், பகவானின் திருப்பாதம் நம் வீட்டில் பட வேண்டும் என்று கேட்பார்கள். சில தருணங்களில், பகவானும் அப்படிச் சென்று அவர்களுக்கு ஆசி வழங்குவார்.
ஒருநாள்... நுங்கம்பாக்கம் பகுதியில் வீதிவலம் வந்து, தரிசனம் கொடுத்து கொண்டிருந்தார் மகாபெரியவர். அப்போது அங்கே நின்றிருந்த பக்தர்கள் பலரும் ‘சுவாமி, எங்கள் வீட்டுக்கு வரணும்” என்று நமஸ்கரித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி, சில வீடுகளுக்குச் சென்று அவர்களை ஆசீர்வதித்து விட்டு வந்து கொண்டிருந்தார் காஞ்சி மகான்.
இதையெல்லாம் பத்துவயதுச் சிறுவன் ஒருவன், வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டே இருந்தான். சிலர் வந்து பூரணகும்ப மரியாதை செய்வதையும் அவர்களின் வீட்டுக்கு சுவாமியை அழைப்பதும் அதையடுத்து அந்த வீட்டுக்குச் சென்று விட்டு, சுவாமிகள் வருவதையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன்... ஒருகட்டத்தில் விறுவிறுவென மகாபெரியவருக்கு அருகில் வந்து நின்றான்.
எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனுடைய டிராயர் கிழிந்திருந்தது. சட்டையில் இரண்டுமூன்று பட்டன்களும் இல்லை. அந்த மகான், சிறுவனையே உற்றுப் பார்த்தார். இவனும் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒருகட்டத்தில்... மகாபெரியவர் அவனைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்துக்கொண்டே ‘என்ன’ என்பது போல் சைகையிலேயே கேட்டார்.
அதுவரை ஏதோ தயக்கத்தில் இருந்திருப்பான் போல. சட்டென்று அவரை விழுந்து நமஸ்கரித்தான். “சார்.. எங்க வீட்டுக்கு வாங்க சார்” என்றான்.
முதலில் அவன் சொன்னது பலருக்கும் காதில் விழவில்லை. அடுத்தடுத்து பலரும் வந்து நமஸ்கரித்து, ஆசி வாங்கிச் சென்று கொண்டிருக்க, சுற்றி நின்றவர்கள் அந்தச் சிறுவனை மகாபெரியவருக்குத் தெரியாமல் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
ம்ஹூம்... அந்தப் பையன் நகரவே இல்லை.
‘’சார்... எங்க வீட்டுக்கும் வாங்க சார்’’ - திரும்பவும் அழைத்தான்.
இந்த முறை, பகவானை, காஞ்சி மகா சுவாமிகளை அவன் ‘சார்’ போட்டு அழைத்தது கண்டு, அங்கிருந்தவர்கள் களுக்கென்று சிரித்துவிட்டார்கள். எல்லோரும் வேடிக்கையாகப் பார்த்தார்கள். அதேசமயம் சிலர் அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.
அவன் எதுபற்றியும் கவலைப்படவில்லை. யார் குறித்தும் பயம் கொள்ளவில்லை. இன்னும் முன்னேறினான். எதிரில் நெருங்கி வந்தவன், ‘சார்... எங்க வீட்டுக்கு வாங்க சார். வரமாட்டீங்களா சார்’ என்று காஞ்சி மகானைப் பார்த்துக் கேட்டான்.
அங்கே எல்லோரும் மெளனமானார்கள். காஞ்சி மகான் அந்தச் சிறுவனை மீண்டும் உற்று நோக்கினார். ‘’சார் வீடு எங்கே இருக்குன்னு விசாரிச்சுண்டு... அந்தப் பக்கமா போ...” என்று உத்தரவிட்டார்.
அவ்வளவுதான். அந்தப் பையனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ’இந்தப் பக்கமா வாங்க சார்...” என்று சொல்லியபடி, முன்னே வழிகாட்டிக் கொண்டே ஓடினான். வாசலில் நின்றான். ‘இதான் சார் வீடு” என்றான். விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்தான்.
‘அம்மா... சார் வந்திருக்காரு பாரும்மா’ என்றான் மூச்சிரைக்க!
அவனுடைய அம்மா குழப்பத்துடன் வாசலுக்கு வந்தாள். மகாபெரியவரைப் பார்த்ததும் நடுநடுங்கிப் போனாள். தடாலென்று விழுந்து நமஸ்கரித்தாள். அந்தப் பையனும் நமஸ்கரித்தான்.
‘ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்றான் சிரித்துக் கொண்டே! அவனை அந்த ஞானி புன்முறுவலுடன் ஆசீர்வதித்தார்.
காஞ்சி மகான் எனும் கருணைக் கடல் இப்படித்தான். சிறியவர் பெரியவர் பேதம் பார்க்காது, வசதியானவர், வசதியற்றவர் எனும் பாரபட்சமெல்லாம் அவருக்கு இல்லை.
காஞ்சி மகாபெரியவரின் ஆராதனை நன்னாள் நாளைய தினம் (14.12.17). நாளை குருவாரம் வியாழக்கிழமையும் இணைந்து கொள்ள, பொருத்தமான நன்னாளாக அமைந்திருக்கிறது.
மகாபெரியவரை மனதாரத் தொழுவோம்.
அவரை ஆத்மார்த்தமாக ஸேவிப்போம்.
காஞ்சி மகான் திருவடி சரணம்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago