நம் சந்தோஷம்தான், நம்மைப் பெற்றவர்களுக்குக் குதூகலம். நாம் ஆனந்தப்பட்டால், பொறாமைப்படுவதற்கும் அந்த மகிழ்ச்சியைக் குலைப்பதற்கும் இங்கே மனிதர்கள் உண்டு. கிட்டத்தட்ட, மனித சுபாவங்கள் என்பதே இப்படியாகிப் போன காலமிது. வெற்றியை தன்னுடைய உழைப்பிலிருந்தும் நேர்மையிலிருந்தும் பெறாமல், அடுத்தவர் தோல்வியே தன் வெற்றி என்று, வெற்றிக்கான தவறான சூத்திரங்களை வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் பலரும்! ஆனால் இந்த உலகில் நம் சந்தோஷத்தை, வளர்ச்சியை, நிம்மதியை, வெற்றியைப் பார்த்து குதூகலிக்கிற, கொண்டாடுகிறவர்கள் நம்முடைய பெற்றோர்தான்!
அதேபோல், நமக்கு ஏதேனும் சின்ன வலியோ வேதனையோ என்றால் துடித்துப்போய்விடுவார்கள். ‘ஐயோ... எம்புள்ள கஷ்டப்படுறானே...’ என்று கலங்கிவிடுவார்கள். எங்கே இருந்தாலும் ஓடிவந்து நம்மருகில் வந்துவிடுவார்கள். நம்மைத் தேற்றுவதிலும் அதில் இருந்து மீட்டெடுப்பதிலும் துணையாக இருப்பார்கள்.
பகவான் சாயிபாபாவும் அப்படித்தான். அப்பாவுக்கு அப்பாவாய், அம்மாவுக்கு அம்மாவாய் இருந்து நம்மை வழிநடத்தி அருளும் ஒப்பற்ற மகான். கண்கண்ட தெய்வமாக இருந்து, நமக்கு அருள்பவர். நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். நாம் துடிப்பதைப் பார்த்துக் கொண்டு வெறுமனே இருந்துவிடமாட்டார்.
பகவான் சாயிபாபா, நம் தந்தைக்கு நிகரானவர். சிக்கலும் குழப்பமுமாக நாம் இருக்கும் வேளையில், தந்தையாகவே வந்து, நம் சிக்கல்களையும் குழப்பங்களையும் களைந்தெடுப்பவர் அவர்.
அந்த ஷீர்டி நாதன், நம் அம்மாவுக்கு இணையானவர். நம் கண்ணீரைத் துடைத்தெடுக்கும் முதல் கரம் அவருடையதாகத்தான் இருக்கும். அந்த மகான் வழங்கும் ஆறுதல், நம்மைத் தேற்றிவிடும். தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாதையைக் காட்டி உயர்த்திவிடும். அதுதான்... பாபாவின் பெருங்கருணை.
‘சாய்ராம் என்று நீங்கள் கூப்பிடுகிற போதெல்லாம் நான் உங்களுக்குப் பக்கத்தில் வந்துவிடுகிறேன். உங்களுக்குப் பக்கத்திலேயே இருந்து உங்களை வழிநடத்துவேன்’ என்று பகவான் சாயிநாதன் அருளியிருக்கிறார். இது சத்தியவாக்கு.
இனிய அன்பர்களே... அன்பு நண்பர்களே! கஷ்டமும் நஷ்டமும் யாருக்குத்தான் இல்லை. வலியும் வேதனையும் இல்லாத வாழ்க்கை, எவர்தான் வாழ்கிறார். உங்களின் கஷ்டமும் நஷ்டமும் தீரவும், வலியும் வேதனையும் போகவும்... இதோ... இன்றைய வியாழக்கிழமையில்... பூஜையறையில் அமர்ந்து, ஐந்து நிமிடம் கண்கள் மூடி, ‘சாய்ராம்... சாய்ராம்... சாய்ராம்...’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். முடிந்தவரை சொல்லிக் கொண்டே இருங்கள். அவரை, சாயிபாபாவை கூப்பிட்டபடியே இருங்கள். ஏதேனும் ஓர் ரூபத்தில், எவருடைய வடிவமாகவோ உங்களுக்கு அருகில் வந்தேதீருவார் சாயிபாபா. வந்து, உங்கள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தே தீருவார் அந்த பகவான்.
இப்படித்தான்... சாயிபாபாவை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு தருணங்களிலும் ‘சாய்ராம்... சாய்ராம்...’ என்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூப்பிடுகிறார்கள். தங்கள் மனதில் கொட்டிக் கிடக்கிற மொத்தவலிகளையும் அவரிடம் கொட்டுகிறார்கள். மனதாலும் உடலாலும் படுகிற சிரமங்களில் இருந்து நம்மைக் காத்தருள்கிறார் ஷீர்டி நாயகன்.
துனி விரத பூஜை என்றொரு வழிபாடு, மிக முக்கியமானது. நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களால் அவதிப்படுபவர்கள் அல்லது அப்படி அல்லல்படுபவர்களுக்காகச் செய்யப்படும் பிரார்த்தனை இது. உடலாலும் மனதாலும் நொந்துபோனவர்களுக்காக, அவர்களின் நலனுக்காகச் செய்யப்படும் பூஜை இது.
சாயிபாபா தன் கையில் வைத்திருக்கும் ‘சட்கா’ எனும் குச்சியைக் கொண்டு உருவாக்கிய துனி நெருப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அது அணையா நெருப்பு. நம் அத்தனை ஏமாற்றங்களையும் அவமானங்களையும் பொசுக்கிவிடுகிற துனி நெருப்பு.
வீட்டுப் பூஜையறையில், பலகை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பலகையில் கோலமிடுங்கள். அந்தக் கோலத்தின் மீது மஞ்சள் துணியொன்றை விரித்துக் கொள்ளுங்கள். மஞ்சள் துணியின் மீது, சாயிபாபாவின் படத்தையோ சிலையையோ வைத்துக் கொள்ளுங்கள்.
ஊதுபத்தி ஏற்றுங்கள். பாபாவுக்கு பூக்கள் சூட்டுங்கள். ஒரு மட்டைத் தேங்காயை பாபாவின் முன்னே வைத்துவிடுங்கள். நம்முடைய கோரிக்கைகளை ஓர் கடிதம் போல் பாபாவுக்கு எழுதுங்கள். அப்படி எழுதியக் கடிதத்தையும் மட்டைத் தேங்காய்க்கு அருகில் வையுங்கள்.
அவல், சர்க்கரை, தேங்காய்த்துருவல் மூன்றையும் கலந்து நைவேத்தியமாக பாபாவுக்கு வழங்குங்கள். இதை... இந்தப் பிரசாதத்தை ‘புக்கே’ என்பார்கள்.
ஒன்பது வாரங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்யுங்கள். மனமுருகி இந்த வழிபாட்டில் ஈடுபடுங்கள். இந்த விரதம் மேற்கொள்கிற ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவைத் தவிர்ப்பது நலமும் வளமும் தரும். முதல்வார வழிபாட்டின் போது, அந்த மட்டைத் தேங்காயை ‘துனி’யில் போட்டுவிடுங்கள். ஒன்பதாவது வாரத்தில் மஞ்சள் நிறம் கொண்ட இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து, அதைப் பக்தர்களுக்கு, அக்கம்பக்கத்தாருக்கு என விநியோகம் செய்யுங்கள். அவ்வளவுதான்... உங்கள் பிரச்சினைகள் யாவும் தவிடுபொடியாகும் என்பது நிச்சயம். உங்கள் துக்கமும் வேதனையும் காணாமல் போகும் என்பது சத்தியம்.
உங்கள் வீட்டுக்கு அருகில் சாயிபாபா கோயில் இருக்கிறதா. அங்கே துனி நெருப்பு எனப்படும் அணையா நெருப்பு இருக்கும். ஏதேனும் ஒருநாளில்... 11 மட்டைத் தேங்காயை எடுத்துக் கொண்டு பாபா கோயிலுக்குச் செல்லுங்கள்.
பாபாவிடம் மனமொன்றி உங்கள் குறைகளைச் சொல்லுங்கள். உங்கள் வாழ்வுக்குத் தடையாக இருப்பவற்றைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள். பத்துத் தேங்காய்களை, துனி நெருப்பு என்று சொல்லப்படும் அணையா நெருப்பில் இடுங்கள். மீதமுள்ள ஒரு தேங்காயை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வாருங்கள்.
அந்தத் தேங்காயைப் பயன்படுத்தி, ஏதேனும் ஒரு இனிப்பைத் தயார் செய்து பாபாவுக்கு படைத்து வேண்டுங்கள். கண்ணீர் விட்டு கவலைகளையெல்லாம் சொல்லுங்கள். அந்த ஞானத்தகப்பன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து உணர்ந்து சொல்லுங்கள்.
பாபாவுக்கு படைத்த இனிப்புப் பிரசாதத்தை நீங்களும் சாப்பிட்டு, பிறருக்கும் வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையே இனிக்கச் செய்வார் சாயிபாபா.
அப்படி... ஷீர்டிக்கு இளைஞனாக வந்த சாயிபாபாவை எல்லோரும் தேடினார்கள். அவர் புறப்பட்டு பக்கத்து கிராமத்துக்குச் சென்றுவிட்டார்.
அடுத்து ஷீர்டியே பாபாவால் மணத்தது. இன்றைக்கும் நறுமணம் வீசி, ஊரையே செழிக்கச் செய்து கொண்டிருக்கிறது. இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஷீர்டி மக்கள்!
உங்கள் பிரார்த்தனையை சாயிபூஜை செய்து, அந்த மகானிடம் தெரிவியுங்கள். அவரை மனதில் நினைத்துக் கொண்டு, ஒருபத்துப் பேருக்கேனும் இனிப்பை வழங்குங்கள். முடியவில்லையா... ஐம்பது பைசா சாக்லெட்டை வாங்கிக் கொடுத்து, பாபாவை நினைத்துக் கொள்ளுங்கள். ‘இதோ... இந்த சாக்லெட்டைத் தருகிற எனக்கும் இதைப் பெறுபவர்களுக்கும் எல்லா நல்லதுகளையும் தருவாய் பாபா’ என்று பிரார்த்தனை செய்தபடியே, வழங்குங்கள்.
அந்த சாக்லெட்டிலும் இருந்து அருள்கிறார் சாயிபாபா!
- அருள்வார்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago